சிறப்புக் கட்டுரைகள்

வானொலியைக் கண்டுபிடித்த மேதை...! + "||" + The birthday of Marconi was found on the radio (April 25).

வானொலியைக் கண்டுபிடித்த மேதை...!

வானொலியைக் கண்டுபிடித்த மேதை...!
நாளை (ஏப்ரல் 25-ந் தேதி) வானொலியை கண்டு பிடித்த மார்க்கோனி பிறந்த தினம்.
வானொலியுடன் கூடிய செல்பேசிகள் இன்று சர்வசாதாரணமாக நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. வானொலியுடன் இயங்கும் கார்களையும் நாம் பார்த்து வருகிறோம். வானொலியை உருவாக்கிய மார்க்கோனி, இத்தாலி நாட்டு போலாக்னா என்ற ஊரில், 1874-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இத்தாலியத் தந்தை குசப்பி மார்க்கோனிக்கும், ஐரிஸ் தாய் அன்னிஜேம்சனுக்கும் 2-வது மகனாகப் பிறந்தார். பள்ளி சென்று பயிலாத அவர், வீட்டிலேயே இயற்பியல், கணிதம், வேதியியலைக் கற்றார். இளம் வயது முதலே மின்சாரம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்.

நம் உலகைச் சுற்றி மின்காந்த அலைகள் இயற்கையாகவே நிறைய உள்ளன. அதன் மூலம் ஒளியை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கடத்த முடியும் என்பதை அறிவியலாளர்கள் அறிந்தனர். சோதனைகளில் அது உறுதிப்பட்டபோது, ஒலியையும் அவ்வாறு அனுப்பலாமே என்ற முயற்சியில் அவர்கள் இறங்கினார்கள். அப்படித் தோன்றியதுதான் வானொலி அலை. பல இடங்களில், பல கட்ட ஆராய்ச்சிகளை மார்க்கோனி செய்தார். அவருக்கு முன் அந்தத்துறையில் ஹென்ரிச் ஹெர்ட்ஜ் போன்ற பலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர், பிளவுபடாத இந்தியாவைச் சார்ந்த சர். ஜகதீஷ் சந்தரபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் ஆய்வுகளைத் துணைகொண்டது மார்க்கோனிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

தம் விடாமுயற்சியால் மார்க்கோனி 1895-ல் இத்தாலியில் முதல் வானொலி சமிக்ஞையை இயக்கினார். பிறகு 1901-ல் காரன்வாலிலிருந்து கனடாவில் உள்ள நியூபவுண்டுலாந்துக்குச் சுமார் 2200 மைல் (3,500 கி.மீ) தூரத்திற்கு ஒலி சமிக்ஞையை அனுப்பி வெற்றிகண்டார். அடுத்த ஆண்டே கனடாவிலிருந்து அயர்லாந்திற்குக் கம்பியில்லா வானொலித் தொடர்பை ஏற்படுத்தி வெற்றிபெற்றார். 1901 செப்டம்பரில் தன் வானொலிக் கண்டுபிடிப்பிற்கான ‘பேட்டன்ட்’ பதிவிற்கு விண்ணப்பித்தார்.

வானொலியைக் கண்டுபிடித்ததற்காக மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. ராடார் கண்டுபிடித்தவரும் அவரே என்பது கூடுதல் செய்தி. தொடக்கத்தில், தாம் பிறந்த இத்தாலியிலும், பிற நாட்டிலும் அவருக்கு அவ்வளவாகப் பெயர் கிடைக்கவில்லை. 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம் நடந்தபோதுதான் அவரது பெயர் உலகம் முழுக்கவும் தெரியவந்தது. அந்தக் கப்பலில் இருந்த வானொலி ஆபரேடர்கள் அனுப்பிய செய்திதான், பக்கத்திலிருந்த கப்பலை மீட்புப் பணிக்கு அழைத்து, உயிருடன் இருந்தவர்களைக் காப்பாற்றியது. அந்த ஆபரேடர்கள் மார்க்கோனியின் ஆட்கள். வானொலியின் புகழ் அப்போதுதான் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அந்நிகழ்வை அடிப்படையாக வைத்து அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ‘டைட்டானிக்’ திரைப்படம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதெல்லாம் பண்பலை, மத்திய அலை, சிற்றலை என்ற அலைவரிசை ஒலிபரப்புகளைப் பற்றி அனைவரும் அறிவர். அலைகளில் நெட்டலை என்ற ஒன்றும் இருந்திருக்க வேண்டும்தானே. அந்த நெட்டலை தொழில்நுட்பத்தில் இயங்குவதுதான் ‘ஹாம் ரேடியோ’. வானொலி ஒலிபரப்புகளில் அண்மைக்காலமாகப் புதியதொரு ஒலிபரப்புமுறை புகுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பெயர் ‘டிஆர்எம்’ (டிஜிட்டல் ரேடியோ மோண்டேல்) என்பது. நம் நாட்டு வானொலி நிலையங்கள் சில ‘டிஆர்எம்’ முறைக்கு மாறத்தொடங்கிவிட்டன. வானொலியை நாம் பயன்படுத்திய முந்தைய நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாதவை.

விடுதலைக்குப் பிறகு அண்மைக்காலங்களில் வானொலியில் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தரையில் வானொலி நிலையங்கள் வழக்கமாக வீடுகளுக்கு அனுப்பும் ஒலிபரப்புகளில் புதுமையான ஒருமாற்றத்தைச் சோதனை முறையில் சென்னை வானொலி செய்தது. செல்போன் வர்த்தக முறையில் மக்களுக்கு முதல்முறையாக கிடைத்தது 1984-ல் தான். ஆனால் அதற்கு ஓர் ஆண்டு முன்னதாகவே சென்னை அகில இந்திய வானொலியில் அறிவியல் அலுவலராகப் பணியாற்றிய டாக்டர் ஆர்.ஸ்ரீதர் ஓடும் ரெயில், ஊரும் பஸ், பறக்கும் விமானம், நகரும் கப்பல் ஆகியவற்றிற்கு ஒலிபரப்பைக் கொண்டு சென்று புதுமை செய்தார். ஜெனிபர் அருள், சபரிநாதன், மாலினி சேஷாத்ரி, ரேகா செட்டி ஆகிய தொகுப்பாளர்களை, முன்குறித்த வாகனங்களில் அமரவைத்து, நிலைய அரங்கில் இருந்த அல்லாடி ராமகிருஷ்ணாவுடன் உரையாட வைத்து, ‘நகர்வு ஒலிபரப்பு’ முயற்சியில் அக்காலத்திலேயே வெற்றி பெற்றார். நிகழ்ச்சிக்கு வானொலி நிலையத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் கொடுத்தவர் எம்.ராதாகிருஷ்ணன். காவல்துறை வயர்லஸ் மூலம் இந்தச் சாதனை நடந்தது.

விடுதலை பெற்ற நாடு முன்னேற வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒருமைப்பாட்டு உணர்வு வேண்டும். அதற்காகவும் சென்னை வானொலி ஒரு புது முயற்சியில் ஈடுபட்டது. இன்சாட் 1பி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட சமயம் அது. நாட்டின் வடக்குமுனை ‘லே’, கிழக்குமுனை போர்ட்பிளேர், வடகிழக்கில் ஷில்லாங், தென்பகுதியில் லட்சத்தீவு ஆகிய இடங்களைக் கலைநிகழ்ச்சி நடத்துவதன் மூலம் தொடர்புபடுத்தும் முயற்சியில் இறங்கியது. அந்நாளைய ‘கூட்டமுதப் பாடற்குழுத்’தலைவர் எம்.பி. சீனிவாசனின் துணைகொண்டு, முன்கூட்டியே பயிற்சி கொடுத்து, ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற பாரதியின் பாடல் வரிகளை அந்தந்த நகர வானொலி நிலையத்தில் குழுமியிருந்த குழந்தைகளைக் கொண்டு, ஒவ்வொரு வரியாகப் பாடச்செய்து வெற்றிகண்டது. ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற முதல்வரியை ‘லே’ குழந்தைகளும், ‘ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ வரியை அந்தமான் குழந்தைகளும், ‘கூடி விளையாடு பாப்பா’வை ஷில்லாங் குழந்தைகளும், ‘ஒரு குழந்தையை வையாதே பாப்பா’வை லட்சத்தீவு குழந்தைகளும் பாடி அசத்தினர். அடுத்த சுற்றில் அனைவரும் ஒன்று கூடிப்பாடல் முழுவதையும் பாடியதை நம் வானொலி நிலையங்கள் மூலம் அக்காலத்திலேயே நாடே கேட்டு மூக்கின் மேல் கைவைத்து ஆச்சரியப்பட்டது.

நவீன வேளாண்மை, தொலை மருத்துவம், தொலைக்கல்வி ஒலிபரப்பு துறைகளில் நிகழ்ந்தவற்றை விரித்தால் பெருகும். அவற்றிற்கெல்லாம் வழிவகுத்த மாபெரும் சாதனமான வானொலியைக் கண்டுபிடித்த வல்லாளர் மார்க்கோனி, 1937 ஜூலை மாதம் 20-ந் தேதி ரோம் நகரில், தனது 63-வது வயதில் இறந்தபோது, பிபிசியின் ஒலிபரப்புக் கோபுரங்களும், பிறவும் அடுத்தநாள் மாலை 6 மணிக்குத் தம் ஒலிபரப்புக்களை நிறுத்தி அஞ்சலி செலுத்திக்கொண்டன.

முனைவர் வெ.நல்லதம்பி
தலைவர், இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம், சென்னை.