திருவாசகத்துக்கு உருகிய ஆங்கிலேயர்...!


திருவாசகத்துக்கு உருகிய ஆங்கிலேயர்...!
x
தினத்தந்தி 24 April 2019 4:47 AM GMT (Updated: 24 April 2019 4:47 AM GMT)

இன்று (ஏப்ரல் 24-ந் தேதி) ஜி.யு.போப் பிறந்தநாள்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியாவுக்கு சமயப்பணி ஆற்ற வந்தனர். கிறிஸ்தவ சமயத்தை பரப்ப வந்த ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியைக் கற்று பேசவும், எழுதவும் செய்தனர். இவர்களுள் ஜி.யு.போப் குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1820-ல் ஏப்ரல் 24-ந் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தனது இளமைப்பருவத்திலேயே தமிழகம் வந்தார். ராமானுஜ கவிராயர், ஆரியங்காவு பிள்ளை ஆகியோரிடம் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் தமிழ் இலக்கண நூல்களை கற்றார். அவைகளின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டார்.

இத்தாலி மொழியில் வீரமாமுனிவர் மொழி பெயர்த்துள்ள திருக்குறள் நூலைப் படித்தபோது அவற்றிலுள்ள நீதிக் கருத்துகளைப் பெரிதும் விரும்பினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ‘தூய திருக்குறள்’ என்ற பெயரில் வெளியிட்டார். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்த பெருமை போப்புக்கே உண்டு.

“வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்ட பொற்பதுமை” என்று இவரது மொழி பெயர்ப்பு நூலை தமிழ்த்தென்றல் திரு.வி.க., ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களும் பாராட்டினர். திருக்குறள் மட்டுமல்லாமல் நாலடியாரையும் முழுமையாக மொழி பெயர்த்து வெளியிட்டார். ஏலாதி, சீவகசிந்தாமணி, நீதிநெறி விளக்கம், திரிகடுகம், திருப்பாசுரத் தொகை ஆகிய நூல்களின் சில பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒவ்வொரு நூலின் முன்னுரையில் நூலின் ஆசிரியர் பற்றியும், நூலின் சிறப்புகள் பற்றியும் மேற்கோள்காட்டி நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளமை இவரது விரிந்த தெளிவான தமிழ்ப்புலமையைக் காட்டுகிறது.

ஜி.யு. போப் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். மொழியாலும், இனத்தாலும் வேறுபட்டவர். ஆயினும் திருவாசகத்தைப் படித்து அதில் பெரிதும் ஈடுபட்டு திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் சிறப்பான முறையில் பக்திச் சுவை குறையாமல் வெளியிட்டுள்ளார். இது அவரது சமயப் பொதுமையைக் காட்டுகிறது. திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத்தின் சிறப்புகள், சைவ சித்தாந்தம் பற்றிய சிறப்பான கருத்துகள் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார்.

“எலும்பையும் உருக்கக்கூடிய பக்திப்பரவசம்மிக்க பாடல்கள் திருவாசகப் பாடல்கள்” என்று ஜி.யு.போப் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் உள்ள ராயல் ரசியாட்டிக் கழகம் தங்கப்பதக்கம் அளித்து போப்பை பாராட்டியது. ஆங்கிலத்தில் உள்ள தத்துவம், தர்க்கம், வரலாறு பற்றிய பல நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

இலக்கண நூல்கள் சிலவும் எழுதினார். எழுத்து, சொல், கொடுந்தமிழ், செந்தமிழ் பற்றியும் கூறுகிறார். தமிழ் செம்மொழி என்பதைப் பல இடங்களில் வற்புறுத்துகிறார். பேச்சிலும் எழுத்திலும் எளிமையும் இனிமையும் வேண்டும். பிறமொழிச் சொற்களைப் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்பது இவரது கருத்தாகும்.

சாயர்புரம், பெங்களூரு, உதகமண்டலம் (ஊட்டி) ஆகிய ஊர்களில் பணி செய்தாலும் இவர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் செய்த பணிகள் சிறப்பானவை. மதபோதனைக்காகப் பள்ளி ஒன்றை நிறுவினார். ஆனால் இதில் தத்துவம், வானநூல், கணிதம், வரலாறு, அறிவியல் போன்றவை கற்பிக்கப்பட்டன. மதக்கல்வி மட்டுமல்லாமல் யாவருக்குமான பொதுக்கல்வியும் கற்பிக்கப்பட்டது. கல்லூரி ஒன்றும் தொடக்கத்தில் நிறுவினார்.

இக்கட்டிடம் சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளியில் இன்றும் உள்ளது. பெண் கல்விக்காக மேரி மகளிர் பள்ளியை நிறுவினார். ஆலயமும் இவரால் அமைக்கப்பட்டது. கல்வி ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது போப்பின் கோட்பாடு. தான் நிறுவிய ஆண்கள் பள்ளியின் சின்னமாக ஆலமரத்தைக் கொண்டார். “முதல்வனாயிரு முதல்வனோடிரு” என்பது பள்ளியின் கொள்கையை குறிப்பிட்டார். தமிழகத்தில் பணியாற்றிய பின்னர் இங்கிலாந்து சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் தெலுங்கு, தத்துவம் கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.

தமிழ்ப் பற்றுமிக்கவர் அறிஞர் ஜி.யு.போப், நான் இறந்த பிறகு எனது கல்லறையில் “போப் ஒரு தமிழ் மாணவன்” என்று பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இதை நல்லசாமி என்னும் நண்பருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். 1908 பிப்ரவரி 12-ந் தேதி தமிழ்த்தொண்டர் ஜி.யு.போப் மறைந்தார். லண்டனில் உள்ள அவர் கல்லறையில் தென்னிந்தியாவில் பணிபுரிந்த ஜி.யு.போப் இங்கே உறங்குகிறார். “பிறப்பு: 1820 ஏப்ரல் 24. இறப்பு: 1908 பிப்ரவரி 12 என்றே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தாலும் சாயர்புரத்தில் அவர் பெயரால் மேல்நிலைப்பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி அவர் புகழைப் பறைசாற்றுகின்றன. 2-வது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது சென்னையில் ஜி.யு.போப்புக்கு அரசு சார்பில் சிலை வைக்கப்பட்டது.

பேராசிரியர் அ.பாஸ்கரபால்பாண்டியன், திருச்செந்தூர்.


Next Story