லடாக்கில் ஒட்டக சவாரி


லடாக்கில் ஒட்டக சவாரி
x

கொளுத்தும் வெயிலுக்கு நிவாரணம் தேடி சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். கொளுத்தும் வெயிலுக்கு நிவாரணம் தேடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது சூழல் குளுமையானதாக இருந்தால் மட்டுமே சுற்றுப்பயணம் இனிமையானதாக, பசுமையானதாக மனதில் பதியும்.

இந்தக் கோடை வெயிலில் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டக சவாரி போனால், வீணாக உடல் உபாதைதான் ஏற்படும். அதற்குப் பதிலாக குளிர்ச்சி நிறைந்த காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் ஒட்டக சவாரி செய்தால் அந்தப் பயணம் இனிமையானதாகவும், என்றென்றும் நினைவை விட்டு நீங்காமலும் இருக்கும்.

ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை ஒட்டக சவாரிக்கென தனி திட்டத்தையே வகுத்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேலே 9 ஆயிரம் அடியிலிருந்து 25,170 அடி உயரம் வரையிலான இந்தப் பகுதியில் பயணம் மேற்கொண்டால் அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

உயர்ந்த பாறைகள் அதில் உருகும் ஐஸ் கட்டிகள், ரம்மியமான சூழல், இதமான காற்று இவற்றோடு ஒட்டகத்தின் மீதான சவாரி மிகவும் இனிமையானதாகவே இருக்கும். இந்தப் பயணத்தின்போதே ஆங்காங்கு தென்படும் கிராமங்கள் அதில் வசிக்கும் அப்பகுதி மக்கள் ஆகியோரைக் கடந்து செல்லும் அனுபவமே அலாதியானது. சாகசப் பயணம் மேற்கொள்வோருக்கு இது மிகவும் நிறைவானதாக இருக்கும்.

லடாக் பிராந்தியத்தில் சுற்றுலா பகுதிகள் பல இருந்தபோதிலும் உள்நாட்டு மக்களையும், வெளிநாட்டினரையும் அதிகம் கவர்வது இந்த ஒட்டக சவாரிதான். பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகம் ஐஸ் நிறைந்த பகுதியிலும் அசைந்தாடியபடி செல்லும் அழகும், அதில் பயணிக்கும் அனுபவத்தையும் விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

இங்குள்ள ஹூண்டர் கிராமத்தில் நூப்ரா பள்ளத்தாக்கிலிருந்து திஸ்கிட் வரையான பயணம் சிறப்பானது. ஒட்டக பயணம் பனாமிக் கிராமத்தில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இங்கு ஒட்டக சவாரி மேற்கொள்வது சிறந்தது. இங்குள்ள மலைகளில் பயணம் செய்வதும் சாகசம் நிறைந்த அனுபவமாக இருக்கும். ஆப்ரிகாட், ஆப்பிள், ஆரஞ்சு பெர்ரி மரங்களின் வழியாக பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவமே தனி. பனி சூழ்ந்த மலை, தரை முழுவதும் மணல் வெளி என மிகவும் ரம்மியமாக இரண்டு மணி நேரம் மேற்கொள்ளும் இந்த ஒட்டக சவாரி என்றென்றும் உங்கள் மனதில் பசுமையாக பதிந்துவிடும்.

மலையேற்றம், மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் (மவுன்டெய்ன் பைக்கிங்), படகு சவாரி, எருது சவாரி போன்றவையும் மேற்கொள்ள முடியும். இங்குள்ள எருது நீண்ட உரோமங்களுடன் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.

இந்த வகை எருதுகள் இமயமலை பிராந்தியத்தில் மட்டுமே உள்ளவையாகும். நூப்ரா பள்ளத்தாக்கு போன்றே மர்கா பள்ளத்தாக்கு, உறைந்த ஆற்றில் பயணம், ஸ்பிடுக் டிரெக், ஸன்ஸ்கார் டிரெக் போன்ற சாகச பயணங்களும் குறிப்பிடத்தக்கவை. லடாக் பயண அனுபவம் நிச்சயம் மனதுக்கு மகிழ்ச்சியானதாகவே அமையும்.


Next Story