சிறப்புக் கட்டுரைகள்

ஓய்வில்லாமல் பறக்கும் பறவை + "||" + They live in pairs all through life

ஓய்வில்லாமல் பறக்கும் பறவை

ஓய்வில்லாமல் பறக்கும் பறவை
வாழ்நாள் முழுவதும் ஜோடியாகவே வாழ்கின்றன
ஆழ்கடலில் பயணம் செய்யும்போது கப்பலில் வந்து அமர்ந்து மனிதர்களை பரவசப்படுத்தும் பறவை இனம்தான் ஆல்பட்ரோஸ். கடல் மீன்களையும் சிறிய உயிரினங்களையும் விரும்பி சாப்பிடுபவை .

பெருங்கடல்களுக்கு இடையே உள்ள சிறுசிறு தீவுகளில் கூட்டம் கூட்டமாக வசிக்கும். ஒவ்வொரு ஆல்பட்ரோஸ் பறவை தனக்கென ஒரு துணையை தேர்வு செய்து, வாழ்நாள் முழுவதும் ஜோடியாகவே வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் ஒரு பெண் பறவை ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. அதனால் இதன் இனப்பெருக்கம் மிக மெதுவாக நடைபெறுகிறது.

தென் அண்டார்டிக் பெருங்கடலிலும், வட பசிபிக் பெருங்கடலிலும் இந்த பறவைகள் பெருமளவு காணப்படுகின்றன. இந்த கடற்பறவை பெரும்பாலும் வெண்மை நிற கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கைகளும் கொண்டிருக்கும். இதன் கால்கள் சதை இணைப்பு கொண்டவையாக இருக்கிறது. பூமியில் வாழும் பறவைகளில் மிகப்பெரிய இறக்கைகளை கொண்ட பறவையினம் இதுதான். இதன் ஒரு பக்க இறக்கை மட்டும் அதிக நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த பறவையினத்தில் மொத்தம் 21 வகையான உள் இனங்கள் உள்ளன. இவற்றில் 19 இனங்கள் அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் இருக்கிறது.

பூமியின் தெற்கு பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் ஆல்பட்ரோஸ் அதிக அளவில் வாழ்கின்றன. முட்டையைவிட்டு குஞ்சு வெளிவந்து, பறக்க தொடங்கி விட்டால், அதன்பின் இந்த கடற்பறவைகள் தரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஓய்வு இல்லாமல் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறக்கும் தன்மை கொண்டவை. பறந்து கொண்டே கடல் மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். பறந்து கொண்டே தூங்கும். இதன் நீளமான இருபக்க இறக்கைகளை விரித்து பறந்தால் நாள்கணக்கில் இறக்கைகளை அசைக்காமல் விமானம் போல் பறந்து கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு இந்த பறவை குறைந்தபட்சம் 640 கி.மீ. தொலைவு பறக்கிறது.

இந்த பறவை கடற்பயணத்தின் வழிகாட்டி எனவும் சிறப்பு பெற்றுள்ளது. இதனை துன்புறுத்தினாலோ கொன்றுவிட்டாலோ கப்பல் கடலில் மூழ்கிவிடும் என்ற நம்பிக்கை கடற்பயணம் மேற்கொள்வோரிடம் இருக்கிறது. அப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் இந்த பறவைகள் மனிதனின் மாமிச வேட்டையில் சிக்காமல் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.