எழுத்தால் இதயம் கவர்ந்த தமிழறிஞர் மு.வரதராசனார்


எழுத்தால் இதயம் கவர்ந்த தமிழறிஞர் மு.வரதராசனார்
x
தினத்தந்தி 25 April 2019 5:08 AM GMT (Updated: 25 April 2019 5:08 AM GMT)

இன்று (ஏப்ரல் 25-ந் தேதி) தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்தநாள்.

மு.வ. என்னும் இரண்டெழுத்துகளாலே உலகெங்கும் புகழ்பெற்ற பேராசிரியர், தமிழறிஞர் மு.வரதராசனார். முயற்சியால் வாழ்வில் பல உயர்வுகளைப் பெறலாம் என்பதற்கு அவரது வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாகும். வட ஆற்காடு மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வேலம் என்னும் சிற்றூரில் முனுசாமி-அம்மாக்கண்ணு தம்பதியருக்கு 1912 ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மகனாகப் பிறந்த மு.வ.வுக்கு பெற்றோர் முதலில் திருவேங்கடம் என்று பெயரிட்டார்கள். ஆனால், அவருடைய தாத்தாவின் பெயராகிய ‘வரதராசன்’ என்னும் பெயரே பின்னர் நிலைத்துவிட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற பின் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தர் பணி கிடைத்து வேலைக்குச் சென்றார். ஆஸ்துமா நோய் அவரைத் துன்புறுத்தவே வேலையை விட்டு வீட்டுக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்றார். அதற்குப் பின் முருகையா முதலியார் என்பவரிடம் தனிப்பயிற்சி பெற்று வித்வான் தேர்வு எழுதினார். சென்னை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று அதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.

அதன்பின் திருப்பத்தூர் நகராண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணிக்குச் சென்றார். தனித்தேர்வு முறையில் பி.ஓ.எல். பட்டமும், எம்.ஏ. பட்டமும் பெற்று பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராகப் பணியேற்றார். பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கை அவருடைய வசந்த காலமாகத் திகழ்ந்தது. நிறைய நூல்கள் எழுதி அனைவரின் பாராட்டுக்கும், பெருமதிப்புக்கும் உரிய பேரறிஞராகப் புகழ்விளங்கியதும், தமிழ்நாடு போற்றும் தனிப்பெரும் இலக்கிய ஆளுமையாக மிளிர்ந்ததும் பச்சையப்பன் கல்லூரி வாழ்வின்போதுதான்.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். அனைத்திந்திய அளவில் அவர் பெற்ற பெரும்புகழ் அனைத்துலகப் புகழாக விரிவடைந்தது. 1971-ல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். தமிழ் பேராசிரியர்களிலேயே ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திடம் (அமெரிக்காவில் ஊஸ்டர் பல்கலைக்கழகம்) முது முனைவர் (டி.லிட்.) பட்டம் பெற்றவர் என்னும் சாதனையைப் படைத்தார். தாலுகா அலுவலக எழுத்தர் நிலையிலிருந்து பள்ளி ஆசிரியராக, கல்லூரிப் பேராசிரியராக, பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக, துணைவேந்தராக அவர் படிப்படியாகப் பெற்ற உயர்வுகள் உழைப்பின் உயர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் பாடமாகக் கொள்ளலாம்.

அவருடைய இலக்கியப்படைப்பின் ஆற்றலுக்கு அவர் எழுதிக்குவித்த நூல்கள் சான்றாகும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் மட்டுமே அந்தக் காலத்தில் அவருடைய நாவல்களைப் படிக்காதவர்கள் எனலாம். அவருடைய புத்தகங்களைப் படிப்பதும் மற்றவர்களைப் படிக்கத் தூண்டுவதும் விழாக்களில் பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவதும் மாணவர்களின் வாழ்வியல் நெறியாகத் திகழ்ந்தது. அவர் எழுதிய நாவல்கள் பதிமூன்று ஆகும். செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, கி.பி. 2000, பாவை, அந்த நாள், மலர்விழி, பெற்ற மனம், அல்லி, கரித்துண்டு, கயமை, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு, மண்குடிசை, வாடா மலர் என்னும் இந்த நாவல்கள் அனைத்துமே சுவை மிக்கவை.

முதன் முதலாகத் தமிழ்நாட்டு வரலாற்றில் நாவல்களைப் படைத்துப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்ற ஒரே தமிழ்ப்பேராசிரியர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. நெடுநாளாக எழுத்தாளர்கள் வேறு தமிழ்ப் பேராசிரியர்கள் வேறு என்றே இயங்கி வந்தார்கள். பொழுதுபோக்கு வாரப் பத்திரிகைகளில் எழுதப்பட்டு, பிறகு புத்தகங்களாக வெளிவந்த நாவல்களுக்கு இணையாக நேரடியாகவே புத்தகங்களாக வெளிவந்த மு.வ.வின் நாவல்கள் வாசகர்களிடம் செல்வாக்குப் பெற்றன.

அவருடைய நாவல்கள் வெறும் பொழுதுபோக்குக்காக அமையாமல் படிப்பவர்களுக்குக் கதையுடன் வாழ்வியல் நெறிகளை எடுத்துக்கூறி வழிகாட்டும் இலக்கியமாகத் திகழ்ந்தன. அவரது நாவல்களின் பாத்திரப்படைப்புகள் பலரால் விரும்பப்பட்டு தம் குடும்பங்களில் பெயர் வைக்கும் அளவு தாக்கம் செலுத்தின. அல்லி என்னும் பெண்பாத்திரம் நல்ல மருத்துவராகவும், குறிக்கோளோடு வாழவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால் பலர் தமது பெண் குழந்தைகளுக்கு அல்லி எனப் பெயர் வைத்தனர். அறவாழி என்னும் சான்றோர் பாத்திரம் சிறந்த நீதிநெறிகளைப் போற்றும் உயர்ந்த பண்பிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததால் பலர் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அறவாழி எனப் பெயர் வைத்தனர்.

இலக்கிய ஆர்வலர் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த மு.வ., தமக்கு முன்னோடியாகத் திருவள்ளுவர், திருநாவுக்கரசர் தாயுமானவர், வள்ளலார், காந்தியடிகள், காண்டேகர், பெர்னாட்ஷா, கவிஞர் தாகூர் முதலான பல சான்றோர்களைக் கொண்டார். இதன் விளைவாக அவர்கள் வழங்கிய நல்லுரைகளை அனைவரும் அறிந்து பின்பற்றும் வகையில் எளிய முறையில் தமது நூல்கள் வழியாக எடுத்துரைத்தார். குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் நிலவும் பல்வேறு சிக்கல்களை எடுத்துக்கூறி அவற்றுக்கு நல்ல தீர்வுகளை முன்மொழிவதே மு.வ.வின் எழுத்துப் பணியாக விளங்கியது.

சங்க இலக்கியம் புலவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று என்னும் மனப்பான்மையை நீக்கி மக்கள் அனைவருக்கும் உரிய இலக்கியம் என்னும் நிலையை ஏற்படுத்த அக்காலத்தில் முயன்ற தமிழறிஞர்களுள் மு.வ. குறிப்பிடத்தக்கவர். இனிமையும், எளிமையும் மிக்க தமிழ்நடையில் சங்க இலக்கியங்களை விளக்கி அவர் எழுதிய நூல்கள் அனைத்துதரப்பினராலும் விரும்பிப் படிக்கப்பட்டன. நற்றிணை விருந்து, நற்றிணைச் செல்வம், குறுந்தொகை விருந்து, குறுந்தொகைச் செல்வம், நெடுந்தொகை விருந்து, நெடுந்தொகைச் செல்வம் முதலிய பல நூல்களும் இன்றைய தலைமுறையினரும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு சுவைமிக்க நடையில் இயற்றப்பட்டுள்ளன.

வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கிக்கூறும் வகையிலும் ஆளுமைவளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகவும் அவர் தீட்டிய சொல்லோவியங்களாக அவர் படைத்த கடித வடிவிலான கட்டுரைகள் விளங்குகின்றன. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்னும் தலைப்புகளில் இவர் எழுதி வழங்கியுள்ள கடிதங்கள் படிப்பவர்களுக்குத் தன்னம்பிக்கையை வழங்கும் ஊக்கவுரைகளாகத் திகழ்கின்றன.

இவர் திருக்குறளைப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் வண்ணம் எழுதிய “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்” திரு.வி.க.வால் பெரிதும் பாராட்டப்பட்டது. “தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம்; பொறுமைக்கு உறையுள்; அமைதிக்கு நிலைக்களன்” என்று மு.வ.வையும், “இந் நூல் ஒரு நன்னூல்; புதுமைப் பொதுநூல்; உலகம் ஒரு குலமாகத் துணைசெய்யும் நூல்” என்று நூலையும் தி.ரு.வி.க. மனமாரப் பாராட்டியுள்ளார். இவரது நாவல்களுள் ‘அகல் விளக்கு’ சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சிறப்புடையது. மு.வ. திருக்குறளுக்கு எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ இதுவரை பத்து லட்சம் படிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ளது. மு.வ. எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்ட “தமிழ் இலக்கிய வரலாறு” இந்திய மொழிகளிலேயே அதிகப் பதிப்புகள் வெளியாகிய இலக்கிய வரலாற்று நூலாகப் புகழ்பெற்றுள்ளது.

சிறந்த தமிழறிஞராக, வாசகர் மனங்கவர்ந்த நாவலாசிரியராக, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும், எழுச்சியும் ஊட்டிய பேராசிரியராக மு.வ. ஆற்றிய பணிகள் அளப்பரியன. மு.வ. 10.10.1974-ல் இவ்வுலக வாழ்வை நீத்தாலும் அவர் நூல்கள் வாயிலாக என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பேராசிரியர் க.சுபத்திரா, சென்னை.



Next Story