தாவர எண்ணெய் இறக்குமதி 15% உயர்வு


தாவர எண்ணெய் இறக்குமதி 15% உயர்வு
x
தினத்தந்தி 26 April 2019 4:53 AM GMT (Updated: 26 April 2019 4:53 AM GMT)

டாலர் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 15% உயர்வு

மார்ச் மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படை யில் தாவர எண்ணெய் இறக்குமதி 15 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

எண்ணெய் பருவம்

நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். கடந்த பருவத்தில் (2017-2018) 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. 2016-17 பருவத்தில் அது 1.54 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து இருந்தது. இதில், பாமாயில் இறக்குமதி (92.90 லட்சம் டன்னில் இருந்து) 87 லட்சம் டன்னாக குறைந்து இருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வகைகள்) இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. உள்நாட்டில், முந்தைய நிதி ஆண்டில் (2017-18) 2.30 கோடி டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஏறக்குறைய 1.50 கோடி டன் எண்ணெய் இறக்குமதி ஆகி இருந்தது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 71 கோடி டாலருக்கு தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 96 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 84 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் இறக்குமதி 15 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ரூபாய் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் உயர்ந்து ரூ.6,701 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது ரூ.5,477 கோடியாக இருந்தது.

அளவு அடிப்படையில், மார்ச் மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்து 14.46 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதில் சமையல் எண்ணெய் இறக்குமதி (11,22,685 டன்னில் இருந்து) 13,93,255 டன்னாக உயர்ந்துள்ளது. மற்ற எண்ணெய் ரகங்களின் இறக்குமதி 2 மடங்கிற்கு மேல் அதிகரித்து 53,302 டன்னாக உள்ளது.

பாமாயிலின் பங்கு

இறக்குமதியாகும் சமையல் எண்ணெயில் பாமாயிலின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 86 சதவீதமாக இருந்தது.



Next Story