மழைநீரை தேக்கி அரசாண்ட மன்னன்...!


மழைநீரை தேக்கி அரசாண்ட மன்னன்...!
x
தினத்தந்தி 8 May 2019 9:37 AM GMT (Updated: 8 May 2019 9:37 AM GMT)

பழந்தமிழகம் நீரால் நிறைந்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஏரி, கண்மாய், குளம், குட்டை என மன்னரால் உருவாக்கப்பட்டவை, மக்களால் உருவாக்கப்பட்டவை நிறைந்திருந்தன. அது மட்டுமா இயற்கையாக அமைந்த ஆறு, ஓடை, கால்வாய் என நீர்வளம் மிக்க நாடாய் திகழ்ந்தது.

“எண்ணிறந்த தடாகங்களும் இரு நிலத்தும் இயற்றுவித்து” என்று பாண்டியர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது போல எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் குளம் அமைத்து பாதுகாப்பதை பெறும் அறச்செயலாக இலக்கியங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி தமிழகத்தில், நீரானது பஞ்சபூதங்களில் ஒன்றாகவும், வழிபாட்டிற்குரிய தெய்வமாகவும் மக்களால் போற்றப்பட்டது. சங்க நூல்களும், கல்வெட்டுகளும் ஏரிகள் அமைத்ததை விளக்கமுற காட்டுகின்றன. “யாறுள் அடங்கும் குளமுள வீருசால்” என்கிறது பதினெண்கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகை. இப்பாடலடியின் பொருளானது பெருகி நிறைந்து வரக்கூடிய ஆற்றுநீர் முழுவதையும் தன்னுள்ளே அடக்கக்கூடிய ஆற்றல் மிக்க பேரேரியைக் குறிப்பிடுகிறது. இன்றைய வீராணம் பேரேரி, கவிநாட்டுப் பேரேரி போன்று மிகப்பெரும் பரப்பளவில் உள்ள ஏரிகளைத்தான் ஆறு உள் அடங்கும் குளம் என்கிறது. ஆற்றிலிருந்து வரும் அனைத்து நீரையும் உள்ளடக்கி கொள்ளக்கூடிய குளமாகத் திகழ்கின்றவை இவைபோன்ற பேரேரிகளே ஆகும்.

நிலப்பரப்பில் எங்கெங்கெல்லாம் பள்ளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் குளங்களை வெட்டி மழைநீரினைக் கட்டி வைத்து தேக்கி மக்களுக்குப் பயன்பட செய்யக்கூடியவனே ஒரு சிறந்த மன்னன் ஆவான். இதனை சிலப்பதிகாரம் “மழை பிணித்து ஆண்ட மன்னவன்” என்கிறது. மழைநீரைப் பிணித்து அதாவது முறையாகச் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதே இதன் பொருளாகும். மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாய கடமை என்று சங்க நூலான புறநானூறு, “நிலன்நெளி மருங்கின் நீர்நிலைபெருக தட்டோரம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் மற்றிவண் தள்ளாதோரே” என்று கூறுகிறது. இப்பாடல் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கிக் குடபுலவியனார் என்னும் புலவர் பாடியதாகும். நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் தம் பெயரை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்கிறார் அப்புலவர். சங்க நூலான இனியவை நாற்பது “காவோடு அறக்குளம் தொட்டல மிக இனிதே” என்கிறது. அதேபோன்று திரிகடுகம் என்னும் நூல் “காவோடு அறக்குளம் தொட்டானும் நாவினால்” என்று போற்றுகிறது. இங்கே காடு வளர்ப்பதும், குளம் வெட்டுவதும் அறச்செயலாகக் கூறப்படுகிறது.

ஒரு குளம் எவ்வாறு இருக்க வேண்டும் அவற்றை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்ற அறிவியல் சிந்தனையை இலக்கியங்கள் பதிவு செய்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம், நீர் வரும் வழி நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குன்றும் என்ற செய்தியினை ஒப்பீடுகளுடன் எடுத்துக்காட்டுகிறது.

குளம் (குளம் தொட்டு), கலிங்கு (கோடு பதித்து), வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்களுக்கான வழிகளை அமைத்தல் (வழிசீத்து), பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல் (உழு வயலாக்கி), பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு) என்பனவற்றுள் முதல் நான்கு அங்கங்களும் கொண்டவை நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஏரிகள் ஆகும். ஆனால் ஏரிகளில் நீர் குறைவாக இருக்கும்போது ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது அதிக நீர் விரயமாக்கும் வழி. அந்த நேரங்களில் மதகுகள் மூலம் நீர் பாய்ச்சுவதைவிட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது சிறந்த நீர் மேலாண்மை வழியாகும். எல்லோரும் கிணறு தோண்ட முடியாது. ஆகவே பொதுக்கிணறு அமைத்து அனைவரும் தண்ணீர் பாய்ச்சிக்கொள்வது சிறந்த வழியாகும். இன்றைய நாளில்கூட மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இத்தகு சிறந்த மேலாண்மைக் கோட்பாடு சங்கம் மருவிய காலத்தில் இருந்தது என்பதும், அந்த தொழில்நுட்பம் இன்றைக்கும் பயன்பட்டு வருவதும் பண்டைய நீர் மேலாண்மையின் சிறப்பிற்குச் சான்றாக நிற்கிறது.

பல்லவர் காலத்து ஏரிகளான மகேந்திர தடாகம் தொடங்கி சோழர் காலத்து மதுராந்தகப் பேரேரி, வீராணப் பேரேரி, வீரசிகாமணி பேரேரி, ஜெயங்கொண்டம் பேரேரி, குலோத்துங்க சோழப் பேரேரி, செம்பியன்மாதேவிப் பேரேரி என பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தமிழகமெங்கும் உருவாக்கப்பெற்று அவை இன்றும்கூட நடைமுறையில் இருந்து பயன்பட்டு வருகிறது.

தமிழ் மன்னர்களும், தமிழர்களும் இங்கு மட்டுமல்லாமல் தான் சென்ற அயல்நாடுகளிலும் தம் மரபுத் தொடர்ச்சியாக அங்கேயும் கிணறு, குளம் தோண்டினர். அதற்கு எடுத்துக்காட்டாக சயாம் (தாய்லாந்து) நாட்டின் தகுவாபா நகரில் உள்ள வாட்நா மியங்கு கோவிலின் உட்புறத்தில் உள்ள கல்லின்மீது தமிழ்மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.“அவனி நாராணன்” என்னும் பட்டப்பெயருடைய மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பெற்றதாகும்.

தமிழகத்து மணிக்கிராமம் என்ற வணிகக் குழுவினைச் சேர்ந்த வாணிகன் ஒருவன் சயாமில் உள்ள திருமால் கோவிலில் குளம் ஒன்றை வெட்டி அதற்கு அவனிநாராணன் குளம் என்று பெயரிட்டான் என்பதை அறிய முடிகிறது. இத்தகு சிறப்புடன் நீர்நிலைகளை வெட்டுவித்து போற்றிப் பாதுகாத்த தலைமுறையினருக்கு சொந்தக்காரர்களாய் திகழ்கின்ற நாம் இன்று இருக்கிற நீர்நிலைகளைக் காப்பதற்கு உறுதிகொள்வோம். நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கு அவற்றைப் பாதுகாத்து விட்டுச்செல்வோம்.

- மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

Next Story