மாற்றுத்திறனாளிகளும் வரலாறு படைக்கலாம்...!


மாற்றுத்திறனாளிகளும் வரலாறு படைக்கலாம்...!
x
தினத்தந்தி 9 May 2019 7:07 AM GMT (Updated: 9 May 2019 7:07 AM GMT)

மாற்றுத்திறனாளிகள் மாறுபட்ட திறமை கொண்டவர்கள். நவீன காலத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுரூபம் எடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கை போனால் என்ன மறு கை உண்டு. மறுகையும் போனால் தான் என்ன? இன்னும் ஒரு கை உண்டு. அது உறுதியான கை, உற்சாகத்தின் கை, அது நாங்கள் நம்பும் கை. மாற்றுத்திறனாளிகளாகிய எங்கள் நம்பிக்கை என்று நம்பிக்கையுடன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்றுத்திறன் குழந்தைகளைப் பெற்றவர்கள் தமக்கு இறைவன் கொடுத்திருக்கும் ஒரு பொறுப்பு. இந்தக் குழந்தை என நினைத்து உணவுடன் சேர்த்து ஊக்கத்தையும் ஊட்டி வளர்த்தால் நிச்சயம் உங்களின் குழந்தைகளும் நாளைய சாதனையாளர்கள் தான்.

அமெரிக்க நாட்டில் 1985-ம் வருடம் ஜூன் 30-ந் தேதி ஒரு ஆண் குழந்தை தெபோரா ப்ரெட் தம்பதியினருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தது. பள்ளியில் படிக்கும்போது இவன் மட்டும் வித்தியாசமாக எதையும் செய்து முடிக்க, படிக்க காலதாமதம் எடுத்துக்கொண்டதை கவனித்த ஆசிரியர்கள் இவன் படிப்பதற்கு தகுதியானவன் அல்ல என்று அவனுடைய தாயார் தெபோராவை வரவழைத்து உங்கள் குழந்தையை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது கடினம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

தாயார், அவர்களிடமிருந்து தனது குழந்தையை கூட்டிச் சென்று மகனுக்கு வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வளர்க்கலானார். அவனுக்கு கற்றலில் குறைபாடு நோய் இருந்தது. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல ஒரு வேலையைச் செய்துமுடிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட இரண்டு மடங்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

தாயே அந்த சிறுவனுக்கு ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். தினமும் அந்த சிறுவன் தனது இரண்டு சகோதரிகளுடன் எழுந்து பல் துலக்குதல் முதல் உணவு உண்ணுதல் வரை அவனுக்குத் தனிப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு செயலையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு நொடித் தவறாது சரியானத் தருணத்தில் முடித்துவிட வேண்டும் என்பதே அவனுக்குப் பயிற்சி.

நாளாக நாளாக தனது வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பான். அவன் நீச்சல் பழகத் தொடங்கி குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள் இலக்கை அடைய கடுமையானப் பயிற்சி செய்து தற்போது ஒலிம்பிக் போட்டியில் 22 தங்க பதக்கங்களைப் பெற்ற மாவீரனாக சாதனை புரிந்து திகழும் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் அவர்.

இப்படி ஒதுக்கப்படுகிற குழந்தைகளை உற்றுநோக்கினால் ஒரு தீப்பொறி தெரியும். அதனை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டினால் அக்கினிச் சிறகுகள் கொண்டு அகிலத்தையே அசைக்கும் ஆற்றல் இந்தக் குழந்தைகளுக்கு உண்டு என்பதனை மறந்துவிடக்கூடாது. ஐன்ஸ்டின், தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன் போன்றோர்கள் எல்லாம் பள்ளியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்தான். எடிசன் அடிமுட்டாள் என்று ஆசிரியரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். நியூட்டன் வகுப்பறையில் கடைசி மாணவராக இருந்தவர்.

ஆசிரியர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தற்போது தனிக் கவனம் எடுத்துப் பாடம் எடுப்பது பாராட்டுக்குரியது. சிறப்பு பயிற்சிபெற்ற சிறப்பாசிரியர்கள் இறைவனின் சேவகர்களாக இதுபோன்ற குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த கல்வி மூலமாகப் பயிற்சியளித்து வருகிறார்கள். குழந்தைகளை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உடலின் முக்கிய செயல்பாடுகளை இழந்த ஹெலன்கெல்லர் அவருடைய ஆசிரியர் ஆன்சுலி வன்மாகி ஊக்கத்தினால் தான் சாதனையாளராக மாற முடிந்தது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பதே சிறந்த சேவைதான். சிலர் உதாசீனப்படுத்துவதே வேலையாக இருப்பார்கள். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் எதிர்பார்ப்பது தாக்கத்தை அல்ல. உற்சாகமூட்டும் ஊக்கத்தை. மனதளவில் பாதிப்படைந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளை மாபெரும் அறிவாளிகளாகவேப் பார்ப்போம். இவர்கள் சோதனைகளைக் கடந்துவரும் சாதனையாளர்கள், நம்பிக்கை சிறகு முளைத்த நட்சத்திரங்கள், சீர்மிகுப் படைப்பாகும் சித்திரங்கள்.

ஒருமுறை ஒரு சிற்பி அவரது நண்பருடன் பேசிக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொண்டார். அங்கே ஒரு சிறு மலைக்குன்று இருப்பதை கண்ட சிற்பி.... ஆஹா... ஆபிரகாம் லிங்கன் எவ்வளவு கம்பீரமாகத் தெரிகிறார் பார் என்றார் நண்பரிடம். நண்பர் அது வெறும் கல்மலைத் தானே! எங்கே ஆபிரகாம் தெரிகிறார் என்றார். சரி போய் திரும்பி வா! என்று சொல்லிவிட்டு சிற்பி தன் வேலையைத் தொடங்கி அந்த மலைக்குன்றை அழகிய ஆபிரகாம் லிங்கன் உருவமாக மாற்றிவைத்து இருந்தார். திரும்பி வந்த நண்பர் அந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்து நின்றார். சாதாரணப் பார்வையில் அது ஒரு கல்... சிற்பியின் பார்வையில் அது அழகிய சிற்பம்.... அற்புதக் கலை...

அதேபோன்று சாதாரணமாகப் பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் குறைபாடு உடையவர்கள்... சற்று உற்றுப் பார்த்தால் இவர்கள் சமூகத்தின் உறுதியானச் சிற்பங்கள். மாற்றுத்திறனாளிகள் என்று உற்சாகமூட்டும் வார்த்தையினைக் கூறி, பயன்படுத்துவது சிறந்த பழக்கமாகும். உடல் ஊனமுற்றோர் என்ற பதம் மேலும் ஊனத்தையே அதிகப்படுத்துகிறது.

நமது தமிழகத்தில் பெரிய வடகம்பட்டி கிராமத்தில் பிறந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று மாற்றுத்திறனாளிகள் எல்லாம் திறமையுடையவர்கள் என்று நிரூபித்து மகுடம் சூட்டியவர் மாரியப்பன் என்ற இளைஞன். வறுமையின் நிழலிலே வாடியக் குடும்பத்தில் பொறுமையாக சோதனைகளை கடந்து சாதனைப்புரிந்த மாரியப்பன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணிமகுடம். அமெரிக்காவில் பள்ளியில் படித்த ஒரு மாணவனுக்கு கேன்சர் நோய் வந்து தலையில் மொட்டை அடித்து இருந்தார்கள். பள்ளிக்கு செல்லும்போது பலர் கேலி பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தான். மறுநாள் அவன் வகுப்புக்கு செல்லும் போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. எல்லா மாணவர்களும் மொட்டை அடித்தே வந்திருந்தார்கள்.

பள்ளியில் ஆசிரியர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அதிக அக்கறையுடன் சொல்லிக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கிறார்கள். சிறப்பாசிரியர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி அதிகமான குழந்தைகள் முன்னேற்றம் காணச் செய்கிறார்கள்.

“நலிவுற்ற குழந்தைகள் கல்விச் சாலையினை நோக்கி வரமுடியாவிட்டால் கல்விதான் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்” என்ற விவேகானந்தரின் விவேக வார்த்தைக்கிணங்க, சிறப்பாசிரியர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளின் இல்லம் தேடி கல்வி புகட்டி வருகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிவருவதில் சிரமம் பார்க்காமல் முயற்சி செய்து பயிற்சி அறைக்கு கொண்டு வந்தீர்களேயானால் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்பதனை மறந்துவிட வேண்டாம். உலகில் பிறந்த எல்லோருக்குமே ஆற்றல் இருக்கிறது. அதுவும் மாற்றுத்திறனாளிகள் மகிமையான ஆற்றலுக்குரியவர்களாக தங்களை தற்காலத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் விடாமுயற்சியும், நம்பிக்கையுமே ஆகும்.

நம்பிக்கை உள்ள பறவை ஒற்றைச் சிறகிலும் பறந்து செல்லுமாம். என்ன தான் சேவலை ஏழு கூடைப்போட்டு மூடிவைத்தாலும் விடியற்காலையில் கூவி விடியலை அறிவித்துவிடும் என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கு இணங்க மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை யாரும் மறைத்து விடமுடியாது. மாற்றுத்திறனாளிகள் பெயருக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியாளர்களாக பவனி வரத்தொடங்கி விட்டார்கள்.

ஆகவே, மாற்றுத்திறன் குழந்தைகளை உதாசீனப்படுத்தாமல் உற்சாகப்படுத்துவோம். பலவீனமாகக் கருதாமல் பலமாக கருதுவோம். முதுகில் தட்டினாலும் முன்னேறு என்றே ஊக்குவிப்போம். கண்பார்வையற்றோருக்கு விழியாக இருப்போம். காதுகேளாதோருக்கு செவியாக மாறுவோம். முதியோரைக் கண்டால் ஊன்றுகோலாய் மாறுவோம். மாற்றுத்திறனாளிகள் தடைகளை உடைத்து தங்கள் தடங்களைப் பதித்துவிடட்டும். எடுத்து வைக்கும் காலடிகள் இமாலய சாதனையை நோக்கியே இருக்கட்டும். விழிகளை இழந்தோராயினும் செல்லும் வழிகள் எல்லாம் வாழ்த்து மழை உங்கள் மேல் பொழியட்டும். திக்கெட்டும், கேட்கட்டும் மாற்றுத்திறனாளிகளும் மகத்துவமுள்ள சாதனையாளர்களே. 

- டாக்டர் கே.கோவிந்தசாமி,  இயன்முறை மருத்துவர், மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த கல்வி, புதுக்கோட்டை.

Next Story