நம்மை மேம்படுத்தும் அனுபவ அறிவு..!

அறிவு என்பது அனைவரும் தேடியலையும் ஓர் அரிய செல்வம்
அனைவரும் தேடியலையும் ஓர் அரிய செல்வம் தன்னிடம் தான் அது மிகுதியாக உள்ளது என்றும், மற்றவரிடம் இல்லை என்று ஒவ்வொருவரும் பிறரைக் குறித்து உறுதியாக நம்பக்கூடிய செல்வம் அறிவு. நடைமுறை வாழ்விலும், சிந்தனையுலகிலும் மிகச்சிறிய செயலிலிருந்து பெரிய செயல் வரை அனைத்திற்கும் தேவையான ஒன்று அறிவு தான். அறிவு என்பது கல்வி அல்லது அனுபவத்தின் மூலம் பெறக்கூடிய ஒன்று என்று சிலர் விளக்கினர். ஒரு விஷயத்தின் அடிப்படை அல்லது அதன் செயல்படும் முறை பற்றித் தெரிந்து கொண்டிருப்பதுதான் அறிவு என்று வேறொரு சாரார் கூறினர்.
கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ ஒரு பொருளைக் குறித்து ஆய்வுகள் செய்து நிரூபிக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பே அறிவு என்று கூறினார். நமது வள்ளுவப் பேராசான் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், ஒரு பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவு என்று கூறினார். ஒரு பொருளின் தோற்றத்தில் லயித்து எடுத்த எடுப்பிலேயே முடிவுகட்டிவிடாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து காண்பதே அறிவு என்று பொருள் படும்படியாக “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று கூறினார். கண்களால் பார்க்கக்கூடிய ஒன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பிறிதொன்றைக் காண்பவனே அறிஞன் என்பது இதன் பொருள். இன்றைய அறிவியலும் இதைத்தான் கூறுகிறது. அறிவு என்பது உண்மையைக் காணும் முயற்சியில் தோன்றுவது என்றும் வள்ளுவர் குறிப்பிட்டார்.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு”
என்ற குறட்பா இதனைக் கூறுகிறது. மற்றவர்கள் கூறும் செய்திகளை அதாவது இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று வள்ளுவர் இன்றைய நவீன நிர்வாக உலகத்திற்கு வழிகாட்டுகிறார். இரண்டாம் நிலைத் தகவல்களை நம்பினால் முடிவுகள் தவறாகப் போய்விடும். சிலப்பதிகார காப்பியத்தில் அரசியின் சிலம்புகளை கவர்ந்தவன் கோவலனே என்று பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம் கூறிவிடுகிறான். “கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்.. என் சில்லைச்சிறுகுடில்” இருக்கிறான் என்று அவன் கூறியதை உண்மை என்று நம்பி, பாண்டிய மன்னன் கோவலனைக் கொன்று சிலம்பைக் கைப்பற்ற முடிவு செய்கிறான்.
அதாவது பொற்கொல்லன் கூறிய இரண்டாம் நிலைத் தகவலை உண்மை என்று நம்பிவிடுகிறான்; ஆனால் ஒரு மன்னன் என்ற நிலையில் பாண்டியன், பொற்கொல்லன் மூலம் கிடைத்த தகவலை முதல் நிலைத் தகவலோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் மெய்ப்பொருள் காணும் அறிவினைப் பயன் படுத்தாததால் பல்வேறு துன்பங்கள் ஏற்பட்டன; மன்னனின் நீதி தவறியது; பாண்டிய மன்னன் உயிரிழந்தான்; மதுரை நகரம் துன்புற்றது; பாண்டிமாதேவி உயிர்த் தியாகம் செய்தாள். எனவே முக்கியமான கொள்கை முடிவு மேற்கொள்பவர்கள், நிர்வாகிகள் எப்போதும் முதல்நிலைத் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்ற நிர்வாகப் பாடத்தைத் திருக்குறளும், சிலப்பதிகாரமும் நமக்குக் காட்டுகின்றன.
சூழ்நிலை அறிவு, கல்வியறிவு, எழுத்தறிவு, இயற்கை அறிவு, அனுபவ அறிவு என்னும் காட்சி அறிவுபோன்ற பல வகையான அறிவுகள் கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையன; எனினும் காட்சியறிவு என்னும் அனுபவ அறிவே மிகவும் சிறந்தது என்பது சான்றோர் கருத்து. தனிமனித வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நெருக்கடிக் காலங்களில் மிகவும் பயன்படக் கூடியது அனுபவ அறிவுதான்.
திருவள்ளுவர் இந்த அறிவு ஒருவனிடம் மிகுந்திருக்குமானால் அவனுக்குத் துன்பமில்லை என்ற கருத்துத் தோன்றும்படி,
“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்”
என்ற குறட்பாவில் கூறுகிறார். அற்றம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் கூறப்பட்டாலும் “துன்பம்” என்ற பொருளே இங்கு மிகவும் பொருத்தமுடையது. வியாசர் பாரதத்தில் குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு குல முதல்வனான திருதராஷ்டிரன் மனத்தில் பழி உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. சஞ்சயன் அவனுக்குத் தேறுதல் கூறி, பாண்டவர்களை ஆசிர்வதித்து ஆட்சி புரிய அழைக்குமாறு அறிவுரைகள் கூறுகிறான். திருதராஷ்டிரன் பாண்டவர்களை ஒவ்வொருவராக அழைத்து அரவணைத்து ஆசி கூறுகிறான். ஒரு கட்டத்தில் பீமன் வந்து திருதராஷ்டிரனை வணங்கும்போது அவனைக் கட்டித் தழுவுகிறான்.
ஆயிரம் யானைகளின் பலமுடையவனான திருதராஷ்டிரன் மனதில் பழி உணர்வு மேலோங்க அவன் பீமனை இறுக்கமாகத் தழுவுகிறான். பீமன் உடல் துண்டு துண்டாக நொறுங்கி வீழ்கிறது. அந்தக் கணத்தில் குற்ற உணர்வும் தான் செய்த தவறும் மனத்தை உறுத்த திருதராஷ்டிரன் கதறி அழுகிறான். இப்போதுதான் பாண்டவர்களின் துணைவனான கிருஷ்ணன், “திருதராஷ்டிரா! உன் மகனான துரியோதனனைக் கொன்ற பீமன் மீது உனக்கு ஆழ்மனத்தில் வஞ்சம் இருக்கும் என்பதை ஊகித்து நான்தான் பீமனுக்குப் பதிலாக பீமனைப் போன்ற ஒரு இரும்புச் சிலையை உன்னிடம் அனுப்பினேன். இப்போது நீ இறுக்கிப் பிடித்து நொறுக்கியது வெறும் இரும்புச்சிலைதான்; அது பீமனல்ல; உன் மனத்தில் இருந்த பழி உணர்ச்சி இப்போது விலகிவிட்டதால் இனி நீ பீமனை ஆசிர்வதிக்கலாம்” என்று கூறுகிறான். கிருஷ்ணன் அனுபவ அறிவுமிகுதியாக அமையப் பெற்றவன்; பாரதத்தில் பல இடங்களில் இது வெளிப்படுகிறது. இங்கும் பீமனைக் காப்பாற்றியது கிருஷ்ணனின் அனுபவ அறிவு எனும் காட்சியறிவுதான்! அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது என்பது இப்போது புரிகிறதல்லவா?
கம்பராமாயணத்திலிருந்து ஒரு சான்றினைக் காணலாம். கிஷ்கிந்தா காண்டத்தில் வாலியின் சினத்திற்கு ஆளாகித் தோற்றோடிய சுக்ரீவன் ராமனின் துணை கிடைத்தவுடன் மீண்டும் வாலியின் அரண்மனைக்கு முன்னே வந்து நின்று வாலியைப் போருக்கு அழைத்து அறைகூவல் விடுக்கிறான். வாலியும் போருக்குப் புறப்படுகிறான். அப்போது அவன் மனைவி தாரை வாலியை நோக்கி, தங்களின் தோள் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றோடிய பலவீனனான சுக்ரீவன் மீண்டும் தங்களை வலிந்து போருக்கு அழைப்பதில் ஏதோ வஞ்சனை உள்ளது. அவனுக்கு இப்போது ராமனின் துணை கிடைத்துள்ளது;
எனவே போரைத் தவிர்த்திடுக” என்று அறிவுரை கூறுகிறாள். வாலியின் மனைவி அறிவுத்திறன் உடையவள். ஆனால் வாலி வரங்கள் பல பெற்றிருந்தாலும் வலிமையும் வீரமும் உடையவனாக இருந்தாலும் அறிவு நலம் இல்லாதவன். அறிவுடைய மனைவியின் பேச்சைக் கேட்காமல் போருக்குச் சென்று ராமனின் அம்புக்கு இரையாகிறான். இது ராமாயணம் தரும் செய்தி. இவற்றைப் படித்துப் பயன்கொள்வது தமிழர்களாகிய நமது கடமை.
முனைவர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.
Related Tags :
Next Story






