என்றென்றும் கண்ணதாசன் : வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உறவு (5)


என்றென்றும் கண்ணதாசன் : வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உறவு (5)
x
தினத்தந்தி 10 May 2019 8:23 AM GMT (Updated: 10 May 2019 8:23 AM GMT)

அப்பாவுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு பாடலாசிரியருக்கும் இசை அமைப்பாளருக்கும் உள்ள உறவு, அவர்கள் எவ்வளவு காலம் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இருந்திருக்கிறது.

இதில் யாராவது ஒருவருக்கு படங்கள் இல்லையென்றால், மற்றொருவர் அவரை சுத்தமாக மறந்து போய் விட்டு புதிதாக வந்தவருடன் போய் சேர்ந்து கொள்வார்.

கண்ணதாசன்-விஸ்வநாதன், இளையராஜா-பஞ்சு அருணாசலம் போன்ற விதிவிலக்குகள் உண்டு.

அப்பாவும் விஸ்வநாதனும், காதலன் காதலி போல. ஒருவரைப் பார்க்காமல் இன்னொருவரால் இருக்க முடியாது என்பது போல் இருந்தார்கள். இது உண்மை.

காலையில் ஒரு கம்போசிங், மாலையில் ஒரு கம்போசிங் என்று காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இருவரும் ஒன்றாகவேதான் இருப்பார்கள்.

அப்பா வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே, டெலிபோன் மணி அடிக்கும்.
“டேய் அது விஸ்வநாதனா இருக்கும், போனை எடு” என்பார்.
போனை எடுத்தால் “அண்ணன் இல்ல? நான் விஸ்வநாதன்”.
பிறகு அப்பாவும் விஸ்வநாதனும் இரண்டு மணி நேரம் பேசுவார்கள்.

“ஏங்க மணி பன்னிரண்டு ஆகப்போகுது. மொதல்ல சாப்பிடுங்க. பகல் பூரா ஒண்ணாதானே இருந்தீங்க. திரும்ப என்ன போன்ல” - இது அம்மா.

“இதோ..” என்று சொல்வார் அப்பா. ஆனாலும் போனை வைக்க இன்னும் அரை மணி நேரம் ஆகிவிடும். இது எங்கள் வீட்டில் தினமும் நடக்கும் ஒன்று.

வேடிக்கை என்னவென்றால் அப்பா தயாரித்த படங்களுக்கு, எம்.எஸ். விஸ்வநாதனும், கே.வி. மகாதேவனும் சரி சமமாக இசை அமைத்து இருப்பார்கள்.

அப்பாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாட்டு எழுத உட்கார்ந்துவிட்டால், அந்த இடம் ஒரு பள்ளி மைதானம் போல் ஆகி விடும். விஸ்வநாதன் அண்ணனுக்கு விலா அருகில் தொட்டால் கூச்சத்தில் நெளிவார். அப்பா தொட வந்தால் அந்த அறையை சுற்றிசுற்றி ஓடுவார்.

விஸ்வநாதனிடம் டோலக் வாசித்த கோபாலகிருஷ்ணன் என்பவர், டோலக்கை சாய்த்து வைத்து ‘டர்ர்ர்ர்ர் டக்க்க்க்’ என்று விநோத சத்தம் வரும்படி வாசிப்பார்.

அதற்கு ஏற்ற மாதிரி அப்பா கிச்சுகிச்சு மூட்டுவார். அறையை சுற்றி ஓடும் விஸ்வநாதன் அண்ணன், ‘ஏய்..வாசிக்காதே’ என்று கத்துவார்.

‘ஏய் வாசி’ - இது அப்பா. ‘நான் தான் உனக்கு சம்பளம் தரணும்’ என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். ‘அவன் தரலைன்னா நான் தரேன். நீ வாசிக்கிறதை நிறுத்தாதே’, என்பார் அப்பா.

கோபாலகிருஷ்ணன் அண்ணன் மட்டுமில்லை, எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில் இருந்த அனைவரும் இந்த வேடிக்கையை பார்த்து ரசித்து சிரிப்பார்கள். உண்மையில் எல்லாருமே பள்ளி மாணவர்கள் போல ஆகி விடுவார்கள்.

இந்த வேடிக்கை முடிந்து பாட்டெழுத உட்கார்ந்து விட்டால், தொழில் பக்தி வந்துவிடும். விஸ்வநாதன் அண்ணன் டியூன் போட்டுக்கொண்டே இருப்பார். எந்த டியூனை டைரக்டர் தேர்வு செய்கிறாரோ அதை மேலும் மெருகு படுத்தி வாசிப்பார்.

டைரக்டர் அதற்குப்பிறகு படத்தின் கதையை சொல்லி, பாடல் வரும் சூழலை சொல்லுவார். அதன் பிறகு அப்பா பல்லவியை சொல்ல ஆரம்பிப்பார்.

நான் பார்த்த வரையில் எந்த டைரக்டரும் முதலில் சொல்லப்படும் பல்லவியை தேர்வு செய்தது இல்லை. இயக்குனருக்கு பிடிக்கும் வரை பல்லவி மேல் பல்லவியாக சொல்லிக்கொண்டு இருப்பார்.

இப்படியே பல்லவி, சரணங்கள் எழுதி முடிக்கும் வரை அப்பாவும் விஸ்வநாதன் அண்ணனும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள்.

பாட்டு எழுதி முடித்த பிறகு மீண்டும் கலாட்டா ஆரம்பம் ஆகும்.

‘டேய் சீட்டு ஆடலாமா?’
‘சரிண்ணே’

அப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன், இசைக் குழுவை சேர்ந்த சிலர் ஆட ஆரம்பிப்பார்கள். அப்பாவுக்கு சீட்டு ஆடத்தெரியாது. தோற்பது நிச்சயம் என்று தெரிந்தே கலாட்டாவுக்காக ஆடுவார்.

ஒருமுறை விஸ்வநாதன் அண்ணனிடம், “டேய்... என் அப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சீட்டு மட்டும் ஆடுவார். அதிலேயே சொத்து முழுவதையும் இழந்து விட்டார். எனக்கு சீட்டு ஆடத்தெரியாது. மற்ற எல்லா பழக்கங்களும் உண்டு” என்று வேடிக்கையாக சொன்னார்.

ஒரு முறை அப்பா, என்.எஸ்.கே, கருணாநிதி, இன்னும் சிலர் என்.எஸ்.கே. அலுவலகத்தில் உட்கார்ந்து சீட்டு விளையாடினார்கள். கருணாநிதி நன்றாக ஆடுவார். என்.எஸ்.கேயும் அப்படியே.

அப்பா தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் தோற்று விட்டார். “யோவ், சீட்டு விளையாட்ல கடன் சொல்லக்கூடாது. நீ விளையாடாம வேடிக்கை பாரு” என்று கருணாநிதி சொல்லி விட்டார்.

அப்பாவும் சும்மா உட்கார்ந்து கொண்டு “எங்கே தேடுவேன்.. பணத்தை எங்கே தேடுவேன்” என்று பாடிக்கொண்டு இருப்பார்.

இரண்டு ஆட்டங்கள் தான். அப்பாவால் சும்மா இருக்க முடியாது. என்.எஸ்.கே.யிடம் பணம் கடனாக வாங்கிக் கொண்டு திரும்பவும் விளையாட ஆரம்பிப்பார்.

சீக்கிரத்தில் அதையும் தொலைத்துவிட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விடுவார்.

ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. அப்பாவிடம் “உனக்குதான் சீட்டு விளையாட தெரியலயே, பேசாம இரேன்” என்பார்.

“என்.எஸ்.கே. சொல்றதால விளையாடலை. இல்லன்னா நீங்க எல்லாரும் வெறுங்கையோடு தான் வீட்டுக்கு போகணும்” என்று வீராப்பாக சொல்லுவார் அப்பா.

பொம்மணாட்டி.. ஆம்ணாட்டி..



முக்தா சீனிவாசன் அவர்கள் படத்தின் பாடல் கம்போசிங்.

‘காதலர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள்’ என்று மனோரமா பாடுவது போன்ற பாடல்.

வழக்கம் போல விஸ்வநாதன் டியூன் போட, அப்பா பாடல் வரிகளை சொல்ல ஆரம்பித்தார்.

“தெரியாதோ நோக்கு தெரியாதோ.. இந்த பருவத்தில காதலிப்பது பைத்தியம் போல் தோணுமினு தெரியாதோ” - இதுதான் பல்லவி.

அப்பா வரிகளை சொல்லிக் கொண்டே போக அதை இசையுடன் பாடிப் பார்த்த விஸ்வநாதன், அளவு சரியாக இருக்கிறது என்று தலையை ஆட்டினார்.

திடீரென பாடுவதை நிறுத்திவிட்டு “என்ன பெரிய கவிஞர் நீங்க? இதைக்கூட சரியா சொல்லத் தெரியலை” என்றார்.

‘என்னடா சொல்ற?’

“ஏண்ணே... என்ன எழுதி இருக்கீங்க?, பூஜைக்காக போறவ போல் ஆம்பிளை போவான்.. அங்கே பூஜை தேடி பொம்மணாட்டி நேரத்தில் வருவா”

‘ஆமா... சரியாத்தானே இருக்கு?’

‘பொம்மணாட்டினு பின்னாடி போட்டிருக்கீங்க... அப்ப முன்னாடி ஆம்ணாட்டினு தானே போடணும்?’

‘டேய்... தமிழ்ல ஆம்ணாட்டினு ஒரு வார்த்தையே கிடையாது..’

‘ஓ.. அப்ப சரி’

இது எல்லா பாடல் கம்போசிங்லயும் நடக்கின்ற ஒன்று.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா


ஒரு படத்திற்கு பாடல் எழுத போனார் அப்பா. இயக்குனர் பாட்டிற்கான சூழலை சொல்ல.. அப்பா யோசித்துவிட்டு பல்லவியை சொன்னார்.

பல்லவி இதுதான்-

“தாமரை உயரம் தண்ணீர் அளவு
உள்ளத்தளவே உலகளவு
காவிரி ஆறு கரைபுரண்டாலும்
காக்கைக்கு தேவை மூக்களவு”

இயக்குனருக்கும் மற்றவர்களுக்கும் பிடித்து விட்டது. தொடர்ந்து மூன்று சரணங்கள் எழுதி, ஒரு மணி நேரத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டார்கள்.

பிறகு வழக்கம் போல அரட்டை கச்சேரி.

அப்போது ஆபீஸ் பையன் காபி கொண்டு தருகிறான்.

அப்பா சும்மா இருக்காமல் அவனிடம் “டேய்... பாட்டை கேட்டியா? எப்படி இருக்கு?”.

அதற்கு அவன் “ஐயா.. பாட்டு பாடுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு எதுவும் புரியலை” என்றான்.

அப்பாவுக்கு அதிர்ச்சி... “உனக்கு என்னடா புரியலை?”

“எனக்கு ஒண்ணும் புரியலை. என்னமோ தாமரை, காக்கானு வருது, அது மட்டும் தெரியுது. ஆனா அர்த்தம் புரியலே”.

அப்பா, “டேய் விசு... வேற டியூன் போடு. புதுசா வேற பாட்டு எழுதுவோம்”.

இப்போது விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி. “அண்ணே.. அவன் புரியாம பேசுறான். எல்லாருக்கும் இந்த பாட்டு பிடிச்சு இருக்கு. இதையே வச்சுக்குவோம்”.

விஸ்வநாதன், தயாரிப்பாளர், இயக்குனர், யார் சொல்லியும் கேட்காமல் அப்பா பிடிவாதமாக இருக் கிறார்.

“டேய் நாம பாட்டு எழுதுறது பண்டிதனுக்கு இல்லை. இவனை மாதிரி இருக்கிற ரசிகர்களுக்குத்தான். இவனுக்கு புரியலைனா, புரியிறது போல் வேற ஒண்ணு எழுதுவோம்”.

அப்பா அன்று பிடிவாதமாக இருந்து மாற்றி எழுதிய பாடல் தான் சிவாஜி கணேசன்-ஜெயலலிதா நடித்த தெய்வமகன் படத்தில் இடம்பெற்ற “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற பாடல்.
இது எல்லா பாடல் கம்போசிங்லயும் நடக்கின்ற ஒன்று.


Next Story