தாயில்லாமல் நாமில்லை...!

நாளை (மே 12-ந் தேதி) அன்னையர் தினம்.
“தாயைக் கனம் செய்பவன் மற்றவர்களால் கனம் செய்யப்படுவான்” என்றார் ஏசுபெருமான். தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்றார் நபிகள் நாயகம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அன்னையை முதலில் வைத்துப்போற்றினார் அவ்வையார். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதியார்.
“மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா அவர்
பங்கயக் கைநலம் பார்த்தல்லவா இந்தப்
பாரில் அறங்கள் வளருதம்மா”
என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
“தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை”
என்றான் ஒரு கவிஞன்.
“தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்றான் மற்றொரு கவிஞன்.
“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்; அம்மாவை வாங்க முடியுமா” என்றான் இன்னொரு கவிஞன்.
“அம்மன் கோயில் எல்லாமே அம்மா உந்தன் கோயிலம்மா உன்அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லையில்லா வானமம்மா”
என்று இளையராஜா இசையில் நானும் ஒரு படத்தில் எழுதியிருக்கிறேன்.
இப்படித் தாயின் பெருமையை சான்றோர் உரைத்திருந்தாலும் அன்னையின் பெருமையைப் போற்றுவதற்காகத்தான் அகிலத்தில் ஒரு நாளை நாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி வருகிறோம். இது முதன் முதல் அமெரிக்காவில்தான் கொண்டாடப்பட்டது.
ஒரு மகள் தன் அன்னை மேல் வைத்திருந்த பற்றும் பாசமும்தான் அன்னையர் தினம் கொண்டாடக் காரணமாக அமைந்தது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தில் ‘கிராப்டன்’ என்ற சிற்றூரில் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு சமூக சேவகி. அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் கவனிப்பாரின்றி சிதறிப் போய்விட்டன. அப்படி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கு அரும்பாடுபட்டவர் அவர். அந்த சமூக சேவகி 1904-ம் ஆண்டு மறைந்துவிட்டார். அவரது ஒரே மகள் தான் “அனா ஜார்விஸ்” என்பவர்.
அவர் முதன்முதல் தன் அன்னையின் நினைவாக உள்ளூரில் (கிராப்டன்) உள்ள “மெத்தடிஸ்ட்” என்ற தேவாலயத்தில் 1908-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தன் அன்னையைப் போற்றி அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் பெண் இவர்தான்.
அதன்பின் 1913-ம் ஆண்டில் “அனாஜார்விஸ்” பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் குடியேறி, தன் தாய்விட்டுச் சென்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்துவந்தார். ஒவ்வொருவரும் அவரவரின் அன்னையைப் போற்றும் வகையில் ஆண்டுக்கொரு நாளை அன்னையர் தினமாக கடைப்பிடிக்க வேண்டுமென்று பென்சில்வேனியா மாநில அரசுக்கு எழுதினார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு அன்னையர் தினத்தை அங்கீகரித்தது.
மேலும் ‘அனாஜார்விஸ்’ அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடவும் அந்த நாளை அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமெரிக்க குடியரசுத் தலைவராக அப்போதிருந்த உட்ரோ வில்சன் அதை ஏற்றுக்கொண்டு 1914-ம் ஆண்டு, ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமெரிக்க காங்கிரஸ் முதலில் ஏற்றது. பின்னர் கனடா நாடு ஏற்றுக்கொண்டது. அதன்பின் 46 நாடுகள் அதே நாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனாஜார்விஸ் முயற்சியால் இன்று அகிலமெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என்றாலும் அனாஜார்விஸ் திருமணம் செய்துகொள்ளாதவர். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதவர். தாம் அன்னையாகா விட்டாலும் உலகில் வாழும் அன்னையர்களுக்காக அரும்பாடுபட்டவர். அவரும் 84-வது வயதில் மறைந்துவிட்டார். அப்படிப்பட்ட அனாஜார்விஸை இந்த நாளில் நாம் நினைவு கூர்வதுடன் நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை இந்த ஒரு நாள் மட்டும் போற்றாமல் நாம் வாழுகின்ற காலம் வரை வைத்து போற்றுவோம் என்றும், முதியோர் இல்லங்களுக்கோ அனாதை இல்லங்களுக்கோ அனுப்பமாட்டோம் என்றும் உறுதி மேற்கொள்வோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தங்கள் தாயாரைத் தெய்வமெனப் போற்றியவர்கள் என்பதை இந்த நாடு நன்கறியும். உலகப்பற்றை முற்றிலும் துறந்த ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் கூட தங்கள் தாய் மீது வைத்த பற்றை துறக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள். தாய்மையின் மேன்மைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியலில் முதன் முதல் பெண்கள் சிறப்பிக்கப்பட்டது எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான். மகளிருக்காக அன்னை தெரசா பெயரிலே ஒரு பல்கலைக்கழகத்தை அவர்தான் தோற்றுவித்தார். முதன் முதல் காவல்துறையில் பெண்கள் நியமிக்கப்பட்டதும் அவரது ஆட்சியில்தான். அதே நேரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை இந்தியாவிலேயே 1992-ல் முதன் முதல் ஆயிரம்விளக்கு பகுதியில் தோற்றுவித்தவர் ஜெயலலிதா தான். அதுமாத்திரம் அல்ல. பெண்கள் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதன் முதல் பெண் கமாண்டோ படை (அதிரடிப்படை) அமைத்ததும் அவர்தான். அவர் காலத்தில் 7 மாநகராட்சிகளில் பெண்களே மேயர்களாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 7 மாவட்டங்களில் பெண்களே உயர் போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலே தந்தையார் பெயரைப் போலே தாயார் பெயரையும் ‘இனிஷியலாக’ போட்டுக் கொள்ளலாம் என்று உலகில் அறிவித்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான். இதைவிடப் பெண்களுக்கு என்ன பெருமை வேண்டும்? அன்னையர் தினம் கொண்டாடும் இந்த நாளில் இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண் டாமா?
இதைவிடப் பெண்களுக்குப் பெருமை சேர்த்த ஆட்சி இதற்கு முன் ஒன்றுண்டு. அதுதான் நீதிக்கட்சி ஆட்சி. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி 1920-லிருந்து 1936 வரை ஆட்சியில் இருந்தது. அந்தக் காலத்தில் உலகமெங்கும் பெண்கள் அடக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் கிடையாது. தேர்தலில் நிற்பதற்கும் உரிமை கிடையாது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்கள் தேர்தலில் நிற்கலாம், வாக்களிக்கலாம் என்ற சட்டத்தை இந்தியாவில் சென்னை மாகாணத்தில் முதன் முதல் நீதிக்கட்சி ஆட்சிதான் கொண்டுவந்தது.
1926-ல் இந்தச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான், இந்தியாவில் முதல் பெண் டாக்டர் என்று நாமெல்லாம் போற்றுகிறோமே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் டாக்டரும் முத்துலட்சுமி ரெட்டிதான். இந்தியாவில் முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணும் முத்துலட்சுமி ரெட்டிதான். இவர்தான் தேவதாசி ஒழிப்புமுறைச் சட்டம் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தார். அன்னையர் தினத்தில் இதையெல்லாம் நாம் அவசியம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
- முத்துலிங்கம், முன்னாள் அரசவை கவிஞர்.
Related Tags :
Next Story






