குளிர் தொப்பி


குளிர் தொப்பி
x
தினத்தந்தி 12 May 2019 2:13 PM IST (Updated: 12 May 2019 2:13 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில், கடும் வானிலை மற்றும் காற்று மாசுபாடுக்கு மத்தியில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் கோடை மாதத்தில் அவர்களது பணி சவாலானதாக அமைந்து விடுகிறது.

கோடை வெப்பத்தை குளிர்ச்சியான சூழலுக்கு மாற்றி போக்குவரத்து போலீசாருக்கு உதவும் முயற்சியில் கேரள சிறுவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் வெப்பத்தை விரட்டும் தொப்பி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை பாக்கு மரத்தின் மட்டைகளை கொண்டு தயார் செய்திருக்கிறார்கள். போக்குவரத்து போலீசார் அணியும் தொப்பிக்குள் சொருகி வைக்கும் விதத்தில் பாக்கு மட்டைகளை வட்ட வடிவில் வெட்டி வடிவமைத்திருக்கிறார்கள். அவை தொப்பிக்குள் வைப்பதற்கு முன்பாக தண்ணீரில் நன்கு ஊறவைக்கப்படுகின்றன.

கண்ணூர் அருகே உள்ள மட்டனூர் மற்றும் இருட்டி பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீசார் மற்றும் வீட்டு காவலாளிகள் மத்தியில் சிறுவர்கள் உருவாக்கி இருக்கும் தொப்பிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரளாவில் பாக்குமரத்தின் மட்டைகள் அதிக அளவில் காணப்படும். அவை ஈரப்பதத்தை தக்கவைத்து வெப்பத்தை தடுக்கும் தன்மை கொண்டவை. அவைகளை கோடை காலத்திற்கு இதமாக பயன்படுத்தும் பொருளாக மாற்றும் விதத்தில் சிறுவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று பயிற்சி வழங்கி இருக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த சாஜேஷ் பரகாந்தி கூறுகையில், ‘‘நான் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொப்பியை தயார் செய்து பயன்படுத்தினேன். அதுபற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறேன். போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் என்னிடம் இந்த தொப்பியை வாங்கி உபயோகித்திருக்கிறார்கள். நாளடைவில் அதன் பயன்பாடு குறைந்துபோய் விட்டது. கடந்த மாதம் சிறுவர்கள் மூலம் பரி சோதனை அடிப்படையில் தொப்பிகளை தயாரிக்க தொடங்கினோம். இந்த தொப்பிக்கு போலீசார் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர்கள் ஆர்வமாக இதில் ஈடுபடுகிறார்கள். இதேபோன்று சுற்றுச் சூழல் சார்ந்த பல விஷயங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதில் சிறுவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.
1 More update

Next Story