தீபிகாவால் என் வாழ்க்கை தித்திக்கிறது: மனைவி புகழ்பாடும் ரன்வீர் சிங்


தீபிகாவால் என் வாழ்க்கை தித்திக்கிறது:  மனைவி புகழ்பாடும் ரன்வீர் சிங்
x
தினத்தந்தி 12 May 2019 9:59 AM GMT (Updated: 12 May 2019 9:59 AM GMT)

பெங்களூருவில் இருந்து இந்தி திரை உலகுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை தீபிகா படுகோன். அவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கரம் பற்றினார்.

அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியாகசென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் அவரவருக் குரிய மரியாதையை வழங்குகிறார்கள். அதோடு குறைவில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

தனது மணவாழ்க்கை பற்றியும், மனைவியை பற்றியும் ரன்வீர்சிங் புகழ்வதை தொடர்ந்து படியுங்கள்:

தீபிகாவிடம் பிடித்தவை: அவர் மிகவும் அமைதியான பெண். ஆர்ப்பாட்டமில்லாத அழகு கொண்டவர். நல்ல நடிகை என்பதைவிட நல்ல பெண் என்பது அவருக்கான கூடுதல் தகுதி. வாழ்க்கைத்துணை என்று வரும்போது நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. அதற்கு தக்கபடி தீபிகா எல்லா சூழ்நிலைகளையும் அனுசரித்து போகக்கூடியவர். குடும்பத்தின் மதிப்பு தெரிந்தவர். உறவுகளிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒரு நல்ல குடும்பத் தலைவியாக இருக்கத் தகுதியானவர்.

தீபிகா நேர்மையான பெண். பொய் பேச மாட்டார். பெரிய ஸ்டார் என்ற வெட்டி பந்தா எல்லாம் அவரிடம் கிடையாது. அவரோடு இருக்கும் உதவி ஆட்கள் உள்பட எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். யார்மீதும் தன் டென்ஷனை காட்டமாட்டார். கோபமாக பேச மாட்டார்.

எளிமையும், இனிமையும்: திரையில் நாகரிக பெண்ணாக தெரிந்தாலும் உண்மையில் மிக எளிமையானவர். எளிமையான உடையில் சகஜமாக இருக்கக் கூடியவர். இந்த ஹை-டெக் வாழ்க்கை மிகவும் போலியானது. போலி எப்போதும் மனநிறைவை தருவதில்லை என்று கூறுவார். அவரை வழிநடத்த யாரும் தேவையில்லை. தன்னைத் தானே திருத்திக் கொண்டு வாழும் பக்குவமுடையவர். அவரிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

தீபிகாவுக்கு மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவது பிடிக்காது. அது நல்ல பெண்களிடம் இருக்க வேண்டிய பழக்கம். அது அவரது தகுதியை உயர்த்திக்காட்டுகிறது. அவர் எல்லா விஷயங் களிலும் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து வாழக்கூடியவர்.நேரத்தை வீணடிக்க மாட்டார். காலம் தவறாமை அவருடைய சிறப்பு. சினிமாவிற்கு வந்ததும், பல விஷயங்களை நான் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன். நேர நிர்வாகம் என்பது பெரிய விஷயம். அதை தீபிகாவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

காதல் அனுபவங்கள்: ‘காக்டெய்ல்’ படப் பிடிப்பின்போது தான் நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன். ‘அவர் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை இனிக்கும்’ என்ற முடிவுக்கு வந்தேன். அதை தொடர்ந்து பல படங்கள் எங்களை ஜோடியாக இணைத்தது. ராம்லீலா, கோலியேங் கீ ரஸ்லீலா, பத்மாவதி போன்ற வெற்றிப் படங்கள் எங்களை ஜோடி சேர்த்து பார்த்தது. ரசிகர்களும் எங்கள் ஜோடியை விரும்பினார்கள். பாலிவுட்டில் வெற்றி ஜோடி என்று பெயர் பெற்றுவிட்டோம். அப்போதுதான் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர தீர்மானித்தோம்.

மணவாழ்க்கை மகிழ்ச்சி: தீபிகா இப்போது என் மனைவி. சிறந்த மனைவியாக தன் கடமைகளை சரிவர நிறைவேற்றுகிறார். அவரை கவனித்துக்கொள்ள பல பேர் இருந்தாலும் என்னை அவர் கவனித்துக் கொள்வது எனக்குப் பெருமையான விஷயம். எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்றெல்லாம் என்னிடம் கேட்கும்போது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தீபிகா சிறந்த மனைவி என்று என் மனம் பெரு மிதம் கொள்கிறது.

திருமணம் என்பது நம் வாழ்க்கையில் பெரும்மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. நல்ல மனைவி கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம் தான். அந்த வகையில் நான் உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி. தீபிகா குடும்பத்தை நேசிக்கும் பெண். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவரை பிடிக்கும்.

சினிமா வாழ்க்கை: திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிப்பீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். அது இயக்குநர் எடுக்க வேண்டிய முடிவு. தீபிகா ஒரு நல்ல நடிகை. அவரோடு நடிப்பது சிறந்த அனுபவம். இந்த ஆண்டு இருவரும் தனித் தனியாகத் தான் நடித்துக்கொண்டிருக்கிறோம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். ஆனால் அதற்கு அதிக உழைப்பு, சிறந்த கற்பனைத் திறன் தேவை. தீபிகாவின் கையில் கொடுக்கப்படும் எல்லா கதாபாத்திரங்களும் ஜீவன் பெற்றுவிடும் என்று இயக்குநர்கள் புகழ்வதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கரண் ஜோகர் இயக்கத்தில் ‘‘தக்த்’’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதில் தேவியின் மகள் ஜான்விகபூரும் நடிக்கிறார். முகலாய மன்னரின் கதை. நான் ஷாஜகான் மகனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ளார். என் பெற்றோரும், மனைவியும் பெருமைபடும்படி என் திரை உலக வாழ்க்கை இருக்கும் என்று நம்புகிறேன்.

Next Story