சிறப்புக் கட்டுரைகள்

மீண்டும் கலங்கடிக்கும் ‘ஹைட்ரோ கார்பன்’ + "||" + Re-stirred 'hydro carbon'

மீண்டும் கலங்கடிக்கும் ‘ஹைட்ரோ கார்பன்’

மீண்டும் கலங்கடிக்கும் ‘ஹைட்ரோ கார்பன்’
பூமிக்கு அடியில் ஹைட்ரஜனும், கார்பனும் நிறைந்திருப்பதால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் பூமிக்கு அடியில் ஹைட்ரஜனும், கார்பனும் நிறைந்திருப்பதால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 55 இடங்களில் மொத்தம் 59 ஆயிரத்து 282 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ கார்பனை எடுக்க மத்திய அரசு அழைப்பு விடுத்தது. விழுப்புரம், நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ச.கி.மீட்டர் பரப்பளவிலான விளை நிலப்பகுதிகளில் வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளுக்கும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு மேலும் புதிதாக 67 கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி தற்போது முதற்கட்டமாக திருக்கார வாசல், பெரியகுடி, திருக்கார், ராயநல்லூர் அரிச்சபுரம், கீழ்வேலூர், வேதாரண்யம், சீர்காழி, தரங்கம்பாடி, திருமலைராயன்பட்டினம், கோட்டுச்சேரி, புவனகிரி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளிலும் உடனடியாக அமைத்திட தற்போது மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மே 10-ந் தேதி சுற்றுச்சூழல் தடை இல்லா சான்று பெறுவதற்காக ஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.

இப்படி ஆய்வுகள் மேற்கொள்வதால் பூமி கீழ்பரப்பு நிர்மூலமாக்கப்படுவதால் பூகம்பம் ஏற்படும், நிலத்தடி நீர் அழியும், மண் மலட்டுத்தன்மை அடையும், மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறும். இந்த ஆய்விற்கு பிறகு அவர்கள் விருப்பத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி எரிவாயு கிணறுகள் அமைக்க தொடங்குவார்கள். ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமலேயே திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியங்களில் ஆய்வு தொடங்கிய நிலையில் அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதோடு பாதிப்புகளை ஆதாரத்துடன் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு சென்றபோது அதனை ஏற்று ஆய்வுக்குழு அமைத்து அதன் அறிக்கையை பெற்று ஆய்விற்கும், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கும் 2015-ல் நிரந்தர தடை விதித்து தடுத்து நிறுத்தியுள்ளார். இது குறித்து தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் நாங்கள் தொடர்ந்த வழக்கிலும் தனது அரசின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலம் தடையை நீக்கிவிட்டு பேரழிவு திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற உள்நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டுள்ள நிலையிலேயே அவசரகதியில் மத்திய அரசு அனுமதிகளை வழங்கி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா மற்றும் விழுப்புரம் மரக்காணம் தொடங்கி நாகை மாவட்டம் கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலம் திருமலைராயன்பட்டினம் காரைக்கால் பகுதிகளும் முற்றிலும் அழிந்து போகும். தமிழக வங்கக்கடல் பகுதியில் ஆழம் குறைவான பகுதியிலும் கிணறுகள் தோண்டும்போது மீன்வளம் முற்றிலும் அழிவதோடு, மீன்பிடி உரிமை பறிபோகும். மீனவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.யால் ஒரே ஒரு கிணறு தோண்டும்போது குழாயை உடைத்துக் கொண்டு வெளியேறிய கட்டுக்கடங்காத ஹைட்ரோ கார்பன் எரிவாயு அதிக சத்தத்துடன் வெளியேறி கட்டுப்படுத்த முடியாத பேராபத்து ஏற்பட்டது. எந்நேரமும் தீவிபத்து ஏற்படலாம், கிணற்றை சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவில் அனைத்து கிராமங்களுக்கும் தீ பரவக்கூடும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டது. மக்கள் ஒன்று திரண்டு கிணற்றை சிமெண்டு கொண்டு பாதுகாப்புடன் அடைத்து பாதுகாக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு கிணற்றில் வெளியேறிய வாயுவை கட்டுப்படுத்தவே முடிந்தது. ஒரு கிணற்றை மூடவே இந்த நிலை என்றால் 341 கிணறுகள் தோண்டினால் என்ன ஆகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இந்நிறுவனங்கள் ஆய்விற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்தது. இதனை அறிந்த நாங்கள் கடந்த 2-ந் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து ஏற்கனவே ஜெயலலிதா விதித்த தடையை நீக்கக் கூடாது. வேதாந்தாவிற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும், மத்திய அரசிற்கும் கண்டிப்புடன் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தோம். அதனை பெற்றுக்கொண்ட அவர் உறுதியாக அனுமதி அளிக்கமாட்டோம் என உறுதியளித்தார். ஆனால் இதுவரையில் எடப்பாடி பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்காதது சந்தேகமளிக்கிறது.

விவசாயிகள் விழிப்புடன் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

இத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிடும் என்று எதிர்பார்க்கிறோம். மறுக்கும் பட்சத்தில் ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களை எங்கள் மண்ணில் கால்பதிக்க விடமாட்டோம். விரட்டியடிப்போம். வலிமையோடு போராட்டக்களத்தில் ஈடுபடுவோம். எங்கள் மண் எங்களுக்கே சொந்தம் நிலம் கொடா இயக்கங்களை கிராமங்கள் தோறும் தொடங்க உள்ளோம்.

- பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.