சென்செக்ஸ் 372 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 131 புள்ளிகள் இழப்பு


சென்செக்ஸ் 372 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 131 புள்ளிகள் இழப்பு
x
தினத்தந்தி 14 May 2019 3:42 AM GMT (Updated: 14 May 2019 3:42 AM GMT)

ஒன்பதாவது நாளாக பங்கு வர்த்தகம் படுத்தது சென்செக்ஸ் 372 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 131 புள்ளிகள் இழப்பு

மும்பை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று, ஒன்பதாவது நாளாக பங்கு வர்த்தகம் படுத்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 372 புள்ளிகள் வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 131 புள்ளிகள் இழந்தது.

உலக நிலவரங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகளால் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போட்டி தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன. எனவே சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன.

உலக நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உள்நாட்டில் மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் குறைந்து இருப்பது பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதைக் காட்டுவதாக தகவல் வெளியானது. மேலும் பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு வெளிவர இருந்த சில்லரை பணவீக்க புள்ளிவிவரம் பற்றிய ஐயப்பாடும் சேர்ந்து கொண்டது. எனவே லாப நோக்கில் பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்தது. எனவே நேற்றும் பங்குச்சந்தைகள் சுருண்டன.

அந்த நிலையில், மும்பை சந்தையில் ஐ.டி. தவிர அனைத்து துறை குறியீட்டு எண்களும் இறங்கின. அதில் மருத்துவ துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.53 சதவீதம் சரிந்தது. அடுத்து பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டு எண் 2.54 சதவீதமும், மின்சார துறை குறியீட்டு எண் 2.42 சதவீதமும் இறங்கின.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 23 நிறுவனப் பங்கு களின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் எச்.டீ.எப்.சி., இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய 7 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் சன் பார்மா, யெஸ் வங்கி, டாட்டா ஸ்டீல், இண்டஸ் இந்த் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி, என்.டி.பி.சி. உள்ளிட்ட 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 372.17 புள்ளிகள் சரிவடைந்து 37,090.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,583.57 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 36,999.84 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 575 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1889 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 180 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,319 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,372 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 130.70 புள்ளிகள் இறங்கி 11,148.20 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,300.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,125.60 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story