தினம் ஒரு தகவல் : ஆக்சிஜனின் அவசியம்


தினம் ஒரு தகவல் : ஆக்சிஜனின் அவசியம்
x
தினத்தந்தி 14 May 2019 4:06 AM GMT (Updated: 14 May 2019 4:06 AM GMT)

நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப்பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை.

தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது.

நமது மார்பில் உள்ள இரண்டு நுரையீரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் மிக மிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியில் இருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.

உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்கு தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும். காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம்.

சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். காற்றில் கலந்திருக்கும் பிராண வாயு‘ என்ற ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்சிஜன் வாயுவும் இருக்கின்றன.

மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான் உள்ளது. மேலும் கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன்-டை ஆக்ஸைடு, ஓசோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் 16 விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.

காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்சிஜன் வாயுதான், நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்சிஜனில் 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் அனைத்து உயிருக்கும் ஆபத்துதான். இந்த 21 சதவீத ஆக்சிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான்.

காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப்போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும். மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கார்பன்-டை ஆக்ஸைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்சிஜன் வாயுவை வெளியே விடுகிறது.

சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்சிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.


Next Story