சிறப்புக் கட்டுரைகள்

தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு + "||" + Tea production up 12 percent

தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு

தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி 12 சதவீதம் உயர்வு
புதுடெல்லி

நம் நாட்டில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) 10.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 12 சதவீத உயர்வாகும்.

இரண்டாவது இடம்

உலக அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டுதான் தேயிலை பருவமாக உள்ளது. தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது.

உள்நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்து 131 கோடி கிலோவாக இருந்தது. உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் நிலவிய மோசமான பருவநிலையே அதற்குக் காரணமாக இருந்தது.

இந்நிலையில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் மொத்தம் 10.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 9.22 கோடி கிலோவாக இருந்தது. ஆக, தேயிலை உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

கணக்கீட்டுக் காலத்தில் அசாம் மாநிலத்தில் மட்டும் 3.33 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்து மேற்கு வங்காளத்தில் 2.91 கிலோ உற்பத்தி ஆகி உள்ளது. தென் மாநிலங்களில் உற்பத்தி 3 சதவீதம் மட்டும் அதிகரித்து (3.83 கோடி கிலோவில் இருந்து) 3.95 கோடி கிலோவாக உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில், மார்ச் மாதத்தில் மட்டும் 7.46 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 6.10 கோடி கிலோவாக இருந்தது. ஆக, உற்பத்தி 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் ஆர்தோடக்ஸ், சி.டி.சி. ஆகிய இரண்டு தேயிலை ரகங்கள் பயிராகின்றன. ஆர்தோடக்ஸ் என்பது உயர்தர தேயிலை ஆகும். இத்தேயிலை ஈராக், ஈரான் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பொதுவாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காபி நுகர்வு

உள்நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் சுமார் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தேயிலை நுகர்வு மிக அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.