தினம் ஒரு தகவல் : குப்பையும் காசுதான்!


தினம் ஒரு தகவல் : குப்பையும் காசுதான்!
x
தினத்தந்தி 17 May 2019 1:25 AM GMT (Updated: 17 May 2019 1:25 AM GMT)

மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது.

நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் உள்ளிட்டவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே அதுவும் உங்கள் பணம்தான். மறைமுகமாக நீங்கள் உங்கள் பணத்தை குப்பையில் தூக்கி எறிகிறீர்கள். சரி, இப்படி காலியான பாட்டில், டப்பா, கண்ணாடி, பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் உங்களுக்கு தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!

பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடைவிதித்தாலும், நம் அன்றாட வாழ்வில் பாலிதீன் பைகள் இணைந்து விட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது தண்ணீர் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக்கில் ‘கடக்‘ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது. நீஙகள் டிவி., மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது. பிளாஸ்டிக் ஒயர்கள் துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80-க்கு வாங்கிக் கொள்கிறார்கள். தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையும் விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது. பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையும் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆகஇனியாவது குப்பைகளை வீண் என்று தூக்கி எறியும் முன் ஒரு நொடி சிந்திப்போம். இதை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்குங்கள். நாளை உங்கள் குழந்தை எதையும் வீணாக்க துணியாது. காசின் மதிப்பை எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க இதுவும் ஒரு நல்ல ஐடியா!


Next Story