நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக உயர்ந்தது


நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக உயர்ந்தது
x
தினத்தந்தி 17 May 2019 1:37 AM GMT (Updated: 17 May 2019 1:37 AM GMT)

இறக்குமதி 4.5 சதவீதம் அதிகரித்த நிலையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக உயர்ந்தது சரக்குகள் ஏற்றுமதி 0.64% மட்டும் அதிகரிப்பு

புதுடெல்லி

ஏப்ரல் மாதத்தில், சரக்குகள் இறக்குமதி 4.5 சதவீதம் அதிகரித்த நிலையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது. அதேவேளையில் ஏற்றுமதி 0.64 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி 3.74 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,636 கோடி டாலரை எட்டி இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அது 2.44 சதவீதம் உயர்ந்து 2,670 கோடி டாலரை எட்டியது. மார்ச் மாதத்தில் 3,255 கோடி டாலரை எட்டியது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத வளர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 0.64 சதவீதம் மட்டும் உயர்ந்து 2,607 கோடி டாலராக உள்ளது.

சர்வதேச நிலவரங்கள்

நவரத்தினம், ஆபரணங்கள், வேளாண் விளைபொருள்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவை பொது வாக நமது ஏற்றுமதியில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள துறைகளாகும். இந்த மூன்று துறைகளிலும் நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நிலவரங்களால் ஏற்றுமதி வேகம் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 4.5 சதவீதம் அதிகரித்து 4,140 கோடி டாலராக உள்ளது. அதனால், வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,372 கோடி டாலராக இருந்தது. முந்தைய மாதத்தில் (மார்ச்) 1,089 கோடி டாலராக இருந்தது.

கடந்த நிதி ஆண்டில்...

கடந்த 2018-19 நிதி ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் இறக்குமதி 8.99 சதவீதம் அதிகரித்து 50,744 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி 33,102 கோடி டாலராக இருக்கிறது. இது 9.06 சதவீத உயர்வாகும். எனவே சென்ற நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை 17,642 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பற்றாக்குறை 16,200 கோடி டாலராக இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) சரக்குகள் ஏற்றுமதி 35,000 கோடி டாலராக அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் சங்கம் மதிப்பீடு செய்து இருந்தது. எனினும் 33,000 கோடி டாலரைத் தாண்டும் என்ற மத்திய அரசு மதிப்பீட்டிற்கு இணையாக ஏற்றுமதி நிலவரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த சில ஆண்டுகளில் சரக்குகள் ஏற்றுமதியை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்து இருக்கிறார். இதற்காக விவசாயம், தோட்ட விளைபொருள்கள், மலைப்பயிர்கள் மற்றும் மீன் வளம் ஆகிய 4 துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் கூறி உள்ளார்.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மத்திய அரசு மறுஆய்வு செய்துள்ளது. இதில், 2020-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சேவைகள் ஏற்றுமதி

பாரத ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்தில் இருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. 2011 ஜூன் 15-ந் தேதி அன்று முதல் முறையாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேவைகள் வர்த்தகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.


Next Story