உலகின் உயரமான வாக்குச்சாவடியில் ‘ஜனநாயக திருவிழா’


உலகின் உயரமான வாக்குச்சாவடியில் ‘ஜனநாயக திருவிழா’
x
தினத்தந்தி 17 May 2019 2:15 AM GMT (Updated: 17 May 2019 2:15 AM GMT)

இமயமலையின் தாஷிகேங்... உலகின் உயரமான வாக்குச்சாவடியில் ‘ஜனநாயக திருவிழா’

இந்தியா பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் பேசும் மக்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு திருவிழா நடந்தாலும், ஒட்டுமொத்த இந்தியர்களை ஒருங்கிணைக்கும் திருவிழா எது என்றால், அது நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தான்.

இந்த திருவிழாவில் அனைவரையும் பங்கேற்க செய்யும் பணியினை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒரு குடிமகன் ஓட்டு போடாவிட்டாலும், அந்த குடிமகன் ஓட்டு போடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதில் தேர்தல் ஆணையம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

உதாரணமாக கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசிக்கும் ஒரு வாக்காளருக்காக அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. அதே போல் இந்த தேர்தலில் கூட காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள கெயிக் கிராமத்தில் 12 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

வன பகுதிகள்

நகரங்களிலும், சாலை வசதிகள் உள்ள கிராமங்களிலும் வாக்குச்சாவடி அமைப்பதில் சிக்கல்கள் எதுவும் கிடையாது. ஆனால் அதுவே வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் வாக்குச்சாவடி அமைப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளன. கழுதைகள், குதிரைகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் காட்சிகளை நமது மாநிலத்தில் கூட இன்னும் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். இதுகூட பரவாயில்லை, இமாசல பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் பல மைல் தூரம் ஓட்டுப்பதிவு எந்திரங்களை தூக்கி கொண்டு பனிப்பொழியும் மலைகளில் நடந்து செல்ல வேண்டும்.

அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் கரடு, முரடான அடர்ந்த வன பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இது போன்ற பணிகள் தேர்தல் ஆணையத்திற்கு மிகுந்த சவாலானதாகும். இந்த சவாலில் எல்லாம் தேர்தல் ஆணையம் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறது.

உயரமான...

அதே போல் உலகின் மிக உயரமான இடத்தில் வாக்குச்சாவடி அமைத்து அங்கு தேர்தல் பணிகளை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இமாசல பிரதேசத்தில் உள்ள ஹிக்கீம் என்ற கிராமத்தில் 14 ஆயிரத்து 356 அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் அதனை விட உயரமாக அதாவது 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் தாஷிகேங் என்ற இமயமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தான் உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி என்ற பெயரை தற்போது பெற்றுள்ளது. இங்கு வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இது மாண்டி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.

இந்த கிராமம் இமாசல பிரதேசத்தில் உள்ள லாகுல்- ஸ்பிட்டி என்ற மாவட்டத்தில் காசா என்ற நகரில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்திய-சீனா எல்லையில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. இமயமலையின் அழகை தன்னுள் போர்த்தி கொண்ட இந்த கிராமத்தின் அழகை எழுத்துக்களால் விவரிக்க முடியாது.

பண்டைய கிராமம்

இந்துக்களின் புனித தலமான மானசரோவர் ஏரியில் இருந்து உற்பத்தியாகும் சட்லஜ் நதி, இந்த தாஷிகேங் கிராமம் வழியாக தான் பஞ்சாப் மாநிலத்திற்கு செல்கிறது. இது இமயமலையில் உள்ள பண்டைய கிராமங்களில் ஒன்று. பல நூற்றாண்டுகளாக இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டுமுழுவதும் பனிப்பொழிவை கண்டு களிக்கலாம்.

கோடை காலமான தற்போது கூட அங்கு 10 பாரன்ஹீட் டிகிரி வெயில் தான் இருக்கி றது. இந்த கிராமத்தில் சுமார் 6 வீடுகள் மட்டுமே உள்ளன. 20 பேர் வரை வசிக்கின்றனர். ஒரு சிறிய ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. அதில் 4-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியும், 1-ம் வகுப்பு பயிலும் மாணவன் மட்டுமே கல்வி கற்கின்றனர்.

சுற்றுலா கட்டிடம்

கடந்த தேர்தலில் இந்த கிராமத்து மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெட் என்ற கிராமத்திற்கு சென்று தான் வாக்களித்தனர். கெட் கிராமம், தாஷிகேங் கிராமத்தை விட பெரியது. அங்கு 70-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். கடந்த தேர்தலில் அங்குள்ள பள்ளி ஒன்று தான் வாக்குச்சாவடி மையமாக செயல்பட்டது. ஆனால் தற்போது அந்த பள்ளி முற்றிலும் சேதமடைந்து விட்டது. எனவே அந்த பள்ளியை அருகில் உள்ள மற்றொரு கிராமத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர்.

அதனால் தான் தற்போது வாக்குச்சாவடி மையத்தை அருகில் உள்ள தாஷிகேங் கிராமத்தில் அமைத்துள்ளனர். அங்கு இமயமலையின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்காக, அரசின் சுற்றுலா கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தான் தற்போது வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த வாக்காளர்

இந்த வாக்குச்சாவடி மையத்தில் தாஷிகேங் மற்றும் கெட் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 49 ஆகும். ஆனால் அதில் கடந்த வாரம் 81 வயது கொண்ட டோலுமா சோசம் என்ற பெண் உயிரிழந்து விட்டார். எனவே தற்போதைய வாக்காளர்கள் 48 ஆகும். அதில் ஆண்கள் 29. பெண்கள் 19. அதில் 72 வயது கொண்ட சோனம் டோல்மா என்ற பெண் தான் மிகவும் மூத்த வாக்காளர். 18 வயது கொண்ட டேன்சின் குன்சல் பெண் தான் வயது குறைந்த வாக்காளர். இவரை தற்போது தான் வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளனர்.

இந்த கிராமத்தின் தேர்தல் பணிகளை மாவட்டத்தின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவன் சிங் நேகி மற்றும் அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிசந்த் பதாக் ஆகியோர் செய்து வருகிறார்கள். அவர்கள் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

மின்சார வசதி

தாஷிகேங் கிராமத்தில் தான் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது. ஏனென்றால் கடந்த முறை இந்த கிராம மக்கள் வாக்களித்த கெட் கிராம வாக்குச்சாவடி மிகுந்த சேதம் அடைந்து விட்டது. எனவே அதனை வேறு கிராமத்திற்கு மாற்றி அமைத்தால், தாஷிகேங் மற்றும் கெட் கிராம மக்கள் நீண்ட தொலைவு தூரம் செல்ல வேண்டி இருக்கும். எனவே தான் தாஷிகேங் கிராமத்தில் உள்ள அரசின் சுற்றுலா பயணிகள் கட்டிடத்தில் அமைத்து இருக்கிறோம். ஆனால் இங்கு வாக்குச்சாவடி அமைக்க திட்டமிட்ட போது, அந்த கட்டிடம் முழுவதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து இருந்தது. கட்டிடத்திற்கு செல்ல பாதை கிடையாது. 5 அடி முதல் 10 அடி வரை பனி சூழ்ந்து இருந்தது. அவற்றை பொதுப்பணித்துறை மூலம் அகற்றி பாதையை ஏற்படுத்தி இருக்கிறோம். வாக்குச்சாவடி கட்டிடத்தில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

தாஷிகேங் கிராம மக்கள் வசிக்கும் 600 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த வாக்குச்சாவடி மையம் உள்ளது. ஆனால் கெட் கிராம மக்கள் இங்கு வருவதற்கு வசதியாக வாகன ஏற்பாடு செய்து இருக்கிறோம். இங்கு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த வாக்குச்சாவடி தேர்தல் பணியில் 3 அலுவலர்கள், 2 பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு மேற்பார்வையாளர்கள் என 6 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், தாஷிகேங் கிராம மக்கள் அணியும் கலாசார ஆடையை அணிந்து, வாக்காளர்களை வரவேற்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் குளறுபடி, பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது நாம் பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் தாஷிகேங் போன்ற கிராமங்களில் வாக்குச் சாவடி மையம் அமைத்து அங்குள்ள மக்களும் தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கத்தான் வேண்டும்.

102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர்



கடைசி தேர்தல் என உருக்கம்

உலகின் உயரமான வாக்குச்சாவடி என்ற பெருமையோடு, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரை கொண்ட மாநிலம் இமாசல பிரதேசம் ஆகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்தது. அந்த மாதங்களில் இமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அங்கு மட்டும் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் முதல் வாக்காளராக வாக்களித்த பெருமை இமாசல பிரதேசம் கின்னார் மாவட்டம் கல்பா கிராமத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகியை சேரும். இவர் அங்குள்ள தொடக்க பள்ளியில் ஆசிரியராக இருந்தார். எனவே இந்த பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தேர்தல் அலுவலராகவும் பணியாற்றினார். எனவே அங்கு தனது வாக்கினை முதலாவதாக பதிவு செய்தார். அதன்படி இந்தியாவின் முதல் சுதந்திர வாக்காளர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

தினத்தந்திக்கு பேட்டி

ஷியாம் சரண் நேகியின் வயது 102 ஆகும். அவர் இதுவரை நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் அந்த மாநிலத்தில் நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் தனது வாக்கினை பதிவு செய்து இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இவர் தேர்தல் ஆணையத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டார். இவரை, கின்னார் மாவட்ட கலெக்டர் தனது காரிலேயே வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்தார்.

முன்னதாக ஷியாம் சரண் நேகி தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என்றும், தினத்தந்தி நாளிதழ் குறித்தும் அறிந்து இருக்கிறேன். முதன் முதலில் தமிழர்களை சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அனைவரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார். பின்னர் ஷியாம் சரண் நேகி இந்தியில் நமஸ்தே என்று சொல்வது போல், தமிழில் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டு வணக்கம் என்றார். அதேபோல் தான் எப்போதும் அணியும் பாரம்பரிய தொப்பிக்கு பதிலாக தினத்தந்தி எழுத்துக்கள் பொறித்த தொப்பியை அணிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

கடைசி தேர்தல்

வருகிற 19-ந் தேதி அங்கு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் வாக்களிக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக வாக்குச்சாவடியில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.

இதுகுறித்து ஷியாம் சரண் நேகி கூறும்போது, இந்த தேர்தல்தான் எனது கடைசி தேர்தல் என்று உருக்கமாக கூறினார். மேலும் இப்போதும் சொல்கிறேன், அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாட்டை வளமாக்க வேண்டும் என்றார்.


Next Story