பாரம்பரிய சின்னங்கள் உயிர்க் கருவூலமான பவளப்பாறைகள்


பாரம்பரிய சின்னங்கள் உயிர்க் கருவூலமான பவளப்பாறைகள்
x
தினத்தந்தி 17 May 2019 6:19 AM GMT (Updated: 17 May 2019 6:19 AM GMT)

நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் பாரம்பரியச் சின்னம் பவளப்பாறை மண்டலமாகும்...

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான குயின்ஸ்லாந்தில் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மேல்பரந்து விரிந்திருக்கிறது பவளப்பாறைகளான உயிர்ச்சூழல் மண்டலம். ‘கிரேட் பேரியர் ரீப்’ எனப்படும் இந்த பெரிய பவளப்பாறை திட்டுகள் 2 ஆயிரத்து 900 பவளப்பாறை உயிரினங்கள் ஒன்றிணைந்து உருவானதாகும். 900 தீவுகள்போல அருகருகே இவை அமைந்துள்ளன. 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்த பவளப்பாறை மண்டலம் ஆக்கிரமித்துள்ளது. இதுவே பூமியின் உயிர்ச்சூழல் உருவாக்கிய மிகப்பெரிய கட்டுமானமாகும். பழமையானதும் கூட.

பவளப்பாறை என்பது பலநூறுகோடி பாலிப் நுண்ணுயிர்கள் வாழ்ந்து மடிவதால் உருவாகிறது. வண்ணமயமான பவளப்பாறை உயிருள்ள பாலிப்புகளால் உருவாக்கப்படுகிறது. இவை கடலின் வானவில்போல பளிச்சிடும். நீலம், பச்சை, இளஞ்சிவப்பு என வர்ணஜாலம் காட்டும்.

கடல்சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் டைவிங் ஆர்வம் உள்ளவர்களுக்கு பவளப்பாறைகள் சொர்க்கபூமியாக திகழ்கிறது. இங்கு 1500 வகையான மீன் இனங்கள், சுமார் 4 ஆயிரம் வகை மெல்லுடலி உயிரினங்கள் வாழ்கின்றன. அறியாத பல்வேறு நுண்ணுயிர்கள் இங்கு வாழ்கின்றன என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

பவளப்பாறைகள் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமாதல் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இது குறித்து எச்சரித்துள்ளனர். உலகின் பல பவளப்பாறைகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் அழிவை எட்டும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பவளப்பாறைகளை பின்னணியாக கொண்ட கடற்கரைகளான ஒயிட்சண்டே தீவு மற்றும் ஒயிட்ஹெவன் கடற்கரை போன்றவை உலகின் சிறந்த 5 கடற்கரைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர ்ரீப் பவளப்பாறை மண்டலம் 1981-ல் உலகின் புரதான சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டது. 


Next Story