ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு


ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு
x
தினத்தந்தி 18 May 2019 1:55 AM GMT (Updated: 18 May 2019 1:55 AM GMT)

முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி புள்ளி விவரங்கள்

இந்திய நிறுவனங்கள் தமது ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

மின்டா இண்டஸ்ட்ரீஸ்

மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.74 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 46 சதவீத சரிவாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.1,371 கோடியில் இருந்து) ரூ.1,486 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 5 சதவீதம் சரிந்து ரூ.286 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது ரூ.310 கோடியாக இருந்தது. மொத்த லாபம் 32 சதவீதம் அதிகரித்து ரூ.5,908 கோடியாக உள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி

ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.6 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்திற்கு ரூ.480 கோடியை இழப்பாகக் கண்டிருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.1,879 கோடியில் இருந்து) ரூ.2,018 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் இந்நிறுவனம் ரூ.684 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.85 கோடியாக இருந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

பஜாஜ் பின்செர்வ்

பஜாஜ் பின்செர்வ் நிறுவனம், நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ரூ.839 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.637 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 32 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 44 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.12,995 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

எச்.எப்.சி.எல்.

இமாச்சல் பியூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (எச்.எப்.சி.எல்.), மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.57.51 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.58.24 கோடியாகஇருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 16 சதவீதம் அதிகரித்து ரூ.1,095 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 35 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.232 கோடியாக அதிகரித்து இருக்கிறது. அந்த ஆண்டில் இதன் வருவாய் 46 சதவீதம் உயர்ந்து ரூ.4,785 கோடியாக உள்ளது.

பீனிக்ஸ் மில்ஸ்

பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.228 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 147 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 66 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.723 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.3 (150 சதவீதம்) டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.


Next Story