சிறப்புக் கட்டுரைகள்

வாழ்வியல் வழிகாட்டி அருங்காட்சியகம்...! + "||" + Life Guide Guide Museum

வாழ்வியல் வழிகாட்டி அருங்காட்சியகம்...!

வாழ்வியல் வழிகாட்டி அருங்காட்சியகம்...!
இன்று (மே18-ந்தேதி) சர்வதேச அருங்காட்சியக தினம்.
வருங்காலத்தில், ஒரு ஆழிப்பேரலையோ ...வேறு கிரகங்களின் மோதலோ, நில அதிர்வுகளோ வந்து, இந்த பூமி பந்து ஓர் அழிவை சந்தித்தால் இம் மண்ணில் மனிதர்கள் வாழ்ந்து போனதற்கு அடையாளமாக என்ன மிச்சம் இருக்கும் ?

இப்போதைய உலகில் உபயோகப்படுத்தும் பேப்பர், கம்ப்யூட்டர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வழியாக நாம் சேகரித்து வைக்கும் பதிவுகளும், வரலாற்று புகைப் படங்களும் அறிவியல் தகவல்களும் ஏதாவது மிஞ்சுமா ?

இதைக்கொண்டு பின்னர் வரும் உயிரினம் கடந்த கால உலக மக்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது...கம்ப்யூட்டருக்குள் பதிவான அனைத்து தகவல்களும் அழிவைச் சந்திக்கும். ஆனால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை மட்டும் அழியாமல் எஞ்சி நிற்கும். அதற்கு முக்கிய காரணம், கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள், மூலமாக வரலாற்றை பதிய வைத்துள்ள அவைகளை, அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்திருப்பதே ஆகும்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஆதி கால மனிதர்கள் தங்களது வாழ்க்கையை முதன் முதலாக பதிய வைத்தது குகை ஓவியங்கள் வழியாகத்தான். அதன் பின்னர் மொழி கண்டறியப்பட்ட பின் தங்களது மூதாதையர்களின் வாழ்வை தொன்மக் கதைகள் மற்றும் பாடல்கள் வழியாக பாதுகாத்து வந்தனர். இன்றில் இருந்து 6 ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுத்து வடிவில் தங்களது எண்ணங்களை களிமண் பலகைகளில் பதிந்தனர். ஆனால் அதன் பின் நடந்த இயற்கை மாற்றங்களினால் அந்த ஆரம்ப கால நாகரிகங்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்து போயின.

பின்னர் உலகமெங்கும் உருவான பல்வேறு நாகரிகங்களில், அரச அமைப்புகளும், மதங்களும், சமய தத்துவங்களும் எழுத்து, மொழி கலை இலக்கியம் கட்டிடம் வழியாக பல்வேறு தளங்களில் வீறு கொண்டு படைப்புகளை படைத்தனர். ஆனால் தங்கள் மதத்தை பரப்புவதற்காவும், நாடு பிடிக்கின்ற ஆசையிலும் நடந்த போர்களினால், உலகமெங்கிலும் இருந்த பண்டைய வரலாற்று பதிவுகள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டன. மிஞ்சியவை மக்களால் பாதுகாக்கப்படாமல் மண்ணோடு மண்ணாயின.

கி.பி. 1600-க்கு பின் உலகமெங்கும் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தவர்களில் பிரிட்டீஷ், மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் முக்கியமானவர்கள். இவர்களும் ஆரம்ப காலங்களில் தாங்கள் பிடித்த நாடுகளில் இருந்த வரலாற்று சின்னங்களை வணிக நோக்கில் கொள்ளையடித்து சென்றனர். ஆனால் அதே காலத்தில் உலகளவில் மாபெரும் மாற்றங்கள் நடந்தது. அதற்கு முக்கியமான காரணம் அறிவியல். உலகத்தின் படைப்பு உயிர்களின் தோற்றம், மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி உயிர்கள் தோற்றம் பற்றி அறிவியல் ஆராய ஆரம்பித்தவுடன், அனைவருக்கும் வரலாறு பற்றிய தேடலும் விழிப்புணர்வும் வந்தது.

அதன் தொடர்ச்சியாக தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் இருந்த பழங்கால பொருட்களை தங்களது நாடுகளுக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஆரம்பித்தனர். அதற்காக பிரிட்டீஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் முதன் முதலாக அருங்காட்சியகத்தை உருவாக்கினார்கள். அத்தோடு தாங்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலும் அருங்காட்சியகத்தை உருவாக்கி வரலாற்று நினைவுகளை பாதுகாக்க ஆரம்பித்தனர்.

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் இந்திய அருங்காட்சியகம் எனப்பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்ற இடத்தில் உள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த தாவரவியலாளரான மருத்துவர் நத்தானியேல் வாலிக் என்பவரால் 1814 -ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான அருங்காட்சியகமாக விளங்குகிறது. 1851-ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் என ஆறு துறைகள் உள்ளன.

இதேபோல மாவட்டங்கள் தோறும் நிறுவப்பட்டு உள்ளன. அருங்காட்சியகத்தில் உள்ளவை பொருட்கள் அல்ல. நம் முன்னோர்கள் கடந்து வந்த பாதையும், வாழ்வியலுமாகும். அன்றாட வாழ்வில் திரைப்படம், ஆன்மிகம், விளையாட்டு, பொழுதுபோக்கிற்கு பல மணி நேரம் செலவிடும் நாம், அருங்காட்சியகத்துக்கு அடிக்கடி சென்று வரவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அதுதான் தொல்லியல் துறையில் உழைக்கும் பல்வேறு ஆய்வாளர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்..!

- பொன்வண்ணன், திரைப்பட இயக்குனர்.