சிறப்புக் கட்டுரைகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharayya Usharoo ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
அவள் சிறுநகரம் ஒன்றை சேர்ந்தவள். ஓரளவு வசதிபடைத்தவள். பெருநகரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறாள்.
கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்களில் சிலர் அவள் மீது காதல் கொண்டார்கள். அவளை வசீகரித்து தங்கள் காதலை வெளிப்படுத்த பலவிதங்களில் முயற்சி செய்தார்கள். ஆனால் அவளோ, ‘கல்லூரிக்குள் யாரையும் காதலிக்கக்கூடாது’ என்ற எண்ணத்தில், எந்த மாணவருக்கும் பிடிகொடுக்காமல் இருந்தாள்.

சில மாணவர்கள் பலவிதங்களில் முயற்சித்தும் அவளது கடைக்கண் பார்வைகூட அவள் மீது விழாததால், ‘ச்..சீ.. இந்த பழம் புளிக்கும்’ என்று கூறிக்கொண்டு, ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் சற்று முரட்டுத்தனமான ஒரு மாணவன் மட்டும், எப்படியாவது அவளது காதலை அடைந்தே தீரவேண்டும் என்று, விடாமல் துரத்திக்கொண்டே இருந்தான். அவள் பல வழிகளில் தவிர்த்துப்பார்த்தும் அவன் ஒதுங்கிப்போவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் அவள், அவனை நோக்கி கண்சிமிட்ட சிலிர்த்துப் போனான். தனது காதலை அவள் ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியோடு அவன் நெருங்க, ‘சாயுங்காலம் பீச்சுக்கு தனியாக வா.. பேசலாம்..’ என்றாள்.

குறிப்பிட்ட நேரத்தில் அவன் வந்துவிட, இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். ‘ஒரு வருஷத்துக்கும் மேலாக என்னையே துரத்தி துரத்தி வர்றீயே.. உனக்கு என்னை ரொம்பவும் பிடிக்குமா?’ என்று அவள் கேட்டாள். ‘ஆமா நான் உன் அடிமை மாதிரி. நம்ம காதலுக்காக, உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றான்.

‘நீ என் மேல அந்த அளவுக்கு உயிரா இருப்பதால்தான் நானும் உன்னை காதலிக்கும் முடிவுக்கு இறங்கி வந்திருக்கேன். நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்..’ என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். அவன், அவளுக்காக உயிரைக்கூட கொடுக்கும் வேகத்தில் இருந்துகொண்டிருந்ததால், அவள் சொல்வதை எல்லாம் செய்து முடிக்கும் மனநிலையில் இருந்தான்.

‘என் தோழி ஒருத்தி ரொம்ப ஏழை. விவரம் தெரியாமல் ரவுடி ஒருத்தனை காதலிச்சிட்டாள். அவனும் முதலில் இவளை உருகி உருகி காதலிச்சிருக்கான். அவனோடு வெளியே சில இடங்களுக்கு போயிருக்கிறாள். அப்போது எக்குத்தப்பாக சில போட்டோக்களை எடுத்திருக்கான். இப்போ அவைகளை காட்டி மிரட்டி, வேற மாதிரி ‘யூஸ்’ பண்ணப்பார்க்கிறான். அவளை எப்படியாவது நாம அந்த மிருகத்திடம் இருந்து காப்பாத்தியாகணும்..’ என்று கண்கலங்க சொன்னாள்.

உடனே அவனும் ஆக்ரோஷமாக ‘அவனை என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு..’ என்றான். தனது செல்போனில் இருந்த அவனது போட்டோவை காட்டி, அவனை பற்றிய எல்லா விபரங்களையும் கூறி, ‘இரண்டு மூன்று பேருடன் சென்று அவனை அடிச்சிப்போட்டுகிட்டு, அவனிடம் இருக்கும் செல்போனை மட்டும் பிடுங்கி, உடனே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடு’ என்றாள்.

அவனும், அவளுக்காக அதை செய்யத் துணிந்தான். தனது நண்பர்கள் இருவரை சேர்த்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அந்த நபரை தேடிப்போனான். சில நாட்கள் காத்திருந்து, அவன் தனியாக வந்தபோது அடித்துப்போட்டுவிட்டு அவனது செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பினார்கள். அப்போதுதான் அடிதடியில் பங்குபெற்ற அவனது நண்பர்களில் ஒருவன், ‘டேய் உன் காதலி.. அவனை ஏரியா ரவுடி என்று சொன்னாள். ஆனால் அவன் ஒரு அப்பாவியாக தெரிகிறானே! ஏதோ தப்பு நடந்தது மாதிரி தெரியுது. நமது சந்தேகத்தை தீர்க்கிறதுக்கு அந்த போனை நோண்டிப்பாரு.. என்ன படம் இருக்குது.. யாரு படம் இருக்குதுன்னு பார்த்துடலாம்’ என்றான்.

அந்த செல்போனில் இருந்த படங்களை தேடிக்கண்டுபிடித்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இருந்த படங்களில், அடிப்பதற்கு இவர்களை ஏவிவிட்ட அந்த கல்லூரி மாணவியும், அடிவாங்கியவனும் நெருக்கமாக இருந்த காட்சிகளே நிறைய இருந்தன. அதுவும் அவள் விரும்பி ‘போஸ்’ கொடுத்த காட்சிகளே காணப்பட்டன.

அதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த அவர்கள், அடிவாங்கியவரை தேடிச்சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு, ‘உண்மையை சொல்லுங்கள். அந்த கல்லூரி மாணவிக்கும்- உங்களுக்கும் என்ன பிரச்சினை?’ என்று செல்போனில் இருந்த படங்களைகாட்டி விளக்கம் கேட்க ‘நானும், அவளும் காதலித்தோம். அவளுக்கு நிறைய பணமும் செலவு செய்தேன். என்னோடு பல இடங்களுக்கு வந்தாள். இப்போது திடீரென்று என் வேலை பறிபோய்விட்டது. அவளுக்காக தொடர்ந்து பணத்தை வாரிஇறைக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டேன். அதனால் என்னை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறாள். அவள் வேறு யாரையாவது காதலித்தால், எதிர்காலத்தில் நான் இந்த படங்களைவைத்து அவளை மிரட்டிடுவேன்னு பயந்து, என்னை அடித்துப்போட்டுவிட்டு அவள் படங்கள் இருக்கும் செல்போனை பறித்து வரும்படி கூறியிருக்கிறாள். அவள் ஆபத்தானவள் என்பது புரிந்து விட்டது. அடுத்து என்னை கொலை செய்யக்கூட யாரையாவது அனுப்பினாலும் அனுப்புவாள். அவள் காதலே எனக்கு வேண்டாம். நடந்ததை எல்லாம் அவளிடம் கூறிவிட்டு, இந்த செல்போனை அப்படியே அவளிடம் கொடுத்து விடுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

பொண்ணுங்க சொன்னதுக்காக, உண்மை தெரியாமல் அடுத்தவங்களை அடிக்க பாய்ஞ்சிடாதீங்க! ஒரு சில பெண்களின் மறுபக்கம் இப்படியும் இருக்குதுங்க..!

- உஷாரு வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. உஷாரய்யா உஷாரு.. மனைவியோடு வாழும் ஆண்களை தவறிழைக்க வைக்கும் ஒருசில பெண்கள்
வார இறுதி நாள். நள்ளிரவு நேரம். பிரபலமான ஓட்டல் ஒன்றில் நெருக்கமாக பல ஜோடிகள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு மூலையில் ஜோடியாக அமர்ந் திருந்த இருவருக்கும் முப்பது வயதிருக்கும்.
2. உஷாரய்யா உஷாரு : வீடியோ வெளியிட்டு மாட்டிக்கொண்ட மாணவன்
அவன் சிறிய நகரம் ஒன்றில் இயங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவனது மாமா வாங்கிக் கொடுத்திருக்கும் செல்போனுடன் தான் எப்போதும் உலா வருவான்.
3. உஷாரய்யா உஷாரு..
அதிகாலை நேரத்திலே அந்த ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ரெயிலில் ஏறுவதும், இறங்குவதுமாக எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘சைல்டு ஹெல்ப்லைன்’ குழுவை சேர்ந்த இரண்டு பெண்கள் அங்கும் இங்குமாக நின்றபடி கூட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
4. உஷாரய்யா உஷாரு..
அவள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள்.