சிதம்பரம் கோவிலுக்கு கம்போடியா மன்னரின் அன்புப் பரிசு


சிதம்பரம் கோவிலுக்கு கம்போடியா மன்னரின் அன்புப் பரிசு
x
தினத்தந்தி 19 May 2019 5:00 AM GMT (Updated: 18 May 2019 11:36 AM GMT)

இன்றைய இந்திய இளைஞர்களிடம், கம்போடியா நாட்டைப் பற்றிப் பேசினால்,“2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த குட்டிப் பிரதேசத்திற்கும் நமக்கும் துளிக்கூட தொடர்பு இல்லையே! பின்னே எதற்கு அந்த நாடு குறித்து நாம் கவலைப்பட வேண்டும்?” என்ற எண்ண ஓட்டத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே இந்திய சுற்றுலாப் பயணிகள் யாரும் அதிக அளவில் கம்போடியா இருக்கும் திசை நோக்கிப் பறந்து செல்வது இல்லை.

ஆனால், வேறு பல நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள், கம்போடியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தாக்கத்தால் கட்டப்பட்ட ஏராளமான கோவில்கள், அவற்றில் உள்ள கண்கவரும் சிற்ப வேலைப்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னம் என்று அறிவிக்கப்பட்ட கம்போடியாவின் பழங்கால கோவில்களைப் பார்க்க உலகின் மறுகோடியில் இருந்தெல்லாம் மக்கள் சாரை, சாரையாக அங்கு செல்கிறார்கள்.

அங்கோர் வாட் கோவிலையும் அதனைச் சுற்றியுள்ள அதிசய கோவில்களையும், அவற்றில் உள்ள அற்புதமான சிலைகளையும் வெளிநாட்டுப் பயணிகள் வியப்புடன் கண்டுகளித்து, அவற்றை புகைப்படங்களாகப் பதிவுசெய்து எடுத்துச் செல்லும் காட்சி, அன்றாட நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கும்.

அதிலும், அந்தக் கோவில்களுடன் அதிக அளவில் தொடர்பு கொண்ட தமிழர்களை அங்கே பார்ப்பது மிகவும் அரிது.

இதற்குக் காரணம், நமது பள்ளிக்கூட வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் கம்போடியா பற்றிய குறிப்பைத் தேடினால், ஒரு முழு அத்தியாயத்தைக் கூடப் பார்க்க முடியாத நிலை உள்ளது என்பது தான்.

நமது பள்ளிகளில் கற்றுத் தரும் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி வழியாக அந்நிய மன்னர்கள் படையெடுத்து வந்ததில் இருந்தே பெரும்பாலும் தொடங்குகின்றன.

அதற்கும் முன், இந்தியாவில் நடைபெற்ற பிரமிப்பூட்டும் பல சம்பவங்களுக்கு வரலாற்றுப் பாடத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதால், அவற்றைத் தெரிந்து கொள்ள பலரும் விருப்பம் காட்டுவது இல்லை.

ஆனாலும், இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாத அளவில் இருந்த உறவு குறித்து குவிந்து கிடக்கும் அரிய தகவல்களை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக அழித்துவிட முடியாது.

இந்தியா-கம்போடியா நாடுகள் ஒன்றுக்கொன்று பாராட்டிய உறவின் வெளிப்பாடாக உருவான எச்சங்கள் எதனையும் இப்போது இந்தியாவில் காண முடியவில்லை என்றாலும், இந்தியாவின் மறுபிரதிபலிப்பு போன்ற ஏராளமான அம்சங்கள் கம்போடியா முழுவதும் விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையே இருந்த தொடர் பினால் விளைந்த ஓர் அங்கம், தமிழகத்தின் சிதம்பரம் நகரில் உள்ள நடராஜர் கோவிலில் அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது.

இந்தத் தகவல் கூட தமிழர்கள் பலரும் அறியாத நிலையிலேயே உள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் நகரில் சிவனுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டபோது, காம்போஜ நாட்டு மன்னர் ஒருவர், தமிழகத்தில் ஆட்சி செய்த சோழ மன்னரான ராஜேந்திரனுக்கு அழகிய கல் ஒன்றை பரிசாகக் கொடுத்து, அதனை சிதம்பரம் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தக் கோரினார் என்பதே அந்தத் தகவல்.

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ‘காம்போஜ நாடு’ என்பது தற்போதைய கம்போடியாவா? அல்லது முன் ஒரு காலத்தில் இந்தியாவின் வட மேற்கே, காம்போஜம் என்ற பெயரில் இருந்த ஒரு பகுதியா? என்பது சிலரது ஐயப்பாடு.

சிதம்பரம் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த, காம்போஜ நாட்டில் இருந்து ஒரு கல் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்ற விவரங்களைப் பார்க்கும் முன்பு, காம்போஜ நாடு எது என்பதில் ஏற்பட்டுவிட்ட வரலாற்றுக் குழப்பம் என்ன என்பதைக் காணலாம்.

இந்தியா பல பகுதிகளாக சிதறுண்டு கிடந்த பழங்காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மன்னரின் ஆட்சி நடைபெற்றது.

தற்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் வட மேற்குப் பகுதியான மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளும், பீகார் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் சேர்ந்த பிரதேசம் ‘காம்போஜம்’ என்று முன்பு அழைக்கப்பட்டது.

இப்போது நாம் பெருமையுடன் பேசிக்கொண்டு இருக்கும் கம்போடியா நாட்டின் பெயரும் ஒரு காலத்தில் ‘காம்போஜ தேசம்’ என்றே இருந்தது.

வரலாற்றுப் பெயர் மயக்கத்திற்கு இதுவே காரணம் ஆகிவிட்டது.

சோழ மன்னர் ராஜேந்திரனுக்கு கல் பரிசு வழங்கியவர் மேற்குவங்காள பகுதியை ஆண்ட காம்போஜ மன்னரே என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், சோழர்கள் வரலாறு தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி பல நூல்களை எழுதியுள்ள கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி என்ற அறிஞர், இதனை மறுக்கிறார்.

அவரது கருத்து அடிப்படையிலேயே நாமும் இந்தப் பிரச்சினை பற்றிய தகவல்களை அணுகலாம்.

பத்தாம் நூற்றாண்டின் போது, இந்தோனேஷியா பகுதியில் சைலேந்திர மன்னர்களின் ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி நடைபெற்றது.

அப்போது மலேசிய தீபகற்பம் பகுதியை ‘தாம்ப்ரலிங்கா’ என்ற வம்சம் ஆண்டு கொண்டு இருந்தது.

ஆரம்ப காலத்தில் ஸ்ரீவிஜய பேரரசுக்கும் சோழ மன்னர் களுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. இதன் காரணமாக 1006-ம் ஆண்டு ஸ்ரீவிஜய பேரரசின் சைலேந்திர மன்னர் மாற விஜயதுங்கவர்மன், தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் புத்த விஹாரம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார்.

அந்த நேரத்தில் சோழ தேசத்திற்கும் சீனாவுக்கும் இடையே வாணிபம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்த வாணிபத்தின் காரணமாக இரு நாடுகளும் செல்வச் செழிப்புடன் இருந்தன.

பணத்தாசை காரணமாக ஒரு சமயம், இந்த வர்த்தகத்தில் மேலாதிக்கம் செலுத்த ஸ்ரீவிஜய பேரரசு முயற்சி மேற்கொண்டது. இதனால் ஸ்ரீவிஜயத்துக்கும் சோழ மன்னர்களுக்கும் இடையே இருந்த உறவு முறிந்து பகை மூண்டது.

இதே காலகட்டத்தில், கம்போடியாவை ஆண்டு கொண்டு இருந்த முதலாம் சூரியவர்மனுக்கும், தாம்ப்ரலிங்கா ஆட்சியினருக்கும் இடையே மோதல் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

தாம்ப்ரலிங்காவினரை அடக்குவதற்காக, முதலாம் சூரியவர்மன், தமிழகத்தில் மிகப் பெரிய கப்பல் படையைக் கொண்டு இருந்த சோழ மன்னரான ராஜேந்திரனிடம் உதவி கேட்டார்.

இதைக் கேள்விப்பட்ட தாம்ப்ரலிங்கா அரசு, கம்போடிய மன்னரை எதிர்ப்பதற்காக ஸ்ரீவிஜய அரசுடன் கைகோர்த்துக் கொண்டது.

இதைத் தொடர்ந்து 1025-ம் ஆண்டு மன்னர் ராஜேந்திரனின் ஏராளமான கப்பல் படைகள், ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்று, ஸ்ரீவிஜயத்தை முற்றுகையிட்டன.

மலேசியா, இந்தோனேஷியா பகுதிகள் மீது சோழக் கப்பல் படையினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்தப் போரில் சோழப் படைகளிடம் மலேசியாவின் கடாரம் வீழ்ந்தது. மன்னர் ராஜேந்திரன் மகத்தான வெற்றி பெற்றார்.

சைலேந்திர பரம்பரையின் மன்னர் சங்கர்ராம் விஜயதுங்கவர்மன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் ஸ்ரீவிஜய பேரரசு முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் சோழ அரசு செய்த உதவியைப் பாராட்டி, மன்னர் ராஜேந்திரனுக்கு கம்போடியா மன்னர் முதலாம் சூரியவர்மன் ஒரு கல் பரிசாக அனுப்பினார். மிகவும் அரிய இந்தக் கல்லை சிதம்பரத்தில் சிவன் கோவில் கட்டும்போது அதில் வைத்துக் கட்டவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்தார்.

இந்த அரிய தகவல், சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருவெதிரம்பலத்துக்கு வடக்குப் புறம் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் உள்ள கல்வெட்டு வாசகங்கள் இவ்வாறு காணப்படுகின்றன்

“ஸ்ரீராஜேந்திர சோழத் தேவருக்கு காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு - இது உடையார் ராஜேந்திர சோழத் தேவர் திருவாய் மொழிந்தருளி, உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோவிலில் முன் வைத்தது. இந்தக் கல்லு திருவெதிரம்பலத்து திருக்கல் சாரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பட்டியிலே வைத்தது”.

இவ்வாறு அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

இந்தக் கல்வெட்டு செய்தியில் மேலும் ஒரு குழப்பம் என்ன என்றால், அதில் இடம் பெற்றுள்ள காம்போஜராஜனின் பெயர் என்ன என்ற விவரம் சொல்லப்படவில்லை.

முதலாம் குலோத்துங்க சோழன், 1068-ம் ஆண்டு காம்போஜ நாட்டுக்கு சென்றதாகவும், அப்போது அங்கு ஆட்சியில் இருந்த மன்னர், இந்த அரிய கல்லை அவருக்குக் காண்பித்து பரிசாக வழங்கினார் என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சிதம்பரம் கோவிலுக்கு வழங்கப்பட்ட கல் பற்றிய குழப்பம் நீடிக்கும் அதே நேரத்தில், சோழ மன்னர் ராஜேந்திரனுக்கும் காம்போஜ நாட்டு மன்னருக்கும் இடையே இருந்த உறவை, கரந்தை (தஞ்சை) செப்பேடு தெளிவாகக் கூறுகிறது.

ராஜேந்திர சோழரின் 8-ம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட அந்தச் செப்பேட்டில் காணப்படும் சமஸ்கிருத வாக்கியத்தில், “மன்னர் ராஜேந்திர சோழரின் நட்பை வேண்டி காம்போஜ அரசர், தான் பயன்படுத்திய வெற்றிகரமான தங்கத்தேர் ஒன்றை அவருக்குப் பரிசளித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற வரலாற்றுத் தகவல்களில் சில முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தின் சோழ மன்னர்களுக்கும், கம்போடியா நாட்டு மன்னர்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது என்பது மட்டும் தெளிவு.

இந்த உறவுப் பாலத்தை பலப்படுத்தும் வகையில், தமிழகத்தில் இருந்து அறிஞர்களும், சிற்ப வேலைப்பாடு நிபுணர்களும் கம்போடியாவுக்குச் சென்று அங்கே தமிழகத்தின் முத்திரையைப் பதித்தார்கள்.

அதே சமயம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் அதிகம் நடைபெற்றதால் தமிழகம், கம்போடியா இடையே கப்பல் போக்குவரத்து அடிக்கடி நடைபெற்றது.

நவீன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், இது போன்ற கப்பல் பயணத்திற்கு சோழர்கள் பயன்படுத்திய யுக்தி வியக்கத்தக்கது.

கம்போடியா நாட்டு சிற்ப கலைச்செல்வம் பற்றி அறிந்துகொள்ளும் அதே நேரத்தில், அதற்கு உதவியாக இருந்த சோழர்களின் கப்பல் பயண யுக்தியையும் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கப் பெண்ணின் அதிசய விருப்பம்

கம்போடியா நாட்டின் பெருமையை, இந்தியர்களைவிட வெளிநாட்டினரே அதிகமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக நடைபெற்ற ஒரு சம்பவம்-

கம்போடியாவில் உள்நாட்டுப் போரும், அமெரிக்க தாக்குதலும் முடிவுக்கு வந்த நிலையில், 1990-ம் ஆண்டு முதல் அங்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது என்ற போதிலும், அங்கோர் வாட் கோவில் களின் அதிசயம் வெளியான 1900-ம் ஆண்டில் இருந்தே அங்கு வெளிநாட்டுப் பயணிகள் வரத் தொடங்கிவிட்டார்கள்.

1935-ம் ஆண்டு அமெரிக்க பெண் பயணி ஒருவர், அங்கோர் வாட் கோவில்களை நேரில் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

அந்தக் கோவிலின் அழகில் மனதைப் பறிகொடுத்த அவர், தான் இறந்த பிறகு, தனது அஸ்தியை அங்கோர் வாட் கோவில் வாசலில் தூவ வேண்டும் என்று ஒரு வினோதமான கோரிக்கையை கம்போடியா அரசிடம் வைத்தார்.

அந்தக் கோரிக்கையை கம்போடியா அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி அந்தப் பெண் மறைந்த பிறகு, அவரது சாம்பல் அங்கோர் வாட் கோவில் வாசல் பகுதியில் தூவப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

(ஆச்சரியம் தொடரும்)

Next Story