வண்ணமயமான வாழ்க்கைக் கோலங்கள்


வண்ணமயமான வாழ்க்கைக் கோலங்கள்
x
தினத்தந்தி 19 May 2019 6:31 AM GMT (Updated: 19 May 2019 6:31 AM GMT)

‘‘கோலக் கலை கடல் போன்று ஆழமானது. அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

நாம் தினமும் போடும் கோலம் நமது மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக அமையும். நமது மனம் சந்தோஷமாக இருந்தால் நேர்த்தியாக புள்ளி வைத்து, பார்டர் போட்டு மலர்களைவைத்து அலங்காரமெல்லாம் செய்வோம். நாம் கவலையோடு இருந்தால் கோலத்திலும் அது பிரதிபலிக்கும். இது அவசர உலகம். காலை விழித்ததில் இருந்து பெண்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்வதுபோல் ஓடிஓடி வேலைபார்க்க வேண்டியதிருக்கிறது.

சில பெண்கள் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் மூன்று, ஐந்து புள்ளிகளை வைத்து கோலத்தை வேகமாக போடுவதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் கோலத்தில் அவசரம் காட்டக்கூடாது. அவசர கோலம் ஒருபோதும் முழுமைதராது. அதே நேரத்தில் கோலத்தை அரைகுறையாக பாதியிலும் விட்டுவிட முடியாது. கோலம் என்றாலே அழகு. அதனால் அதை முழுமை படுத்தவேண்டும். நாம் வாழ்க்கையில் அரைகுறை எண்ணங்களோடு இருந்துவிடக்கூடாது என்பதை முழுமைப்படுத்தும் கோலம் எடுத்துக்காட்டுகிறது.

கோலத்திற்கு நமது வாழ்க்கையில் அதிக முக்கியத் துவம் கொடுப்பதால் கோலம் தொடர்புடைய பழமொழி களையும் வழக்கத்தில் வைத்திருக்கிறோம். ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டால், ‘காலம் செய்த கோலம் இது’ என்று, ஆறுதல் கூறுவோம். நாம் விரும்புவதுபோல் ஒரு காரியம் முழுமையடையாமல் அரைகுறையாக நின்றுவிட்டால் அதை ‘அலங்கோலம்’ என்று விமர்சிப்போம்..” என்று குறிப்பிட்டார், கோலக் கலைஞர் முனைவர் அமுதா கிருஷ்ணமூர்த்தி. சென்னையை சேர்ந்த இவர் பிரபலமான கட்டிட எழிற்கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தியும்-வி.ஜி.பி.யும் இணைந்து நடத்திய மாபெரும் கோலப் போட்டிக்கு நடு வராக செயல்பட்ட அவர், போட்டியை தொடங்கிவைக்கும் முன்பு, போட்டியாளர்கள் மத்தியில் பேசும்போதுதான் கோலத்தை பற்றி இது போன்ற முக்கியமான தகவல்களை எல்லாம் சொன்னார்.

தொடர்ந்து அவர் பேசும்போது...

“நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாம் செய்யும் செயலில் முழுமையும், திருப்தியும் ஏற்படும். அதுபோல் அழகான கோலம் உருவாகவும் உடலும், மனதும் ஒருங்கிணைந்து ஒருமுகப்படுத்தப்பட்டு செயல்படவேண்டும். அதிகாலை வேளையில் எழுந்து கோலம் போட்டுவிட்டு அதன் பிறகே அன்றைய பணிகளை தொடங்கும் வழக்கம் இன்றும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில்தான் உடல் புத்துணர்வோடும், மனம் புத்திக்கூர்மையுடனும் செயல்படும்.

புள்ளிக்கோலங்கள் நமது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது. புள்ளிகள் வைப்பது என்பது நாம் காரியங்களை செய்ய திட்டமிடுவது. அதில் கோடுகள் போட்டு இணைப்பது, அந்த திட்டங்களை செயல்படுத்துவது. அதனால்தான் சில செயல்களை செய்ய மற்றவர்களை தூண்டும்போது, ‘புள்ளி பிசகாமல் செய்’ என்று கூறுகிறோம். சிக்கல் கோலம் என்றும் ஒரு வகை இருக்கிறது. அதனை போடுவது சற்று சிரமமானது. மனதை ஒருமுகப்படுத்தி கவனம் முழுவதையும் புள்ளிகள் மீதும், வரை கோடுகள் மீதும் பதிய வைக்கும் தன்மை சிக்கல் கோலத்திற்கு உண்டு. சிக்கல் கோலம் போட பழகிக்கொள்கிறவர்கள் வாழ்க்கையில் எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்துவிடுவார்கள். நீங்கள் எந்த கோலம் போட்டாலும் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி அதை ஒரு தியானம் போல் செய்யுங்கள். அப்படி செய்தால் உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அது அப்படியோ கோலமாக மாறிவிடும். நீங்கள் எந்த கோலம் போட்டாலும் அது மற்றவர்களை பேச வைக்க வேண்டும். அந்த அளவுக்கு சிறப்பாக போடுங்கள். கோலத்திற்கும் என் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. சிறு வயதில் இருந்தே நான் மிகுந்த ஆர்வத்தோடு கோலங்கள் வரைந்து பரிசு வாங்கி இருக்கிறேன். கோலத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் என்னை கல்வி ரீதியாக உயர்த்தி கட்டிடக்கலை நிபுணராக்கியது. நீங்களும் உங்கள் மகள்களை கோலம் போட பழக்குங்கள். அவர்கள் ஈடுபட்ட துறையில் சாதிப்பார்கள்” என்றுகூறி, அமுதா கிருஷ்ணமூர்த்தி போட்டியை தொடங்கிவைத்தார். இவர் ‘எம்.ஆர்க்’ படித்தவர். முனைவர் பட்டமும் பெற்றவர்.

அவர் கோலங்களுடன் வாழ்வியலை ஒப்பிட்டு பேசிய விதம் போட்டியாளர்கள் மத்தியில் கோலத்தின் மீதான மதிப்பை உயர்த்தியது. அதை தொடர்ந்து போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போட்டியாளர்கள் திரும்பிய பக்கமெல்லாம் அனைத்து விதமான கோலங்களையும் விரல் நுனிகளில் அள்ளித்தெளித்துவிட்டார்கள். கோலத்தின் பிரதான நிறமான வெண்மையுடன் அனைத்துவிதமான நிறங்களும் கலந்து அழகுக்கு அழகு சேர்த்தன.

தரைப் பகுதி முழுவதும் வண்ணக்கோலங்களால் பேரழகாக மாறிக்கொண்டிருந்தது இங்குள்ள பார்வையாளர்களை மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து வி.ஜி.பி.க்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளில் சிலர் தங்களது கேமராவில் அழகான கோலங்களை படம்பிடித்தார்கள். பார்த்து பார்த்து மகிழ்ந்தார்கள். வெளிநாட்டு பெண்களில் சிலர் எப்படி கோலம் போடுவது என்று கேட்டு, மாவை எடுத்து கோலம் வரைந்து ஆனந்தமடைந்தார்கள். அவர்களில் ரய்தா சகாரி என்ற பெண் உருவாக்கிய கோலம், மற்ற போட்டியாளர்களை கவர்ந்தது. (போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற தனலட்சுமி தீட்டிக்கொண்டிருந்த கோலத்தை ரய்தா முழுமை படுத்தி மகிழ்ந்தார்)

‘‘நாங்கள் முதல்முறையாக இப்போதுதான் இதுபோன்ற கோலங்களை பார்க்கிறோம். இதுபோன்ற போட்டியையும் காண்கிறோம். எழுதுவதுபோல் இதுவும் எளிதான விஷயம் என்றுதான் முதலில் நினைத்தேன். மாவை கைக்குள் வைத்து விரல் நுனியால் கோலத்தி்ற்கு தக்கபடி வரைவது மிக கடினமான வேலை. நான் நினைத்தபடி முதலில் கோலமாவு கைகளில் இருந்து விழவில்லை. போட்டியாளர்களை கூர்ந்து கவனித்து கோலமாவை எப்படி கையாளுவது என்று கற்றுக்கொண்டேன். இங்கிருக்கும் பெண்கள் என்னை உற்சாகப்படுத்தி கோலம் போடும் முறையை எனக்கு கற்றுத்தந்துவிட்டார்கள். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்’’ என்றார், ரய்தா.

கிட்டத்தட்ட 100 பேர் பங்கு பெற்ற இந்த போட்டியில், எல்லோருமே போட்டிபோட்டு தங்கள் திறமையை நிரூபித்திருந்தார்கள். அதில் முதல் பரிசான கலர் டெலிவிஷனை பெற்றவர், அர்ச்சனா. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர். எம்.பி.ஏ. படித்திருக்கும் இவர் புள்ளி கோலத்திற்கு அழகு உருவம் கொடுத்து பிரமிக்கவைத்திருந்தார். சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கத்தையும் நினைவூட்டியிருந்தார். இவர் கோலத்தில் காட்டியிருந்த நேர்த்திதான் நடுவர் அமுதா கிருஷ்ணமூர்த்தியை கவர்ந்து, முதல் பரிசுக்கு தேர்வானது.

‘‘புள்ளிக்கோலம் போடுவது சிரமமானது என்று நினைத்து பலரும் ரங்கோலிக்கு மாறி விடுகிறார்கள். புள்ளிவைக்கும் இடத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கோலம் கோணலாகிவிடும். நினைவாற்றல் திறனை மேம்படுத்துவதோடு கவனச்சிதறலை கட்டுப்படுத்தும் ஆற்றல் புள்ளி கோலத்திற்குதான் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் கோலம் போடும் வழக்கத்தை பெண்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் பலம் சேர்க்கும். பெண்களுக்கும், கோலத்துக்குமான பந்தம் உணர்வு பூர்வ மானது. அதனை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது’’ என்றார்.

போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றவர், ரமணி. இவர் ரங்கோலி கோலத்தை 3டி பரிமாணத்தில் தத்ரூபமாக ஜொலிக்க வைத்தார். அது பார்வையாளர்கள் கண்ணுக்கு கோலமாக அல்லாமல் நிஜ பிம்பமாக தெரிந்தது. கோலத்தின் நடுவில் இருந்த மலர் தனித்துவம் பெற்று ஜொலித்தது. அதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ரமணிக்கு பிரிட்ஜ் பரிசாக கிடைத்தது.

‘‘ரங்கோலி கோலத்தை 3டி வடிவத்தில் போடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். தலை வாரும் சீப்பு, எண்ணெய் ஊற்றும் புனல், டேபிள்ஸ்பூன் போன்ற பொருட்களை பயன்படுத்தி கோலத்தை வரைந்தேன். நடுவில் போட்டிருந்த மலர்தான் என் கோலத்தின் மதிப்பை உயர்த்தி விட்டது. என் தோழிகளை பார்த்து நான் விதவிதமாக கோலம் போட கற்றுக்கொண்டேன். இன்றைய தலைமுறை மாணவிகளின் கவனம் டி.வி., செல்போன் பக்கம் திரும்பி விட்டது. அவர்கள் கோலம் போட பழகிக்கொண்டால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பிருக்கிறது” என்றார். பி.காம் படித்திருக்கும் ரமணி நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மூன்றாவது பரிசு பெற்றவரான தனலட்சுமியும் ரங்கோலி கோலத்தை படைத்திருந்தார். பொதுவாக ரங்கோலி கோலத்தில் இடம்பெறும் சித்திரங்கள் பெரியதாக இருக்கும். கோலமும் பிரமாண்டமாக காட்சி அளிக்கும். தனலட்சுமி அதை சிறிய கட்டத்திற்குள் அழகாக அடக்கியிருந்தார்.

‘‘ரங்கோலி கோலத்தில் சித்திரங்களை சிறிதாக உருவாக்கினேன். எல்லோரையும் கவரும் விதத்தில் கோலத்தை உருவாக்க நினைத்தேன். அதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். ஆப்கானிஸ்தான் பெண் ரய்தா என்னை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலத்தை பற்றி எதுவுமே தெரியாத அவர், நான் கோலம்போடுவதை கூர்ந்து பார்த்து, சில நிமிடங்களிலே அதன் அடிப்படையை அறிந்துவிட்டார். பின்பு என்னிடம் நானும் உங்களோடு சேர்ந்து கோலம் போடட்டுமா? என்று கேட்டார். அவரும் என்னுடன் அமர்ந்து ஆர்வமாக கோலம் போட்டது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. அதனை செல்போனில் போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்’’ என்றார். இவர் ஏராளமான கோலப்போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகுதான் கோலம் போடுவதற்கு பழகி இருக்கிறார். இவருக்கு ஆடியோ சிஸ்டம் பரிசாக கிடைத்தது.

‘‘நான் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவள். திருமணத்திற்கு பிறகு சென்னையில் குடியேறினேன். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகுதான் கோலம் போடுவதற்கு பழகினேன். புள்ளி கோலம், படி கோலம், ரங்கோலி போன்றவற்றை ஆர்வமாக போடுவேன். எவ்வளவு கஷ்டமான மன நிலையில் இருந்தாலும் வாசலில் கோலம் போட தொடங்கி விட்டால்போதும். அடுத்த நிமிடமே கோலத்தில் மனம் லயித்துவிடும். மனம் அமைதியாகிவிடும். கோலம் அழகை மட்டுமல்ல.. அமைதியையும் தருகிறது” என்ற தனலட்சுமி 9-ம் வகுப்பு வரை படித்தவர். சென்னை நங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வண்ணம் நிறைந்த கோலங்களை பெண்கள் போடவேண்டும்! அவர்களது வாழ்க்கையும் வண்ணமயமாய் ஜொலிக்கவேண்டும்!


Next Story