தம்பதிகள் ஒரே இடத்தில் வேலை பார்த்தால்..


தம்பதிகள் ஒரே இடத்தில் வேலை பார்த்தால்..
x
தினத்தந்தி 19 May 2019 7:10 AM GMT (Updated: 19 May 2019 7:10 AM GMT)

வீட்டில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடும், சலசலப்பும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது

கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடும், சலசலப்பும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. அவர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், ஒரே அலுவலகத்தில் வேலைபார்த்தால் அது நல்லதா? கெட்டதா?

“இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலைபார்ப்பது நல்லதுதான்” என்பது உளவியல் ஆராய்ச்சியாளர் களின் கருத்தாக இருக்கிறது.

“கணவனும்- மனைவியும் ஒரே இடத்தில் வேலைபார்த்தால் ஒருவரது பணிச்சுமையை இன்னொருவர் புரிந்துகொள்வார்கள். வேலையால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும் தெரிந்து ஆதரவாக நடந்துகொள்வார்கள்.

வீட்டுக்கு செல்வது, வீட்டிலிருந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பயணம் பாதுகாப்பாக அமைந்து விடும். அவர்கள் எல்லா விஷயங்களையும் பற்றி மனந்திறந்து பேசிக்கொள்ளவும் முடியும். அலுவலகப் பணி காரணமாக தாமதமானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இரு வருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு, பரிவு, பாசம் அதிகரிக்கும். ‘ஈகோ’ தலைதூக்காது. சந்தேகபுத்தியும் தலைதூக்காது’’ என்கிறார்கள்.

டெல்லியை சேர்ந்த பிரபல மனநல நிபுணர் ஷைனி, தம்பதியர் இணைந்து வேலை செய்வதை வரவேற்கிறார். “வேலை அதிகமாக இருந்தாலோ, வேலையை அவசரமாக முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ இருவரும் இணைந்து அந்த வேலையை செய்யும் வாய்ப்பு ஏற்படும். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், மற்றொருவர் அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். இதனால் அவர்களுடைய வாய்ப்புகள் பறி போகாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றையும் இருவரும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு’’ என்கிறார்.

மும்பையை சேர்ந்த மனநல நிபுணர் அஸ்ராணி, ‘‘இனி காலம் மாறும். கணவனும், மனைவியும் சேர்ந்து வேலைக்கு வாருங்கள் என்று அழைக்கும் சூழல் உருவாகும். இருவருக்கும் சேர்ந்து பேக்கேஜ் ஆக சம்பளம் பேசப்படலாம். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தம்பதிகளுக்கு ஒரே இடத்தில் வேலைகொடுக்க முன்வந்தால், இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பு தன்மையும் அதிகரிக்கும். இது மனித சமூகத்திற்கு நல்ல விஷயம்தான்” என்கிறார்.


Next Story