அதிபரின் மனைவியும்.. சில அதிசயங்களும்..


அதிபரின் மனைவியும்.. சில அதிசயங்களும்..
x
தினத்தந்தி 19 May 2019 7:15 AM GMT (Updated: 19 May 2019 7:15 AM GMT)

கணவரைவிட 24 வயது மூத்த பெண்மணி

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் தனது மனைவியுடன் பொது மேடைகளில் தோன்றும் போதெல்லாம், ‘‘பிரிகெட்டி... பிரிகெட்டி...’’ என்று முழங்கு கிறார்கள் மக்கள். அந்த அளவுக்கு பொதுஜனம் மத்தியில் புகழ்பெற்றுத் திகழ்கிறார், அவரது மனைவி பிரிகெட்டி. அவரது வித்தியாசமான கதைகூட மக்களை கவர்ந்திருக்கக்கூடும்.

மக்ரோன் - பிரிகெட்டி, நிச்சயம் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட தம்பதிதான். ‘‘பொதுவான, சாதாரண ஜோடி அல்ல நாங்கள்’’ என்று தமது திருமண நாளின்போது, பிரிகெட்டியே தங்களைப் பற்றி தெரிவித்தார்.

மக்ரோன் தம்பதியின் வயது வித்தியாசத்துக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தம்பதியின் வயது வித்தியாசத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது, கணவன்-மனைவிக்கு இடையிலான 24 வயது வித்தியாசம்தான்.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலினாவை விட 24 ஆண்டுகள் மூத்தவர். பிரான்ஸ் அதிபரோ, மனைவி பிரிகெட்டியை விட 24 வயது இளையவர்!

இமானுவேல் 15 வயது சிறுவனாக இருந்தபோது, புத்திசாலியாகவும், படுசுட்டியாகவும் இருப்பாராம். அமியென்ஸ் நகரில், ஜெஸ்யூட் தனியார் பள்ளியில் பயின்றபோது, சக மாணவர்களோடும், ஆசிரியர்களுடனும் சமமான நட்பை கொண்டிருந்தாராம். அப்போது இமானுவேலுக்கு நாடக ஆசிரியராக இருந்தவர் பிரிகெட்டி. அப்போதே அந்த புத்திசாலி மாணவனால் கவரப்பட்டேன் என்கிறார் அவர்.

பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவன குடும்ப வாரிசான பிரிகெட்டி, ஆன்ட்ரே அவ்ஜைர் என்ற வங்கி அதிகாரியை மணந்து, மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் ஆனார். பின்னாளில் இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டனர்.

மறுபுறம், தங்கள் டீனேஜ் மகன் காதல்வயப்பட்டிருப்பது தெரிந்தாலும், காதலி யார் என்று தெரியாமல் இருந்த மக்ரோனின் பெற்றோருக்கு, அது பிரிகெட்டி என்று அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. வேறு வழியில்லாத நிலையில் மக்ரோனுக்கு 18 வயதாகும்வரை ஒதுங்கி யிருக்குமாறு பிரிகெட்டியை மக்ரோனின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். மக்ரோனுக்காக எந்த உறுதியும் அளிக்கத் தயாராக இருந்தேன் என்கிறார் பிரிகெட்டி.

சக மாணவியான லாரன்ஸ் அவ்ஜைர் மீது மக்ரோனுக்கு காதல் இருக்கலாம் என்று பலரும் கருதிய நிலையில், மக்ரோன் காதலிப்பது அவரின் தாயார் பிரிகெட்டியை என்பது அவர்களுக்குத் திகைப்பூட்டியது என, மக்ரோனின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ள அனே புல்டா குறிப்பிட்டுள்ளார்.

17 வயதாக இருந்தபோது, ஒருநாள் நாம் இருவரும் கட்டாயம் திருமணம் செய்துகொள்வோம் என்று தனது ‘மூத்த’ காதலிக்கு வாக்களித்த மக்ரோன், 2007-ல் அந்த வாக்கை நிறைவேற்றினார். இப்போது, பிரிகெட்டி எனது மருமகள் என்பதைவிட சிறந்த தோழி என்று மக்ரோனின் தாயார் கூறுகிறார்.

மக்ரோனின் சக மாணவியாய் இருந்து மக்ரோனுக்கு ‘மகள்’ முறையாகிவிட்ட லாரன்ஸ் அவ்ஜைர், அதிபர் தேர்தலுக்கான பாரீஸ் நகரப் பணியில் முக்கியப் பங்காற்றினார்.

2017-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்றபோது, மக்ரோனின் குடும்பத்தினருடன், அவரது மனைவியின் முதல் குடும்பத்தினரும் ஒரே மேடையில் கூடி, வெற்றியைக் கொண்டாடினார்கள். மக்ரோன் - பிரிகெட்டி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மக்ரோன், பிரான்சின் பொருளாதார அமைச்சராகப் பதவி யேற்றபோது, பிரிகெட்டி தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, கணவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார். அரசியலில் பெண்களுக்கு உரிய பங்களிப்புத் தரவேண்டும் என்ற கருத்தை மக்ரோனிடம் ஏற்படுத்தியதற்காக பிரிகெட்டி பாராட்டப்படுகிறார்.

தற்போது பிரிகெட்டி, பிரான்சின் முதல் பெண்மணி. தேர்தலுக்கு முன்பு ஒரு பேட்டியில் மக்ரோன், நாட்டின் முதல் பெண்மணியின் பங்கை முறைப்படுத்தி அங்கீகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், என் மனைவிக்கு முக்கியமான பொறுப்பை வழங்குவேன்’’ என்றார்.

‘‘முதல் பெண்மணியின் பொறுப்புக்குச் சம்பளம் கிடையாது, அவர் அந்தப் பதவிக்கு மதிப்பை ஏற்படுத்துவார், குரல் கொடுப்பார். மக்களுக்காக பணியாற்றுவார். எனது பக்கத்தில் எப்போதுமே இருந்து முக்கிய பங்காற்றுவார்’’ என மக்ரோன் கூறுகிறார்.

‘மாணவர்’ மக்ரோன், ‘ஆசிரியை’ பிரிகெட்டி யிடம் இருந்து அறிவுரைகளைக் கேட்பது போன்ற கார்ட்டூன்கள் பிரான்சில் மிகவும் பிரபலம். அதிபர் தேர்தலில் மக்ரோனுடன் இறுதிச்சுற்று போட்டியில் இருந்த மரைன் லெ பென் என்பவர், மிகவும் ஜாக்கிரதையாக மக்ரோன்-பிரிகெட்டியின் உறவு குறித்து கிண்டலடித்திருந்தார்.

‘‘மக்ரோன், நீங்கள் ஆசிரியர்-மாணவர் விளையாட்டை என்னுடன் விளையாட முயற்சிப்பது தெரிகிறது. ஆனால், அது எனக்கு ஒத்துவராது’’ என்று ஏளனத் தொனியுடன் கூறியிருந்தார், மரைன் லெ பென். ஆனால் பிறரின் விமர்சனங்கள், கிண்டல்கள், இந்த பிரான்சின் முதல் தம்பதிகளை சிறிதும் பாதிக்கவில்லை.

குறிப்பாக திருமதி மக்ரோன் தனது கணவருடனான வயது வித்தியாசம் குறித்த பிறரின் விமர்சனத்தை நகைச்சுவையுடன் எதிர்கொள்கிறார்.

2017 அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஒரு புத்தகத்தில் பிரிகெட்டி, ‘2017 தேர்தலை மக்ரோன் நிச்சயம் சந்திக்க வேண்டும். ஏனென்றால், 2022- தேர்தலில் எனது முகத்தோற்றமே அவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்’ என்று நகைச்சுவை உணர்வோடு யதார்த்தத்தை கலந்து எழுதியிருந்தார்.


Next Story