சிறப்புக் கட்டுரைகள்

பிரதமர் நாற்காலி யாருக்கு? + "||" + To whom the Prime Minister's chair

பிரதமர் நாற்காலி யாருக்கு?

பிரதமர் நாற்காலி யாருக்கு?
தேசிய கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கவுரவமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டு, மாநில கட்சிகளின் கை ஓங்கினால் சிலர் பிரதமர் பதவிக்கு வரிசை கட்டி நிற்பார்கள்.
பூனையில் சைவம் கிடையாது;
ஆண்களில் ராமன் கிடையாது
-என்றார் கவிஞர் வைரமுத்து.

பதவியில் ஆசை இல்லாத
அரசியல்வாதியும் கிடையாது
-என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைப்பழத்தை மறுக்கும் குரங்கையும், பதவியை வெறுக்கும் அரசியல்வாதியையும் காண்பது அரிது.

“மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியமே தவிர பதவி ஒரு பொருட்டல்ல” என்று வாழ்ந்த காமராஜர்களையும், கக்கன்களையும் இப்போது காண்பது அரிது.

ஆசை வெட்கம் அறியாது என்று சொல்வார்கள். பதவியை பிடிக்க சிலர் பகிரங்கமாக முயற்சிப்பார்கள். கிடைக்காவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று சிலர் வெளியே தெரியாமல் ரகசியமாக காய் நகர்த்துவார்கள்.

நாட்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

பிரசவம் ஆகும் முன்பே குழந்தைக்கு பெயர் வைப்பது போல், ஓட்டு எந்திரங்களை திறந்து வாக்குகளை எண்ணும் முன்பே, யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது? யார் பிரதமர் நாற்காலியில் அமர்வது? என்று பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக சந்திப்புகளை நடத்தி வருகிறார்கள்.

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஒரேயொரு செயல்திட்டம்தான் இருந்தது. அது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதுடன் மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்த்துவது.

அதற்காக கூட்டணி சமாச்சாரத்தில் மற்ற கட்சிகளை அனுசரித்துப் போனது. குறிப்பாக சிவசேனா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசின் மீதும், மோடி மீதும் சேற்றை வாரி வீசிய போதிலும், பல்லைக்கடித்துக் கொண்டு மராட்டியத்தில் அந்த கட்சியை கூட்டணியில் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் இந்த பொருந்தா கூட்டணி எந்த அளவுக்கு சோபிக்கும் என்று தெரியவில்லை.

இதேபோல் எதிர்க்கட்சிகளுக்கும், மோடியை வீட்டுக்கு அனுப்பும் ஒரே திட்டம்தான் இருந்தது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றால் மக்கள் பெரிதும் அல்லல்படுவதாகவும், வேலை வாய்ப்பின்றி தவிப்பதாகவும், எனவே மோடி அரசை தூக்கி எறிந்தால்தான் நாடு உருப்படும் என்ற ரீதியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

மோடி எதிர்ப்பு என்பதில் எல்லா எதிர்க்கட்சி தலைவர்களிடமும் கருத்து ஒற்றுமை இருந்தாலும், அவர்களால் ஓரணியாக திரண்டு ஒற்றுமையாக நின்று எதிர்க்க முடியவில்லை. அவர்களுடைய இந்த பலவீனம், மோடிக்கு ஒருவகையில் சாதகம் என்றே கருதப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மோடி, பிரசாரத்தில் காங்கிரசுக்கு எதிராக ஊழல் புகார் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தார். அது மக்கள் மத்தியிலும் எடுபட்டது.

ஆனால் இப்போது மோடி எதிர்ப்பு என்ற ஒரேயொரு ஆயுதத்தை மட்டுமே தங்கள் பிரசாரத்தின் ஆதார சுருதியாக எதிர்க்கட்சிகள் நம்பி இருந்தன. மறைமுகமாக பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மத்திய அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் எதிர்க்கட்சிகளுக்கு போனஸ் புள்ளியாக அமைந்தது.

ஆனால் அந்த அதிருப்தியை எதிர்க்கட்சிகள் முழு அளவில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். மோடியை திட்டித்தீர்ப்பதிலேயே அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

ஏனெனில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு இந்த தேர்தலில் தனிமனித தாக்குதல்கள் அத்துமீறின. நாகரிக எல்லையை கடந்து தரம்தாழ்ந்து தாக்கிக்கொள்வதில் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது ராணுவத்தையும் அவலாக்கி மென்றனர்.

எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும், இல்லையேல் 5 ஆண்டுகள் வனவாசம்தான் என்பதால்தான் ஒவ்வொருவரும் இப்படி நடந்துகொண்டதாக கருதப்படுகிறது.

கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 336 இடங்கள் கிடைத்தன. அந்த தேர்தலில் 427 இடங்களில் போட்டியிட்டு 282 இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா, இப்போது 437 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 2 தொகுதிகள் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளத்துக்கு கிடைத்தது. அத்துடன் குஜராத், அரியானா, டெல்லியில் எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியது. மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி 42 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோல் பீகாரில் பாரதீய ஜனதா 30 தொகுதிகளில் போட்டியிட்டு, 22-ல் வெற்றி பெற்றது. இப்படி வட மாநிலங்களில் அந்த கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

ஆனால் இந்த முறை அந்த கட்சி வட மாநிலங்களில் அந்த அளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், உத்தரபிரதேசத்தில் எலியும், பூனையுமாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் மோடியை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்து இருக்கின்றன.

கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது, அந்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே காட்டியது.

தெற்கேயும் கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் அந்த கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் படியான செல்வாக்கு இல்லை. எனவே கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்றும், இருந்தபோதிலும் அது தனிப்பெரும் கட்சியாக விளங்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

2014 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 60 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. 464 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அதைவிட கூடுதல் இடங்களில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை சில மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்று தங்களுக்குள் பிரித்துக்கொள்கின்றன.

அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் கணிசமான இடங்களை கைப்பற்றக்கூடும்.

எனவே எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காதபட்சத்தில், பாரதீய ஜனதா சுமார் 230 இடங்களை கைப்பற்றி இருந்தால் அது, கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும், மோடியே மீண்டும் பிரதமர் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும் இடங்கள் அதைவிட சற்று குறைந்தால் மோடி அல்லாத வேறொரு பாரதீய ஜனதா தலைவரை பிரதமர் பதவிக்கு முன்நிறுத்தும்படி கூட்டணி கட்சிகளும், ஆதரவு அளிக்கும் பிற கட்சிகளும் நிர்ப்பந்திக்கக்கூடும்.

காங்கிரசை பொறுத்தவரை அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, அதேசமயம் பாரதீய ஜனதாவை விட அதிக இடங்களை கைப்பற்றி இருந்தால், அந்த கட்சி தனது கூட்டணி கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரசின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றால், பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக அந்த கட்சி பிற கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துவிட்டு மந்திரிசபையில் சேரவோ அல்லது சேராமல் இருக்கவோ வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் மாயாவதி அல்லது மம்தா பானர்ஜிக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் வாய்க்கலாம்.

ஒருவேளை தேசிய கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கவுரவமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டு, மாநில கட்சிகளின் கை ஓங்கினால் மாயாவதி, மம்தா பானர்ஜி, தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் என்று சிலர் பிரதமர் பதவிக்கு வரிசை கட்டி நிற்பார்கள்.

அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். மாயாவதி காங்கிரசை தவிர்த்து சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் நோக்கமே இதுதான். மம்தா பானர்ஜியும் இதை மனதில் கொண்டுதான் மேற்கு வங்காளத்தில் தனித்து களம் இறங்கினார்.

ஆக, ஆளாளுக்கு ஓர் எதிர்பார்ப்புடன்தான் இருக்கிறார்கள்.

பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் சந்திரசேகர ராவ் மிகவும் தீவிரமாக இருக்கிறார். இதுதொடர்பாக அவர் மம்தா பானர்ஜி, பிஜூ ஜனதாதள தலைவரும் ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார். சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார். பிரதமர் பதவியின் மீது இவரும் ஒரு கண் வைத்துள்ளார்.

3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை பெறவும் சந்திரசேகர ராவ் தயாராக இருக்கிறார்.

ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது. அப்படித்தான் சந்திரசேகர ராவும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும். இருவருக்கும் ஆகாது.

தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதீய ஜனதா அல்லாத பிற கட்சிகளை ஓரணியில் திரட்டி காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சூழ்நிலைகள் மாறும்போது இவரது நிலைப்பாடும் மாற வாய்ப்பு உள்ளது.

இப்படி ஆளாளுக்கு ஒரு கணக்கு போட்டபடி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

யார் என்ன கணக்கு போட்டாலும், மக்கள் என்ன கணக்கு போட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

இந்த நிலையில், எதிர்கால அரசியல் திட்டம் பற்றி 23-ந் தேதி ஆலோசிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அல்லாத பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு எந்த கட்சிக்கு அல்லது எந்த அணிக்கு இருக்கிறதோ அதுதான் அரியணை ஏறமுடியும்.

அதற்கான விடை 23-ந் தேதி தெரிந்துவிடும்.

மாநில கட்சிகளால் பாதிப்பு

மாநில கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும் தேசிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதற்கு முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடுதான். இங்கு உருவான திராவிட முன்னேற்ற கழகம் தேசிய கட்சியான காங்கிரசை மூட்டை கட்டி அனுப்பியது. அதன்பிறகு அ.தி.மு.க.வும் உருவானது. இதனால் இங்கு அந்த இரு கட்சிகளின் தயவிலேயே தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. தனியாக நின்றால் பெரும் ஆபத்து என்பது அவர்களுக்கு தெரியும்.

தமிழகத்தை போன்றே ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம், மராட்டியத்தில் சிவசேனா, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளால் தேசிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய சிறிய கட்சிகளால் தேசிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை இழந்து இருக்கின்றன.

மாநில கட்சிகள் தங்கள் மாநில நலனையே பிரதானமாக முன்நிறுத்துவதால், அவை எளிதில் மக்களின் நம்பிக்கையை பெற முடிகிறது. ஆனால் தேசிய கட்சிகள் இந்த விஷயத்தில் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. ஒட்டுமொத்தமாக தேசத்தின் நலனை முன்னிறுத்தியே பேச வேண்டி இருக்கிறது. அந்த கட்சிகள் பிரச்சினைகளில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு மாநிலத்துக்கு ஆதரவாக இருந்தால் மற்றொரு மாநிலத்தில் ஆதரவை இழக்க நேரிடும் ஆபத்து இருக்கிறது.

இந்த தேர்தலில் மாநில கட்சிகளால் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கணிசமான இழப்பு ஏற்படும். தமிழகம், மராட்டியம் மாநிலங்களில் இரு தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு
மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 %, மராட்டியத்தில் 60.5 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.
2. கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு
கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், பாகிஸ்தானுக்கு உதவுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
3. மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை
கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார்.
5. மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும், ராகுல் காந்தியின் விசுவாசிகள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள் - மூத்த காங்கிரஸ் தலைவர்
மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும் ராகுல் காந்தியின் விசுவாசிகள் கட்சியில் இழிவுப்படுத்தப்படுவதாக சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டி உள்ளார்.