அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?


அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?
x
தினத்தந்தி 20 May 2019 3:33 AM GMT (Updated: 20 May 2019 3:33 AM GMT)

விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த நாம் தொழில் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களால் ஒரு அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு பணி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 8 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து பணி செய்யும் போது நம் உடலிலும் தசை நார்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பொதுவாக அலுவலகத்தில் கணிப்பொறி முன் அமர்ந்து எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பணி செய்யும் சூழ்நிலையில் உள்ளவர்கள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது சோர்வையும் உடல் வலியையும் உணர்வர். உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது புகைப்பிடிப்பது போன்ற விளைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் இங்கிலாந்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தினந்தோறும் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் 6 மணி நேர உறக்கத்தையும் கணக்கில் சேர்த்தால் 14 மணி நேரம்ஆகிறது. இந்த நேரத்தில் உடலின் மூட்டுக்களின் இயக்கம் குறைகிறது. சதைகள் தசை நார்கள் வேலை செய்யாமல் இருக்கும் போது அது இறுகி போவதற்கும் வளைவு தன்மை குறைந்து போகவும் நேரிடும். கணிப்பொறி முன்போ அலுவலகத்திலோ உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, கழுத்துவலியோ முதுகுவலியோ ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக நாம் உணவு உண்டபின் சிறிது தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும். அப்போது நாம் உண்ட உணவு உடல் தேவைக்கு ஏற்ப சக்திகளைப் பெற்றுக் கொள்ள உண்ட உணவை உடைத்து குளுக்கோஸ் கொழுப்பாகவும் வைட்டமின் சத்தாகவும் இன்னும் பிற சத்துக்களாக மாற்றும். மாறாக உடலின் இயக்கங்களை மேற்கொள்ளாத பட்சத்தில் கொழுப்பாக மாற்றும் சத்துக்கள் உடலில் சேர்வதை திரும்பத் திரும்ப செய்யும் போது உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது. உடல் பருமன் அதிகமாகும் போது பல்வேறு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரும். இது இருதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு நீர் கூட அருந்தாமல் வேலைப்பளுவில் மூழ்கி போய்விடும் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தனது உட்காரும் நிலையை தன் நிலை மறந்து கவனிப்பு இல்லாமல் ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் அமரும் போது அதாவது குனிந்த நிலையிலேயே கழுத்தை வைத்திருக்கும் போது கழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து தசைப் பிடிப்புக்கள் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. உலக சுகாதார ஆய்வின் படி சுமாராக ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. அதாவது தினந்தோறும் 30 நிமிட உடற்பயிற்சியை கட்டாயமாக மாற்றிக் கொள்ளும் போது உட்கார்ந்த நிலையில் எட்டு மணி நேரம் வேலை செய்பவருக்கு ஏற்படும் இருதய, உடல் பருமன், எலும்பு தேய்மானம், தசை நார்களின் வளைவுத் தன்மை குறைந்து போதல் போன்ற பிரச்சினைகள் இருந்து நாம் ஓரளவுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அதேபோல் நீங்கள் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் உங்கள் இருக்கையின் கட்டமைப்பு அதாவது அதன் வசதி சிறப்பாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் இடத்திலிருந்து எழுந்து நீர் அருந்தவோ அல்லது உங்கள் நண்பரிடமோ அளவளாவி விட்டு வாருங்கள் ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடமோ செய்து வாருங்கள். இது நற்பயனை அளிக்கும், அதே போல தொழில் சார்ந்த மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கும். இதனால் ரத்த கொதிப்பு போன்ற விளைவுகளிலிருந்தும் விடுபடலாம்.

8 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்பவர்கள் தினமும் அதிகாலை 20 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் 7 நாட்கள் நடக்காவிட்டாலும் 3 நாட்களாவது அவசியம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். குளிர்சாதன அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வேளையில் அசைவ உணவு, துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி டீ, காபி குடிக்க கூடாது. உடல் பருமனை தடுப்பதற்கும், மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கும் நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

- செந்தில்குமார், விரிவுரையாளர்
பிசியோதெரபி மருத்துவகல்லூரி, குமாரபாளையம் .


Next Story