வாரிசு அரசியலில் வரலாறு படைக்கும் இந்தியா


வாரிசு  அரசியலில்  வரலாறு  படைக்கும்  இந்தியா
x
தினத்தந்தி 20 May 2019 7:33 AM GMT (Updated: 20 May 2019 7:33 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் செல்வாக்கான அரசியல் குடும்பத்து வாரிசுகள்

இந்தியா ஜனநாயக அரசியலில் காலடி எடுத்து வைத்து 72 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்னும் மன்னராட்சி மனோபாவங்களிலிருந்து விடுபடவில்லை என்பதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் செல்வாக்கான  அரசியல் குடும்பத்து வாரிசுகளே சாட்சி!

ஜனநாயகத்தில் திறமையுள்ள யார் வேண்டுமானாலும் மக்களின் நம்பிக்கையை பெற்றால் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பது உண்மை தான். ஆனால், யாரும் மக்கள் நம்பிக்கையை பெற்றாலும், உரிய வாய்ப்பை பெற கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்றாக வேண்டி யுள்ளது. இன்று எல்லா கட்சி தலைமைகளும் குடும்ப அரசியலால் பின்னப்பட்டிருக்கிறது.

ஆகவே, இந்த குடும்ப அரசியலின் தாக்கம் கட்சியின் அனைத்து மட்டத்திலும் வியாபித்துவிடுகிறது. ஒவ்வொரு கட்சியின் மாவட்ட, ஒன்றிய, வட்டார பொறுப்புகளிலும் வாரிசுகள் பொறுப்புக்கு வருவதற்கு அந்தந்த கட்சியிலுள்ள செல்வாக்குள்ள உள்ளூர் தலைவர்கள் சுலபமாக பாதை போட்டு கொடுத்து விடுகின்றனர்.

அடுத்தகட்டமாக தேர்தல் வரும்போது தங்கள் வாரிசை களம் இறக்குவது அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. இதனால், கட்சியில் பல வருடங்களாக கடுமையாக உழைத்தும் பதவிகள் பெறமுடியவில்லையே என்ற குமுறல் பல மட்டத்திலும் எதிரொலிக்கிறது. சில சமயங்களில் கட்சியில் எந்த வேலையும் செய்யாமலே கூட, நேரடி யாக வாரிசுகள் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை பெற்று விடுவதும் நடக்கிறது. அந்த கட்சிக்குள் ஒருவித இறுக்கமும், தேக்க நிலையும்  உருவாகத்தான் செய்கிறது.

வாரிசு அரசியலை முதன்மைபடுத்தும் கட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர முடியாமல் தேக்கம் பெற்று விடுவதையும் நாம் காணலாம். ஒரு கட்டத்தில் திறமைக்கு மதிப்பில்லை என்று முக்கிய ஆளுமைகள் கட்சியில் இருந்து வெளியேறி வேறு கட்சிக்கு செல்கிறார்கள் அல்லது புதிய கட்சியை தொடங்கி விடுகிறார்கள்.

சரி, தற்போதைய நாடாளுமன்ற தேர்தல்  வேட்பாளர் தேர்வுக்கு வருவோம்.

தமிழகத்தை பொறுத்த அளவில் தி.மு.க.வில் நிற்கவைக்கப்பட்டுள்ள 20 பேரில் 6 பேர் வாரிசு முறையில் தேர்தலில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேட்பாளர்கள்வேட்பாளரின் தந்தை

 கலாநிதி வீராசாமிஆற்காடு வீராசாமி 
 தமிழச்சி தங்கபாண்டியன் தங்கபாண்டியன் 
 கலாநிதி மாறன்முரசொலி மாறன் 
 கதிர் ஆனந்த் துரைமுருகன் 
 கவுதம சிகாமணிபொன்முடி                     
 கனிமொழிகருணாநிதி

தி.மு.க.வின் வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி தான் அ.தி.மு.க.! அதனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலகட்டங்களில் அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் தலைதூக்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்போது அ.தி.மு.க.விலும், வாரிசு அரசியல் வளர்த்தெடுக்கப்படுகிறது. 
இந்த வகையில் தற்போது அ.தி.மு.க.விலும் 4 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேட்பாளர்கள்வேட்பாளரின் தந்தை

 ரவீந்திரநாத்ஓ.பன்னீர்செல்வம் 
 ஜெயவர்த்தன்டி.ஜெயகுமார்
 ராஜ் சத்யன்ராஜன் செல்லப்பா 
 மனோஜ் பாண்டியன் பி.எச்.பாண்டியன் 

காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே வாரிசுகள் ஆதிக்கம் அதிகமாய்தானிருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் அது நிற்கும் 10 இடங்களில் 3 இடங்களுக்கு வாரிசுகள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேட்பாளர்கள்வேட்பாளரின் தந்தை

 கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் 
 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்ஈ.வெ.கி.சம்பத்
 விஷ்ணு பிரசாத்கிருஷ்ணசாமி

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி தேர்தலில் வாய்ப்பு பெற்றுள்ளார்.



காஷ்மீர்  தொடங்கி  கன்னியாகுமரி  வரை  களைகட்டுகிறது!

வாரிசு அரசியல் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வியாபித்துள்ளது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

* இந்திய அளவில் நேரு குடும்பம்;  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி,  சஞ்சய்காந்தி, ராகுல்காந்தி,  பிரியங்கா காந்தி.

* தமிழகத்தில் மு.கருணாநிதி குடும்பத்தில் மு.க.ஸ்டாலின்,  மு.க.அழகிரி, கனிமொழி,  முரசொலிமாறன், தயாநிதி மாறன்.

* ராமதாஸ் குடும்பத்தில் அன்புமணி ராமதாஸ்...!

* ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தில் ரவீந்திரநாத் குமார், ஓ.ராஜா... ஆகிய குடும்பங்கள்! 

* சசிகலா நடராசன் குடும்பம் நேரடியாக இல்லாவிட்டாலும் அரசியலை பொறுத்தவரை ஒரு வலுவான அரசியல் ஆதிக்கசக்தியாக திகழ்ந்து கொண்டுள்ளது. டி.டி.வி.தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், அனுராதா தினகரன், ராவணன், கலியபெருமாள், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ்... என ஒரு பெரிய பட்டியலே சொல்லமுடியும்! இந்த வரிசையில் இருந்து, இன்று இல்லாமல் போனவர்களாக சுதாகரன், பாஸ்கரன் என ஒரு பட்டியலும் தயாரிக்கலாம்!

* கர்நாடகாவில் தேவேகவுடா குடும்பத்தில் குமாரசாமி, ரேவண்ணா, அனிதா குமாரசாமி, நிகில் குமாரசாமி, பிரிஜ்வால் ரேவண்ணா!

* காஷ்மீரில் ஷேக் அப்துல்லா குடும்பத்தில் பேகம் அக்பர், ஜெகன் அப்துல்லா, குலாம் முகமத் ஷா, பேகம் கலிதா ஷா, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முப்தி முகமத் சயீத், மெகபூபா முப்தி! 

* பீகாரில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் ராப்ரி தேவி, தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மிசா பாரதி!

*  ராம்விலாஸ் பஸ்வான் குடும்பத்தில் சிராக் பஸ்வான், ராமசந்திர பஸ்வான்!

* ஒடிசாவில் பிஜூபட்நாயக் குடும்பத்தில் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்!,

*  ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் சிந்தியா குடும்பத்தில் விஜயராஜே சிந்தியா, துஷ்யந்த் சிங், மாதவராவ் சிந்தியா, ஜோதிர் ஆதித்திய சிந்தியா!

* மகாராஷ்டிராவில் சரத்பவார் குடும்பத்தில் அஜித் பவார், சுப்ரியா சுலே, 

*  பால்தாக்கரே குடும்பத்தில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே!,

*  பிரமோத் மகாஜன் குடும்பத்தில் பூனம் மகாஜன், ராகுல் மகாஜன்!

* பஞ்சாபில் பிரகாஷ்சிங் பாதல் குடும்பத்தில் சுக்பீர்சிங் பாதல், குருதாஸ்சிங் பாதல், மன்பிரித்சிங் பாதல்!

* ஆந்திராவில் ராமாராவ் குடும்பத்தில் சந்திரபாபு நாயுடு, லோகேஷ், லக்ஷ்மி பார்வதி, பாலகிருஷ்ணா!

*  ராஜசேகர ரெட்டி குடும்பத்தில் ஜெகன் மோகன் ரெட்டி! 

* தெலுங்கானாவில் சந்திர சேகரராவ் குடும்பத்தில் கே.டி.ராமாராவ், கவிதா, ஹரிஸ் ராவ்!

* உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் குடும்பத்தில் சிவபால் யாதவ், அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ்!

* மேனகா காந்தி குடும்பத்தில் வருண்காந்தி!... என்பதாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியல் கொடி கட்டி பறக்கிறது.


Next Story