சென்செக்ஸ் 383 புள்ளிகள் இழப்பு நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது


சென்செக்ஸ் 383 புள்ளிகள் இழப்பு நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 22 May 2019 4:36 AM GMT (Updated: 22 May 2019 4:36 AM GMT)

மூன்று தினங்கள் ஏற்றம் கண்ட நிலையில் சென்செக்ஸ் 383 புள்ளிகள் இழப்பு நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது

மும்பை

மூன்று தினங்கள் ஏற்றம் கண்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 383 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் இறங்கியது.

லாப நோக்கம்

கடந்த திங்கள்கிழமை அன்று பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டிருந்தது. எனவே முதலீட்டாளர்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நேற்று லாப நோக்கத்துடன் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்தனர். அது சந்தைகள் சரிய முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 69.76-ஆக குறைந்ததும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.04 சதவீதம் உயர்ந்ததும் பங்கு வியாபாரத்தை பாதித்தது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் இறங்கின. அதில் மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.60 சதவீதம் சரிந்தது. அடுத்து தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் 1.61 சதவீதம் குறைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 3 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் ஆகிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 3 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் டாட்டா மோட்டோர்ஸ், மாருதி சுசுகி, இண்டஸ் இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், யெஸ் வங்கி, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 27 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 382.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 38,969.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,571.73 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,884.85 புள்ளிகளுக்கும் சென்றது. இந்தச் சந்தையில் 975 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,583 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 154 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,175 கோடியாக குறைந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.3,584 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 119.15 புள்ளிகள் குறைந்து 11,709.10 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,883.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,682.80 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story