ஏப்ரல் மாதத்தில் 59 கோடி டாலருக்கு அரிசி ஏற்றுமதி


ஏப்ரல் மாதத்தில் 59 கோடி டாலருக்கு அரிசி ஏற்றுமதி
x
தினத்தந்தி 22 May 2019 4:46 AM GMT (Updated: 22 May 2019 4:46 AM GMT)

கடந்த ஏப்ரல் மாதத்தில், டாலர் மதிப்பில் அரிசி ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து 59 கோடி டாலராக இருக்கிறது.

புதுடெல்லி

நம்நாடு பாசுமதி மற்றும் சாதாரண அரிசி ரகங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த முதல் 11 மாதங்களில் 1.02 கோடி டன் அரிசி ஏற்றுமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 9.4 சதவீதம் குறைவாகும்.

இந்நிலையில், நடப்பாண்டு (2019) ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 59 கோடி டாலராக இருக்கிறது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவாகும். அப்போது ஏற்றுமதி 64 கோடி டாலராக இருந்தது. மற்ற தானியங்களின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்து 1.70 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அது 3.07 கோடி டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு அடிப்படையில், அரிசி ஏற்றுமதி 3 சதவீதம் சரிவடைந்து ரூ.4,092 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரலில் அது ரூ.4,225 கோடியாக இருந்தது. இதே மாதத்தில் மற்ற தானியங்கள் ஏற்றுமதி 42 சதவீதம் குறைந்து (ரூ.201 கோடியில் இருந்து) ரூ.118 கோடியாக குறைந்துள்ளது.

நம் நாட்டில் கரீப், ரபி ஆகிய இரண்டு பருவங்களில் விவசாய சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது. நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் இந்த பருவத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. அக்டோபர்-மார்ச் மாத காலம் ரபி பருவமாகும். இப்பருவத்தில் கோதுமை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.


Next Story