இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்...!


இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்...!
x
தினத்தந்தி 22 May 2019 5:09 AM GMT (Updated: 22 May 2019 5:09 AM GMT)

இன்று (மே 22-ந் தேதி) ராஜாராம் மோகன்ராய் பிறந்ததினம்

இந்திய வரலாற்றில் ராஜாராம் மோகன்ராய்க்கு என்று ஒரு சிறப்பான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக பெண்ணிய வரலாற்றில் அவருக்கு ஓர் உயரிய இடம் உண்டு. மோகன்ராய் சிறுவயது முதற்கொண்டே பகுத்தறிவோடு சிந்தித்தார். ஒவ்வாதவற்றை உதறினார். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுகிற காரணத்தால் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வது அறியாமை என்று கூறினார். வங்காளத்தில் பர்த்துவான் மாவட்டத்தில், ராதா நகரம் என்னும் ஊரில் 1772-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ராமகாந்தர்-தாரிணி என்ற தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ராஜாராம் மோகன்ராய்.

அக்காலத்தில், குழந்தைகளுக்கு திருமணம் செய்கிற வழக்கம் இருந்தது. ராஜாராம் மோகன்ராய்க்கும் 5 வயது நிரம்பியபோதே திருமணம் நடந்தது. குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்து வைக்கிற கொடுமை கூட இருந்தது. ராஜாராம் மோகன்ராய்க்கு மணம் செய்துவைக்கப்பட்ட பெண் சிறிது காலம் கழித்து இறந்து போகவே உடன் இரண்டாம் திருமணம் அவருக்குச் செய்து வைக்கப்பட்டது. ஆங்கிலேய கம்பெனியில் பணியாற்றிய ராஜாராம் மோகன்ராய் வேலை வேண்டாம் என்று கடிதம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். ராஜாராம் மோகன்ராய் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் தரம் தாழ்ந்திருந்தது.

ஆணாதிக்கம் அளவுக்கு மீறி நின்றது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம், வேண்டாதவளை எப்போது வேண்டுமானாலும் விலக்கலாம் என்ற கொடிய நிலை அதிகம் காணப்பட்டது. ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை. பெண்கள் படிக்கக்கூடாது. சுதந்திரமாக வெளியில் செல்லக்கூடாது, ஆண்களுடன் பழகக்கூடாது, ஆணுக்கு அடிமையாக இருந்து, அவனுக்குரிய வேலைகளைச் செய்து அவனுடைய நலனுக்கே முன்னுமை அளித்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.

உயிருள்ள பெண்ணை தீயில் தள்ளி எரியவிட்டால் அவள் எரிந்து சாகும்வரை என்ன பாடுபடுவாள். எப்படியெல்லாம் துடிப்பாள், அவள் அடையும் வேதனையை வார்த்தையாலும், எழுத்தாலும் வெளிக்காட்ட முடியுமா? அதைவிட ஒரு கொடுமை இந்த உலகில் வேறு இருக்க முடியுமா? இப்படிப்பட்ட ஒரு கொடுமையை நாம் அனுபவிக்கப்போகிறோம் என்று தெரிந்த ஒரு பெண் எப்படி மனமாற விரும்பித் தீயில் இறங்குவாள்?

இக்கொடுமைக்கு வேதனைக்கு அஞ்சி அவள் தப்பித்து ஓடினாலும் விடமாட்டார்கள். பிடித்து இழுத்து வந்து நெருப்பில் தள்ளுவார்கள். வெந்து உடல் புண்ணாகும்போது வேதனை பொறுக்க முடியாமல் எழுந்து ஓட முயன்றால் தடியாலும், கழியாலும் அடித்து மீண்டும் அந்த நெருப்பிலே தள்ளுவார்கள். வேதனையையும் பொறுக்க முடியாமல், வெளியிலும் ஓட முடியாமல் துடியாய்த் துடித்துத் துடித்து அப்பெண் சாவாள்.

உடன்கட்டை ஏற்றப்படும் செய்தி கிடைத்தால், உடனே மோகன்ராய் அங்குச் செல்வார் அதன் கொடுமையை, தெள்ளத்தெளிவாக அம்மக்களுக்கு விளக்குவார். இவரது வார்த்தைகளைக் கேட்டு இக்கொடிய வழக்கத்தைக் கைவிட்டவர்கள் சிலர், ஏற்க மறுத்தவர்கள் பலர்.

இவரது அண்ணன் ஜக்மோகன் மரணமடைந்தபின், இவரது அண்ணியைக் கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றி, தீயில் வேகவைத்துக் கொன்றதை நேரில் பார்த்திருக்கிறார். தீயின் நாக்கு உயிருள்ள அண்ணியின் மீது பட்டதும் அவர் கதறித்துடித்து ஓட முயன்றார். சுற்றியுள்ளவர்கள் அவரை வலுக்கட்டாயமாக நெருப்பில் மீண்டும் மீண்டும் தள்ளி, வேக வைத்த காட்சியை அவரால் என்றுமே மறக்க இயலவில்லை.

சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்படி ஆட்சியாளர்களிடம் ராஜாராம் மோகன்ராய் வற்புறுத்தினார். 1829-ல் அரசுப் பிரதிநிதியாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங் இவரது கருத்தை ஏற்றுக்கொண்டார். உடன்கட்டை ஏறுவதைச் சட்டவிரோதம் என்று அறிவித்தார். பெண்களுக்கு எதிரான இக்கொடிய வழக்கம் ராஜாராம் மோகன்ராயின் அரிய முயற்சியால் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் செய்த தொண்டில் இது முதன்மையானது.

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள தடை விதிக்கக்கூடாது என்று கூறினார். விதவைகள் மறுமணம் செய்துகொள்ளத் துணிவுடன் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வங்காளத்தில் விதவைப் பெண்களை இவர் ஏராளமாகப் பார்த்திருக்கிறார். அவர்களின் வேதனைகளை இவர் நன்கு அறிந்திருந்தார்.

எனவே, விதவைப் பெண்கள் திருமணத்தைப் பெரியவர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனைவியை இழந்தவன் வயதான காலத்தில் கூட உடனடியாக மறுமணம் செய்துகொள்ளும்போது இளம் விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது என்பது எவ்வகையில் சரி? என்று வினா எழுப்பினார்.

ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்றார். தர்மசபை என்று ஆரியர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, மூடக் கொள்கைகளுக்கு முட்டுக்கொடுக்க முயன்றதால், அதை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வையும், சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பவும் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை இவர் உருவாக்கினார்.
 
மனைவி உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்யக்கூடாது என்றார். பலதார மணத்தை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை வற்புறுத்தினார். கணவன் இறந்தபிறகு அவன் சொத்து முழுவதும் மனைவிக்குச் சேர வேண்டும் என்று வற்புறுத்தினார். பெண்களை விற்கும் கொடிய வழக்கத்தை எதிர்த்தார்.

1833-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி ராஜாராம் மோகன்ராய் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

- முனைவர் இரா.பழனிவேலு, பேராசிரியர்,
தனியார் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம்.


Next Story