ஏழாவது சொர்க்கம் வால்பாறை


ஏழாவது சொர்க்கம் வால்பாறை
x
தினத்தந்தி 22 May 2019 11:56 AM GMT (Updated: 22 May 2019 11:56 AM GMT)

இப்பூவுலகில் ஏழாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் ஒரு பகுதி அதுவும் தமிழகத்தில் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

இது ஏதோ புனித தலம் என்றோ, கோவில் பகுதி நமக்கு தொடர்பில்லாதது என்றோ நினைக்க வேண்டாம். சுற்றுலாவை விரும்பும் மக்கள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய அந்த பகுதி கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறை எனுமிடமாகும். பள்ளி திறப்பதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதென்றாலும், குறுகிய காலத்தில் சிறப்பான சுற்றுலா செல்ல வேண்டும் என்று துடிப்போருக்கு ஏற்ற இடம். குடும்பத்துடன் செல்ல வேண்டிய பகுதியும் இதுவே. கூகுளில் ‘செவன்த் ஹெவன்’ என ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்து பார்த்தால் உங்களுக்கு கிடைக்கும் பதிலில் வால்பாறையும் ஒன்றாக இருக்கும் என்பதிலிருந்தே இதன் சிறப்புகள் கூகுள் வரை பரவியிருப்பதை நாம் அறியலாம். தேடு பொறியில் சிக்கியுள்ள வால்பாறையின் இயற்கை அழகில் நாமும் கட்டுண்டு ரசிக்க வேண்டாமா, புறப்படுங்கள் வால்பாறைக்கு.

பொதுவாக கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோடை வாசஸ்தலங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். தங்குவதற்கு ஓட்டல் அறைகள் கிடைக்காது. ஆனால் அத்தகைய பிரச்சினை எதையும் எதிர்கொள்ளாமல் மிகவும் சர்வ சாதாரணமாக குடும்பத்தினருடன் குறைந்த பட்ஜெட்டில் தங்கி மகிழ்ந்துவிட்டு வரக் கூடிய இடம்தான் வால்பாறை.

பொள்ளாச்சிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் வால்பாறை மலைத் தொடர் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஊர் இது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுச் சூழல் மாசற்ற, கோடை காலத்திலும் குளிர் காற்று வீசும் மலைப் பகுதி இதுவே. பொள்ளாச்சியிலிருந்தே உங்கள் சுற்றுலா பயணம் ஆரம்பமாகிறது. இங்குள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றிப் பார்க்க குறைந்தது 2 நாட்களாவது இங்கு தங்க வேண்டியிருக்கும். முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக இது உள்ளதால் இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்லும் பகுதி முழுவதும் இயற்கை சூழல் நிறைந்தது. இந்த மலை உச்சிக்கு செல்ல 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தாக வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் வருவது ஆழியாறு அணை. அதை ஒட்டி அமைந்துள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான பல பகுதிகள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவை ஒட்டி அமைந்துள்ள சாலையோர கடைகளில் தேனாக இனிக்கும் பொள்ளாச்சி இளநீர், நுங்கு, பதனீர் என உங்கள் தாகத்தை தணிக்கும். அசைவ பிரியர்களை வரவேற்கும் மீன் வறுவல் சுவை மிகு உணவாகும். இதைக் கடந்து 2 கிலோமீட்டர் பயணித்தால் ஆழியாறு செக்போஸ்ட் வரும். இதன் அருகில்தான் பல ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் அறிவுத் திருக்கோவில். பயண களைப்புக்கு சற்று ஓய்வாக இங்குள்ள தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் கண்களை மூடி தியானிக்கலாம். மலை மேல்பகுதிக்கு பயணித்தால் சாலையின் இரு பகுதிகளிலும் வானுயர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகளை பார்த்தபடியே, பாறையில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் வெளர் என பாயும் அருவிகளையும் ஆங்காங்கே பார்க்கலாம். இங்குள்ள குரங்கு அருவியில் பாயும் தண்ணீரை அப்படியே பருகலாம். அந்த அளவுக்கு சுத்தமானது. இந்த அருவியில் குளித்துவிட்டு மேலே பயணிக்கலாம்.

மலைப் பகுதியில் ஆங்காங்கே வரை ஆடுகளை பார்க்கலாம். அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். சாலை மார்க்கத்தில் 10 கி.மீ. பயணித்தால் பாலாஜி கோவிலையும் நீங்கள் விரும்பினால் தரிசிக்கலாம். குழந்தைகள் விளையாட அருகிலேயே சிறிய பூங்காவும் உள்ளது.

அடுத்தபடியாக நடந்து போனால் சிலீரென சாறல் வீசும். அருகில் உள்ள கல்லாறு நீர்வீழ்ச்சியின் சாறல்தான் அது. இங்கு உள்ள தொங்கு பாலத்தில் நடந்து செல்வதே திரிலிங்கான அனுபவமாக நிச்சயம் இருக்கும்.

சிறுவர், சிறுமியர் குளிப்பதற்கேற்ற இடம் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஆறு. இது மிகவும் ஆழம் குறைவானது. இதில் நீந்திக் குளிக்கலாம். தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே செந்நாய் கூட்டங்களைப் பார்க்கலாம். அவற்றை தூரத்திலிருந்தே பார்ப்பது பாதுகாப்பானது. வால்பாறை நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நல்லகாத்து எஸ்டேட். இந்த எஸ்டேட் உச்சிக்கு சென்று பார்த்தால் கேரள மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பார்க்க முடியும்.

இங்கும் ஆங்காங்கே யானைகள் கூட்டம் கூட்டமாகத் திரிவதைப் பார்த்து ரசிக்கலாம். இப்பகுதியின் மற்றொரு அதிசயம் அக்காமலை புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்து பச்சை போர்வை போர்த்தியது போல காட்சி தரும் பகுதி இது. இங்கு வன விலங்குகள் அதிகம் உள்ளதால் இப்பகுதிக்குச்செல்ல வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இங்குள்ளஅதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானது. நயாகரா நீர்வீழ்ச்சி போல ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் பாயும் இந்த நீர் வீழ்ச்சியை அவசியம் பார்த்து ரசியுங்கள். இவை தவிர இங்கு சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு அணைகள் பார்க்க வேண்டிய பகுதிகளாகும். ஆழியாறு அணையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது டாப் ஸ்லிப். இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில் சுற்றுலா சென்று வரலாம். யானை சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மர வீடுகளும் இங்குள்ளன. இந்த வீடுகளில் தங்கி மகிழ முன்பதிவு அவசியம்.

Next Story