தினம் ஒரு தகவல் : அமெரிக்க குடியுரிமை


தினம் ஒரு தகவல் : அமெரிக்க குடியுரிமை
x
தினத்தந்தி 23 May 2019 2:45 AM GMT (Updated: 23 May 2019 2:45 AM GMT)

அமெரிக்காவில் “இமிக்ரேசன் அண்ட் நேஷனாலிட்டி ஆக்ட்” என்கிற சட்டம், வெளிநாட்டு மக்களுக்கு ‘கிரீன் கார்டு’ வழங்குவது தொடர்பான ஷரத்துகளை சொல்கிறது.

கிரீன் கார்டை சட்டரீதியான சொல்லாக எழுத வேண்டும் என்றால் ‘லீகல் பர்மனெண்ட் ரெசிடென்சி’ எனலாம்.

இந்த ‘லீகல் பர்மனெண்ட் ரெசிடென்சி’ வாங்குவது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. இதை வாங்கி விட்டால் கிட்டத்தட்ட ஒருவர் அமெரிக்க குடிமகனாகி விடுவார். ஒருவர் எப்போது இந்த ‘லீகல் பர்மனெண்ட் ரெசிடென்சி’யை அமெரிக்காவில் வாங்கி விடுகிறாரோ அப்போதில் இருந்து அவருக்கு சர்வதேச அளவில் அமெரிக்க குடிமகனுக்கு இணையான அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த நபருக்கு சர்வதேச அளவில் பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் அமெரிக்கா முன்வந்து நிற்கும்.

இந்த ‘லீகல் பர்மனெண்ட் ரெசிடென்சி’ வாங்கி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, ஒழுக்கமான பின் புலத்தோடு இருந்தாலே போதும், எளிதில் விண்ணப்பித்து அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம். ஆனால் இந்த ‘லீகல் பர்மனெண்ட் ரெசிடென்சி’ இல்லாமல் ஒரு வெளிநாட்டவரால் அமெரிக்க குடிமகன் ஆவது கடினம்.

அமெரிக்காவில் இதுபோல் இன்னும் பல சலுகைகள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் வேலை வாய்ப்பு. ஒரு அமெரிக்க குடிமகனுக்கு இந்த வாரம் வேலை இல்லை என்றால், அரசே அவனுக்கான வேலையை தேடித்தரும். இப்படி மூன்று முதல் ஐந்து வேலை வாய்ப்புகளை தேடித்தந்து தன் குடிமகனை பொருளாதார ரீதியாக பாதுகாக்கும். அந்த வேலை தேடும் காலத்தில் தன் குடிமகனுக்கான உணவு செலவு முழுக்க அரசுடையது. சரி விஷயத்துக்கு வருவோம்.

2017-ம் ஆண்டு, அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற 11 லட்சம் பேருக்கு அனுமதி அளித்தது அமெரிக்க குடியுரிமை ஆணையம். அப்போது 1.4 லட்சம் பேருக்கு பணி அடிப்படையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கியது. அந்த 1.4 லட்சம் பேரில் ஏழு சதவீதம் பேருக்கு அமெரிக்க நிரந்தர குடிமகனாக வாழ அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் பணி சார்ந்து நிரந்தரமாக குடியேற விரும்பி விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் 2.26 லட்சம் பேர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி பணி சார்ந்த அமெரிக்க குடியுரிமைக்காக 3,95,025 பேர் காத்திருக்கிறார்கள். அதில் 3,06,601 பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமை ஆணையத்தின் அறிக்கைகள் சொல்கின்றன.

1990-ம் ஆண்டுகளில் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் திட்டமிட்டு கொண்டு வந்த சட்டம் இது. இந்த சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களோ, பிராந்திய பகுதியை சேர்ந்தவர்களோ அதிகமாக குடியேறி எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடக் கூடாது என முன்கூட்டியே யோசித்து இயற்றப்பட்ட சட்டம். இந்த சட்டப்படி ஒரு ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தர குடிமகன்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஒரு நாட்டுக்கு மொத்த அனுமதியில் வெறும் 7 சதவீத அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும்.


Next Story