கணிதத்துறையில் புதுமை செய்தவர் சிவசங்கர நாராயணன்


கணிதத்துறையில் புதுமை செய்தவர் சிவசங்கர நாராயணன்
x
தினத்தந்தி 24 May 2019 7:58 AM GMT (Updated: 24 May 2019 7:58 AM GMT)

வித்தியாசமான விஞ்ஞானிகள்

கணிதப்பாடம் சிலருக்கு வேப்பங்காய் போன்று கசக்கலாம். சிலருக்கோ வெல்லக்கட்டிப் போன்று இனிக்கலாம். ஆனால் மாணவ-மாணவியர்களின் கல்வித்தகுதிக்கு, கணிதப் பாடமே அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படிப்பட்ட கணிதத்துறையில் கவனம் வைத்தால் பல புதுமைகளைச் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்தான், அறிவியல் கணித மேதையான சிவசங்கர நாராயணன். மனம் சலிப்பில்லாத தனது புதுமையான முயற்சிகளால் அவர் படைத்த சாதனைகளை நாம் காணலாம்..

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தை அடுத்த ‘வல்லம்’ என்ற ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் (5.4.1901) சிவசங்கர நாராயணன். இவரது தந்தையார் சுப்பிராயப்பிள்ளை, தாயார் கோமதி அம்மாள். சிவசங்கர நாராயணன் சிறுவயதில் பல கொடுமைகளை அனுபவிக்க நேரிட்டது. அவருடைய ஒரு வயதில் தாயார் தவறிப்போனார்.

அதன் காரணமாக வீட்டில் இருந்தபடியே சில ஆண்டுகள் கல்விப் பயின்றுவந்தார். பின்னர் செங்கோட்டையில் இருந்த நடுத்தரப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், தந்தையாரும் இயற்கை எய்திவிட்டார்.

இருந்தாலும் மனம் தளராது, தனக்காக கல்வியை, உதவித்தொகையை பெற்றுக்கொண்டு பயிலத் தொடங்கினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து தேர்ச்சிப் பெற்றார். அடுத்ததாக திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) வகுப்பில் சேர்ந்தார்.

கணிதப் பாடத்தின் மீது பற்றுக்கொண்ட சிவசங்கர நாராயணன், ஆசிரியர்கள் இல்லாமலேயே தானாகவே கணிதத்தைக் கற்று வந்தார். இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதே, எம்.ஏ. வகுப்பையும் தாண்டிய நிலைக்குரிய கணக்குப் புதிர்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.

கணிதத்துறையில் தனது ஆர்வத்தைக் காட்டியதால் இளங்கலையில் இரண்டாம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற முடிந்தது. பின்னர் கணிதத்தில் எம்.எஸ்சி. (அறிவியல் முதுகலை) பட்டம் பெற விரும்பினார். தனது எண்ணத்தை செங்கோட்டையில் இருந்த தன் ஆசிரியரிடம் தெரிவித்தார். அவரும் இவருக்கு ஊக்கம் கொடுத்தார். அதுவரையிலும் கணிதத்தில் சிவசங்கர நாராயணன் செய்த ஆராய்ச்சிகளை எல்லாம் தொகுத்திடும்படி அவரது ஆசிரியர் செய்தார். அதோடு தனது நண்பர்கள் மூவருக்கும், பரிந்துரைக் கடிதங்களை எழுதிக் கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அப்படி அவர் பரிந்துரை கடிதம் கொடுத்த ஒருவர், சென்னையில் புகழ்பெற்ற வழக்கறிஞர். அதே வழக்கறிஞர், சிவசங்கர நாராயணனுக்கு உறவினராகவும் இருந்தார். சிவசங்கர நாராயணனுக்கு அவரிடம் செல்லவே தயக்கமாக இருந்தாலும், ஆசிரியரின் நண்பர் என்பதால் காணச் சென்றார்.

அந்த வழக்கறிஞர், சிவசங்கர நாராயணனை அவமானப்படுத்தினார். “நீ ஒன்று.. இரண்டு.. என ஆராய்ந்து உலகிற்கு என்னச் சொல்லப்போகிறாய்?” என்று ஏளனமாக கேட்டார். இதன் காரணமாக சிவசங்கர நாராயணன் யாரிடமும் உதவி கேட்டுச் செல்லவில்லை.

அதன் பின்னர் தானாக முயன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார். தன் கணித முடிவுகளை அங்கு வெளியிட்டார். அதனை தேர்வாளர்கள் படித்துப் பார்த்தனர். இந்த அரிய ஆராய்ச்சி முடிவுகளை, டி.எஸ்.சி. பட்டத்திற்கு கொடுக்க வேண்டும் என பாராட்டினர்.

1929-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார், சிவசங்கர நாராயணன். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் டி.எஸ்.சி. பட்டம் பெற்றார். இந்தநேரத்தில் மிகவும் எளிமையான முறையில், சாதாரண குடும்ப நிலையில் இருந்த இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளையின் மகளை, சிவசங்கர நாராயணன் திருமணம் செய்துகொண்டார். அவரது இல்லற வாழ்க்கையானது எளிமையாகவும், இனிமையாகவும் அமைந்தது.

1941-ல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பணியாற்றினார். 1942-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

கணிதத்துறையில் எண்ணியல் கோட்பாடு (Therory of Numbers) என்ற பகுதியிலேயே இவரது மனம் அதிக ஈடுபாடு கொண்டது. இதைப்பற்றி பத்து ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டார். ‘வாரிங்’ என்பவர் உருவாக்கிய கணிதப் புதிர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களான ஹாா்டி, லிட்டில் போன்றவர்களால் விடை காண முடியவில்லை. அவற்றை ஆராய்ந்து முடிவுகண்ட சிவசங்கர நாராயணன், அதனை புத்தகமாக வெளியிட்டார். இதனால் அவரது புகழ் உலகமெங்கும் பரவியது.

இடிபெல் என்ற உலகப் புகழ்பெற்ற மேல்நாட்டு கணித அறிஞர், ஒவ்வொரு நாட்டின் கணித மேதைகளைப் பற்றியும் எழுதினார். அதில் அவர் இந்தியாவின் கணித மேதைகளான ராமானுஜம், டாக்டர் சிவசங்கர நாராயணன் என்று இருவரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த காலத்தில் இந்திய கணித சங்கமானது, சிவசங்கர நாராயணனைப் போற்ற முன்வரவில்லை. அதனைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை.

இவரது பெருமைகள் இந்தியாவைக் கடந்து, இங்கிலாந்தை தாண்டி, அமெரிக்காவிற்கும் சென்றது. இந்திய கணித சங்கமானது கொடுக்காத மரியாதையை, உலக கணிதச்சங்கம் கொடுப்பதற்காக அவரை அழைத்தது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் கொடுக்க முன்வராத பெரும் பதவியை இவருக்குக் கொடுக்க, கணித துறையிலேயே புகழ்பெற்று விளங்கிய முதன்மையான அமெரிக்க நாட்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் முன்வந்தது.

அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டுக் கணித அறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர்கள் அளித்த கல்வி உதவித் தொகையைப் பெற்று மேலும் படிப்பதற்காகவும், அவர் இங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் பயணம் செய்த விமானம் 30-8-1950 அன்று, கொய்ரோ நகரத்தின் அருகில் விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தோடு அவரும் எரிந்து போனார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து மேலும் பல அரிய கணித உண்மைகளை கண்டுபிடிப்பார் என ஆவலுடன் காத்திருந்த பலருக்கும் இது அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் சிவசங்கர நாராயணனின் புகழ், இந்தியாவின் கணித இயல் வரலாற்றில் என்றுமே மங்காதபடி நிலைத்துள்ளது.

மாணவ-மாணவியர் இந்தக் கணித மேதையின் வரலாற்றை அறிந்து, தங்களது கணித அறிவைப் பெருக்கி சாதனைகள் செய்து உலக அரங்கில் இடம்பெற வேண்டும்.

- கே.நல்லசிவம்


Next Story