வார்த்தைகளை மாற்றி எழுதியதால் புகழ்பெற்ற பாடல்கள்


வார்த்தைகளை மாற்றி எழுதியதால் புகழ்பெற்ற பாடல்கள்
x
தினத்தந்தி 24 May 2019 8:44 AM GMT (Updated: 24 May 2019 8:44 AM GMT)

என்றென்றும் கண்ணதாசன்-7

ஒரு படத்திற்கு அப்பா, கதை - வசனம் - பாடல்கள் எழுதினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே அந்தப் படம் நின்றுபோனது.

அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் அப்பாவின் நினைவில் அப்படியே பதிந்துபோனது.

அந்தக்கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இரண்டு வீடுகள். அந்த இரண்டு வீடுகளுக்கும் வாசல் பகுதியிலும், பின் பகுதியிலும் அழகான பூந்தோட்டம். ஒரு வீட்டில் ஒரு சிறு குடும்பம் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகிறது. தற்போது அங்கே ஒரு கணவன்-மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.

பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான்.

பக்கத்து வீட்டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். தினமும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தன் பெற்றோரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை. திரு மணம் நடக்கிறது.

முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது.

அதிர்ச்சி அடையும் அவன் கோபத்துடன் அவளிடம் ஏதோ கேட்கப் போகும்போது, வெளியே இருந்து அதே பாட்டு கேட்கிறது.

வேகமாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவன் மனைவியின் தங்கை பாடிக்கொண்டிருக்கிறாள். அதே இனிமையான குரல்.

அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள் என்பது தெரியவருகிறது.

மனைவியை பிரிய நினைக்கிறான்.  தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகிறாள்.

“உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்துகொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண்டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன் அன்று அவன் சொல்லி விடுகிறான்.

வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது.

அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.

அப்பா எழுதிய பாட்டின் பல்லவி இது-

“தாய் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
தாய் தூங்கத் தாலாட்டு
நீ பாட வேண்டும்
நீ பாடும் தாலாட்டை
தாய் கேட்க வேண்டும்
தன் நிலை மாறி அவள்கூட
மொழி பேச வேண்டும்”

அந்தப் படம் நின்று போனதால், அதை அப்படியே விட்டுவிட்டார்.

பின்நாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாடல் எழுத அமர்ந்த போது, பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டது. முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை, இந்த இடத்தில் காதல் பாட்டாக மாற்றி எழுதினால் என்ன என்று அப்பாவுக்குத் தோன்றியது. பிறகு அதையே மாற்றி எழுதித் தந்தார், அந்தப் பாடல்தான் இது-

“நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும்
பொழுதோடும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்யாவும்
நானாக வேண்டும்”

வாய்பேச முடியாத தன் அக்கா மனவருத்தத்தில் இருக்கும்போது, அவள் மனதுக்கு ஆறுதலாக தங்கை பாடுவதாக இதே படத்திற்கு அப்பா இன்னொரு பாடல் எழுதி இருந்தார். அதன் பல்லவி-

“மண்ணில் கிடந்தாலும்
மடியில் இருந்தாலும்
பொன்னின் நிறம் மாறுமோ...”

என்று தொடங்கும் பாடல். பின்நாளில் ‘பாசமலர்’ படத்திற்கு அதே டியூனுக்கு வார்த்தைகளை மாற்றி எழுதித் தந்தார். அந்தப் பாடல்தான்

“மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே”  என்ற பாடலாகும்.

கிளி சாப்பிட்ட இட்லி

அமராவதிபுதூர் குருகுலத்தில் அப்பா படித்துக் கொண்டிருந்தார். தினமும் பள்ளி தொடங்கும்போது அப்பாதான் கடவுள் வாழ்த்து பாடுவாராம்.

பாரதியாரின் கிளிப்பாட்டைத்தான் அப்பா தினமும் பாடுவாராம். அப்பா பாடுவதற்கு வந்த உடனேயே மற்ற மாணவர்கள் ‘வந்திட்டான்டா கிளி’ என்பார்களாம். இதனாலேயே குருகுலத்தில் அப்பாவுக்கு ‘கிளி’ என்று பெயர்.

அமராவதிபுதூர் குருகுலத்தில் அனைவருக்கும் உணவு அளந்துதான் தரப்படும். இட்லி என்றால் இரண்டு, தோசை என்றால் இரண்டு என்று கணக்கிட்டுதான் தரப்படும். அப்பாவுக்கோ அது ஒரு மூலைக்குக் கூட காணாது.

அதனால் உணவு பரிமாறுபவனை ‘தாஜா’ பண்ணி வைத்திருந்தார். அவன் இட்லி வைக்கும் போது ஒரு இட்லி வைத்து விட்டு இன்னொன்றின் மேல் ஒன்றாக இரண்டு இட்லிகளை வைத்து அழுத்தி வைத்துவிடுவானாம்.

மேலோட்டமாக பார்த்தால் இரண்டுதான் இருக்கும். சற்று உற்றுப்பார்த்தால் ஒன்று பெரிதாகவும், இன்னொன்று சிறிதாகவும் இருக்கும்.

ஒரு முறை ஹாஸ்டல் வார்டன் மேற்பார்வையிட அங்கே வந்துவிட்டார். ‘எங்கே தான் மாட்டிக்கொள்வோமோ’ என்று பயத்தில் அப்பா, மூன்று இட்லிகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அழுத்தி வைத்து விட்டார்.

பார்வையிட்டுக் கொண்டே வந்த வார்டன், அப்பாவின் தட்டைப்பார்த்து நின்றுவிட்டார். “என்ன முத்தையாவுக்கு வச்ச இட்லி மட்டும் இவ்வளவு பெரிசா இருக்கு?” என்று வார்டன் கேட்க, அப்பா திருதிருவென விழிக்க, பக்கத்தில் இருந்த இன்னொரு மாணவன் (அவர் பெயரை அப்பா சொல்லி இருக்கிறார், எனக்கு மறந்துவிட்டது), “சார், அது கடைசியா வழிச்சு ஊத்தின இட்லி” என்று சமயோஜிதமாக சொல்ல, வார்டனும் தலையை ஆட்டிவிட்டு போய்விட்டாராம்.

அப்பா இதை அப்படியே செய்து காட்டும் போது எனக்கு அப்படி சிரிப்பு வரும்.

“ஜெயான்னா யாருப்பா”

ஜெயகாந்தன்
அப்பா எப்போதும் காரில் முன் சீட்டில்தான் உட்காருவார். வெளியூர் போவதென்றால் மட்டும் பின் சீட்டில் தலையணை வைத்து படுத்து தூங்கிக்கொண்டு வருவார். காரின் பின் சீட்டில் அமர்வது ஏதோ முதலாளி தோரணையை தரும் என்பதால், பின் சீட்டில் உட்காரவே மாட்டார்.

ஒரு முறை அப்பாவுடன் கம்போசிங் போய்விட்டு காரில் வந்துகொண்டிருந்தோம். வழக்கம்போல அப்பா முன் சீட்டில். பின்னால் நானும், ராம கண்ணப்பனும் இருந்தோம்.

அப்பா, கண்ணப்பனிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்தார். இடையிடையே ‘ஜெயா, ஜெயா’ என்ற பெயர் என் காதில் விழுந்தது.

‘நாளைக்கு ஜெயா கிட்ட பேசணும்’, ‘ஜெயாவை போய் பாக்கணும்’... இப்படி ஏதோ சொல்லிக் கொண்டுவந்தார்.

பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கு ஒரு குறுகுறுப்பு. ‘யார் இந்த ஜெயா’ என்று அறிந்துகொள்ளும் ஆவல்.

“யார் அப்பா இந்த ஜெயா?” என்று கேட்டுவிட்டேன்.

நான் காரில் இருப்பதே அப்போதுதான் அப்பாவின் நினைவுக்கு வருகிறது. “டேய் நீ பின்னாலதான் இருக்கியா? நல்ல வேளை... நேரே உன் அம்மாகிட்ட போய், அப்பா யாரோ ஜெயாவை பார்க்க போகணும்னு சொல்லிகிட்டு இருந்தார்னு சொல்லி வச்சிருப்பே.. ஜெயானா அது ஜெயகாந்தன், சரியா?” என்றார்.

அப்பாவும் ஜெயகாந்தனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு எழும். ஆனாலும் அதையும் மீறிய நட்பு அவர்களுக்கிடையே இருந்தது.

தனது கண்ணதாசன் மாத இதழில், ஜெயகாந்தன் எழுத வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அதை ஜெயகாந்தனிடம் சொன்ன உடனே அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டு “சினிமாவுக்குப் போன சித்தாளு” கதையை தொடராக எழுதினார்.

அதே போல அப்பா தயாரித்த “சமூகத்தில் நால்வர்” என்ற படத்தை ஜெயகாந்தன் இயக்கினார். பல காரணங்களுக்காக படம் 3000 அடி வளர்ந்த நிலையில் நின்று போனது.

சமூகத்தில் வாழுகின்ற ஒரு திருடன், ஒரு விபச்சாரி, ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மிகவாதி. இவர்கள் வாழ்க்கையில் ஒருவர் மாற்றி ஒருவர் எங்காவது குறுக்கிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி சமூகத்தின் அவலங்களை சாடும் கதை. படமாக்கப்பட்ட பகுதிகளை பார்த்த ஞாபகம் இருக்கிறது.

நாகேஷ் ஒரு திருடன், அவர் ஒரு இரவு திருடுவதற்காக கை துப்பாக்கியுடன் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைந்து விடுகிறார். அந்த வீட்டில் இருக்கும் தேவிகா, திருடனை பார்த்து பயப்படவில்லை.

“துப்பாக்கியை காட்டியும் பயப்படாத நீ யார்?” என்று இவர் கேட்க, “சமூகம் உனக்கிழைத்த தீங்கினால் நீ திருடனாக ஆனாய், அதே சமூகம் என்னை விபச்சாரி ஆக்கியது.. சரி இப்போ உனக்கு என்ன வேண்டும்” என்று அவள் கேட்க.. “சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு.. சோறு போடுறியா?” என்று கண்ணீருடன் நாகேஷ் கேட்ட அந்த காட்சி இன்னும் என் நினைவில் நிற்கிறது.

‘ரஷ்’ பார்த்துவிட்டு வெளியே வந்து அப்பா சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தது ஒரு கனவு போல இருக்கிறது.


Next Story