கால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி


கால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி
x
தினத்தந்தி 25 May 2019 10:57 AM GMT (Updated: 25 May 2019 10:57 AM GMT)

கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் பலர், கால்களால் பலவித வேலைகளைச் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்

அமெரிக்காவில், கைகள் இல்லாத ஒரு பெண், கால்களால் விமானம் ஓட்டி வியக்க வைக்கிறார்.

அந்நாட்டின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா காக்ஸ் என்ற பெண் விமானிதான் அவர். தற்போது 30 வயதாகும் ஜெசிக்கா, பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர். அதனால் இவரது பெற்றோர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.

ஆனால், ஜெசிக்கா வளர வளர அவரது அறிவும், ஆறுதலான பேச்சும் அவர்களை சந்தோஷப்படுத்தியது. ஜெசிக்காவின் சிறு வயதில், உறவினர் ஒருவருடன் விமானத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்புக் கிடைத்தது.

அன்று முதல், விமானத்தின் மீதும், விமானம் ஓட்டும் பணியின் மீதும் ஜெசிக்காவுக்கு தீராத ஈர்ப்பு ஏற்பட்டது. பட்டப் படிப்பை முடித்த பின்னர், விமானிக்கான பயிற்சி பெற விரும்பினார்.

அவருக்குச் சரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் கிடைக்கவே, அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கடும் பயிற்சி மேற்கொண்டு, லைட் ஸ்போர்ட் என்ற சிறு விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார்.

இதனால் கைகள் இன்றி, கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனையை ஜெசிக்கா புரிந்தார்.

இவர் விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல், கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என பல திறமைகளைப் பெற்று ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.

மேலும் ஜெசிக்கா, ‘டோடாக்ஸ்’ எனும் யூ-டியூப் பக்கத்தின் மூலம், கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வேலைகளில் இருக்கும் பளுவைக் குறைத்து எளிதாகச் செய்ய பயிற்சி அளித்தும், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தும் வருகிறார். இப்படி, நடமாடும் தன்னம்பிக்கையின் வடிவமாக ஜெசிக்கா விளங்குகிறார்.


Next Story