முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் : சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் : சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 27 May 2019 10:26 AM GMT (Updated: 27 May 2019 10:26 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நிகர ஏற்றம்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 1,503.95 புள்ளிகள் அதிகரித்து 39,434.72 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 436.95 புள்ளிகள் முன்னேறி 11,844.10 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரம், பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி வியாழக்கிழமை

மாதத்தின் இறுதி வியாழக்கிழமை என்பதால் வருகிற 30-ந் தேதி ஏப்ரல் மாதத்திற்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த நாளில் பங்கு வியாபாரம் சரிவை சந்திப்பது வழக்கம். இதன் தாக்கத்தை 29-ந் தேதி (புதன்கிழமை) அன்றே உணர முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 8 உள்கட்டமைப்பு துறைகளின் ஏப்ரல் மாத உற்பத்தி வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்தத் துறைகளின் உற்பத்தி 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

அதே நாளில் மத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறை புள்ளிவிவரமும் வெளியாக வாய்ப்பு உள்ளதால் அதுவும் பங்கு வியாபாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும் காரணியாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி) மத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறை 134 சதவீதத்தை எட்டி உள்ளது. அரசின் மொத்த செலவிற்கும், கடன் அல்லாத மொத்த வரவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு வாங்க வேண்டிய கடன் அளவை சுட்டிக்காட்டும் அளவுகோலாக கருதப்படுகிறது.

ஜி.டீ.பி.

வெள்ளிக்கிழமை அன்று, கடந்த நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி) பற்றிய புள்ளிவிவரம் வெளியாக இருப்பதால் இது பங்குச்சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கும் அம்சமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முந்தைய காலாண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது.

சென்ற வாரத்தில் பீ.பி.சி.எல்., எச்.பி.சி.எல். டாட்டா மோட்டார்ஸ், டீ.எல்.எப்., பாரத் போர்ஜ், டெக் மகிந்திரா, அசோகா பில்டுகான், பஜாஜ் இந்துஸ்தான் சுகர், டாரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ், இண்டஸ் இந்த் வங்கி, எம்.ஓ.ஐ.எல்., பாட்டா இந்தியா, அசோக் லேலண்டு, ஐ.டீ.எப்.சி. என்.சி.சி. உள்பட பல பெரிய நிறுவனங்கள் தமது முடிவுகளை வெளியிட்டன.

நடப்பு வாரத்தில் என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ், கெயில், இண்டிகோ, ஜீ என்டர்டெயின்மெண்ட், பி.என்.பீ., சன் பார்மா, கோல் இந்தியா, பவர் கிரிட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் நிதி நிலை முடிவுகளை அறிவிக்கின்றன. குறுகிய கால அடிப்படையில் இது பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முக்கிய புள்ளிவிவரங்கள்

கடந்த 2018-19-ஆம் ஆண்டு தொடர்பாக பல்வேறு முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்கள் தொடர்பாகவும், முதல் காலாண்டு (2019 ஜனவரி-மார்ச்) தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவையும் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க வாய்ப்பு உண்டு.

மேற்கண்ட காரணிகள் தவிர கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற உலக நிலவரங்கள் இந்த வார வர்த்தகத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

Next Story