காவிரி ஆணையம் தனது தீர்ப்பை செயல்படுத்துமா?


காவிரி ஆணையம் தனது தீர்ப்பை செயல்படுத்துமா?
x
தினத்தந்தி 30 May 2019 5:35 AM GMT (Updated: 30 May 2019 5:35 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 28-5-2019 அன்று ஒரு சடங்கு போல் நடந்து முடிந்துள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று பொதுவாக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு வழங்கி உள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் முதல் கூட்டம் நடத்திய பிறகு டிசம்பரில் 2-வது கூட்டம் நடத்தி தனது பணியை நிறுத்திக்கொண்டது காவிரி மேலாண்மை ஆணையம். ஒரு தடவை கூட தனது உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு கட்டளை இட்டது இல்லை.

இப்போது ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விட போட்டுள்ள ஆணையை கர்நாடகம் செயல்படுத்தப்போவது இல்லை என்பதற்கான எல்லா அறிகுறிகளும் வெளிப்பட்டு விட்டன. கர்நாடக பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இது பற்றி முடிவெடுப்போம் என்று கூறி உள்ளார். இதன் பொருள் என்ன?

இது ஒரு சட்டப்படியான ஆணை என்று கூறும் போது அதை நிறைவேற்ற வேண்டும் அல்லவா? பருவமழை போதிய அளவு இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மையானால் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு அங்கு சென்று களஆய்வு நடத்தி அதன் பேரில் ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் முடிவு எடுக்கவேண்டுமே தவிர, கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முடிவு எடுக்க முடியாது.

காவிரி ஆணையம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்ட செய்தி வெளியானவுடன், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா, கர்நாடக அதிகாரிகள், ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியதை ஒத்துக்கொண்டு வந்தது தவறு என்று கூறி உள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள மந்திரி சிவக்குமார், புதிதாக அமைய உள்ள பாரதீய ஜனதா அரசிடம் கர்நாடக பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்வாக்கு செலுத்தி கர்நாடக நலனுக்கு சாதகமாக செய்து வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறி உள்ளார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஏற்கனவே நடந்தது போல், எந்த உச்சநீதிமன்ற தீர்ப்பையும், ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடகம் செயல்படுத்த தயார் இல்லை என்று தெரிகிறது.

அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்த மறுத்தாலோ, அதன் மீது ஒரு நடவடிக்கையும் மத்திய அரசும் எடுக்காது, உச்சநீதிமன்றமும் எடுக்காது என்பது நடைமுறை உண்மை, காவிரி ஆணையம் ஜூன் மாதத்துக்குரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கூறிய உடனேயே கர்நாடகத்தில் எதிர்வினைகள் புறப்பட்டு விட்டன. ஆனால் தமிழக அரசு சார்பாக அல்லது தமிழக எதிர்க்கட்சிகள் சார்பாக உரிய எதிர்வினை வெளிப்படவில்லை. அதைவிட காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் இருந்து மே மாதம் வரை கர்நாடகம் மாதம் வாரிய தமிழகத்திற்கு திறந்து விட்டு இருக்க வேண்டிய மொத்த நீர் 19.5 டி.எம்.சி. இந்த பாக்கி தண்ணீரை கேட்கவில்லை.

காவிரி ஆணையம் காவிரி தீர்ப்பின்படி மாதம் வாரியாக விட வேண்டிய தண்ணீரை திறந்து விடும் அதிகாரம் படைத்த அமைப்பு. ஆனால் ஒரு தடவை கூட இந்த ஆணையமோ, ஒழுங்காற்று குழுவோ, கர்நாடக அணைகளை பார்த்தது இல்லை. இன்னும் குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் அதிகமாக தண்ணீர் வரும் என்ற உண்மையின் அடிப்படையிலும், தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் காவிரி ஆணையம் ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 10 நாட்களுக்கு ஒருமுறை கூடி தண்ணீர் திறப்புக்கு அவ்வப்போது கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் அதன்படி செயல்படவில்லை.

அத்துடன் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியும் ஏன் பெங்களூருவில் ஒழுங்காற்றுக்குழு அலுவலகம் அமைக்கவில்லை. இது குறித்து தமிழக அதிகாரிகள் ஆணைய கூட்டத்தில் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

தமிழ்நாடு அரசு இதில் முழு அக்கறை காட்டி ஆணைய கூட்டத்துக்கு செல்லும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தால் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள்.

இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு தனக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

கர்நாடகம் தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடுகிறோம் என்று கூறி உள்ளது. இது பற்றி கள ஆய்வு செய்து, காவிரி ஆணையம் ஒரு குழுவை அனுப்ப வேண்டும். அவ்வாறு செயல்பட வில்லை என்றால் தமிழக அரசு மூத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவை அனுப்பி, கர்நாடகத்தில் கள ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழு, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி தீர்ப்பில் கூறியுள்ள முறைகளின்படி கர்நாடகம் தண்ணீரை பயன்படுத்தியதா? விதிகளுக்கு மாறாக புதிய, புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கி தண்ணீரை கொண்டு பதுக்கியதா? என்பதையும், விதிமுறைகளுக்கு அப்பால்கோடை காலத்தில் கூடுதல் சாகுபடி செய்து தண்ணீர் இருப்பை காலி செய்ததா?, சட்ட விரோத நீர்த்தேக்கங்களில் காவிரி நீரை பதுக்கி வைத்துள்ளதா? என்பதை கண்டறிந்து, அதை எல்லாம் சுட்டிக்காட்டி ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் ஆற்றல் மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும். இது அதிகாரிகள் மட்டத்தில் உள்ள பிரச்சினை என்று தமிழக அரசு தலையிடாமல் ஒதுங்கிக்கொள்ளாமல், தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

- பெ.மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு.

Next Story