உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 2 Jun 2019 6:30 AM GMT (Updated: 1 Jun 2019 12:25 PM GMT)

அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தில் பிறந்தவள். சிறுவயதில் இருந்தே நடனத்தில் அதிக ஈர்ப்பு இருந்தது. தாயார், அவளது நடன ஆர்வத்தை புரிந்துகொண்டு நடன பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைத்தார்.

பயிற்சியின்போதே வெளி நிகழ்ச்சி களுக்கு செல்லத் தொடங்கினாள். குறுகிய காலத்திலே ஓரளவு பிரபலமாகி, பணம் சம்பாதிக்கவும் செய்தாள்.

அழகு அதிகம்கொண்டவளாக இருந்ததால் அவளுக்கு அவ்வப்போது காதல் தொந்தரவுகளும் ஏற்பட்டன. கவனமாக அதை கடந்து சென்று கொண்டிருந்தாள். ஆனால் 21 வயதை தொட்டுக் கொண்டிருந்தபோது, சந்தித்த அவன், எப்படியோ அவள் மனதைத் தொட்டுவிட்டான்.

அவன், அவள் நடனம் கற்ற மையத்தில் பயிற்சியாளருக்கு துணையாக பணிபுரிந்தவன். நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் அவள் பங்குபெறும்போதெல்லாம் அவள் மீது தனிக்கவனம் செலுத்துவான். நிகழ்ச்சிகளின்போது அவளுக்கான உடைகளை தேர்வு செய்வதிலும், அவளுக்கு மேக்அப் போட்டு அழகாக ஜொலிக்கவைப்பதிலும் அதிக ஆர்வம்காட்டினான். தனிப்பட்ட முறையில் அவள் மீது அதிக அக்கறை செலுத்தி அவளது இதயத்தில் இடம்பிடித்துவிட்டான். அவன் பார்க்க சினிமா நடிகர் போன்று அழகாக இருப்பான். கார் ஒன்றும் வைத்திருந்தான். ஆடம்பரமாக செலவும் செய்துவந்தான்.

மகளின் செயல்பாடுகள் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் சொந்தத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவசரமாக திருமணம் செய்துவைக்க திட்டமிட்டார்கள். அதனால் அவள் குடும்பத்தினர் மீது கோபம் கொண்டாள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவன், அவளோடு அதிக நெருக்கம்காட்டினான். ‘நடனத்துறையில் உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அதை கெடுக்கும் விதத்தில் உன் பெற்றோர் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்காமல் நீ உன் வளர்ச்சியில் கவனம் செலுத்து. வீட்டிற்கு செல்ல உனக்கு பிடிக்கவில்லை என்றால் என்னோடு தங்கிக்கொள்’ என்றான்.

அவள், தனது எதிர்கால வளர்ச்சிக்கு அவன்தான் பொருத்தமானவன் என்று முடிவுசெய்தாள். வெளியூர் நிகழ்ச்சி என்று கூறிக்கொண்டு அவனோடு தங்கினாள். அவனை திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள். அதற்கு அவன், ‘இப்போது நாம் திருமணம் செய்துகொண்டால், திருமணமானவள் என்று கூறி உன்னை இந்த பீல்டில் இருந்தே ஒதுக்கி விடுவார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ளாமலே சில வருடங்கள் சேர்ந்துவாழ்வோம். நீ இந்த துறையில் முன்னணி இடத்தை பிடித்தபின்பு நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்றான்.

அடுத்த சில வாரங்களிலே அவள் பெற்றோரை பகைத்துக்கொண்டு தனது உடைமைகளோடு அவனிடம் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டாள். இவள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துக் கொண்டிருந்தாள்.

இப்படியாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்த சூழலில், ஒருநாள் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஜோடியாக விருந்துக்கு சென்றார்கள். அங்குவைத்து, அவன் தனது நண்பன் என பகட்டான ஒருவனை அறிமுகம் செய்துவைத்தான். அவனை பல நாடுகளில் தொழில் தொடர்புவைத்திருக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் என்றான். அவன் இவனிடம், ‘நீயும் என்னோடு சேர்ந்து தொழில்செய்தால் கோடிகோடியாக சம்பாதிக்கலாம். முதலில் மட்டும் பெயரளவுக்கு கொஞ்சம் முதலீடு செய்’ என்று ஆசை காட்டினான்.

முதலீடு செய்வதற்கு இவன் கையில் பணம் எதுவும் இல்லாததால், ரகசிய மனைவியின் உதவியை நாடினான். ‘இப்போதைக்கு உன்னிடம் இருக்கும் பணத்தையும், நகையையும் கொடு. அதைவைத்து நான் தொழிலில் முதலீடு செய்து அவனோடு பார்ட்னர் ஆகிவிடுகிறேன். நாம் சீக்கிரமே நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்’ என்றான்.

அவள் மறுக்க, அவன் அடம்பிடித்தான். தன்மீது நம்பிக்கை இல்லாததால்தானே தரமறுக்கிறாய்? என்றெல்லாம் கூறி அவள் மனதை கரைத்து, அவளிடமிருந்து பெருமளவு நகை, பணத்தை வாங்கிவிட்டான். சேர்த்துவைத்த செல்வமெல்லாம் கையைவிட்டு போன கவலையில் அவள் கலங்கிப்போயிருந்த சூழலில், அடுத்த பேரிடி அவளுக்கு காத்திருந்தது.

அன்று காலையில் அவள் அவசரஅவசரமாக நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு இளம் பெண் இரண்டு குழந்தை களோடு வீட்டிற்குள் புகுந்தாள். அப்போது அவன் வீட்டில் இல்லை. கண்டபடி அவளை திட்டிவிட்டு, ‘நீ யார்? என் வீட்டில் உனக்கு என்ன வேலை? என் கணவனை எங்கே? இவை இரண்டும் அவன் குழந்தைகள்..’ என்று ஆக்ரோஷமாக கத்தினாள். இவள் வெலவெலத்துபோய் நிற்க அவள், இவளை வீட்டைவிட்டு வெளியே தள்ளி கதவைபூட்டிக்கொண்டாள்.

அழுவதற்குகூட தெம்பில்லாமல் இவள் அவமானப்பட்டுப்போய் ரோட்டில் தலை குனிந்து நிற்க, அவன் காரில் விரைந்து வந்தான். அவளை அவசரமாக காரில் ஏற்றினான். ‘அவள் என் மனைவிதான். அந்த குழந்தைகள் என்னுடையவைதான். நான் உன்னை ஏமாற்றிவிட்டேன். அவளை எனக்கு பிடிக்கவில்லை. விரைவில் விவாகரத்து செய்து விடப்போகிறேன். இப்போதைக்கு நான் உன்னை உன் அம்மா வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன். அங்கே இருந்துகொள். அவளை சமாளித்து அனுப்பிவிட்டு வந்து உன்னை அழைத்து செல்கிறேன்’ என்று கூறி, அவளை தாய் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பிப் போய்விட்டான். அவன் எங்கே போனான் என்று தெரியாது.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில்தான் அவன் பெண்களை திட்டம்போட்டு ஏமாற்றும் பேர்வழி என்பதும், திடீர் பணக்கார நண்பனும், குழந்தைகளோடு திடீரென்று தோன்றும் பெண்ணும் அவனது கும்பலை சேர்ந்த ‘செட்டப்’ கதாபாத்திரங்கள் என்பதும் அவளுக்கு புரிந்திருக்கிறது. இவளை போல் ஏற்கனவே சில பெண்களும் இந்த சதிகார கும்பலிடம் ஏமாந்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக சம்பாதித்த நகை, பணத்தோடு தன்னையும் இழந்துவிட்டதை நினைத்து அவள் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

- உஷாரு வரும். 

Next Story