பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் இடம் பெறுகிறது தி.மு.க.


பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் இடம் பெறுகிறது தி.மு.க.
x

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி யாருக்கும் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒற்றுமையுடன், ஒரே அணியாக செயல்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தேசிய தொலைக்காட்சி சேனல்களில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் குறைந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கும் அதிகமான இடங்களை வென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக யார் செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் சாசன விதிமுறைகளின்படி, மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களை வெல்லும் கட்சியின் தலைவர் தான், எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை பெறுவார். அதாவது குறைந்தது 55 எம்.பி.க்களை கொண்ட கட்சியின் தலைவர். இது அனைத்து கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களின் மொத்த எண்ணிக்கையை கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை. ஒரு அரசியல் கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. மக்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளில், அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை கொண்ட கட்சி என்பதால் மட்டும் இந்த பதவி கிடைக்காது. இந்த 10 சதவீத விதிமுறையை, முதலாவது மக்களவையின் சபாநாயகர் ஜி.வி.மவலங்கர் பிரகடனப்படுத்தினார். நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 1952-ம் ஆண்டு பொது தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை. 1969-ம் ஆண்டு வரை இந்தநிலை நீடித்தது.

கேபினட் மந்திரியின் அந்தஸ்த்தை உடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அரசியல் சாசன முறைப்படியான நியமனம் ஆகும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஆகியவற்றில் அங்கம் வகிப்பார். மக்களவையின் சபாநாயகர் இவரை நியமிப்பார்.

நடந்து முடிந்த தேர்தலில் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, மக்களவையில் 2-வது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கான தகுதியை இழந்துள்ளது. இதே போல், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், 44 இடங்களில் மட்டும் வென்றதால், 16-வது மக்களவையிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியவில்லை. தொடர்ந்து 2-வது முறையாக, எதிர்க்கட்சி தலைவரே இல்லாத நிலை தொடர்கிறது.



காங்கிரஸ் கட்சி, ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட, 23 எம்.பி.க்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க. உடனும், 22 எம்.பி.க்களை கொண்ட 4-வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, மக்களவையில், மொத்தம் 92 எம்.பி.க்கள் உள்ளனர். ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ஆதரவை தொடர்ந்து அளித்து வருகிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, எதிரிக்கு (பா.ஜ.க.), எதிரி (காங்கிரஸ்), தனக்கு நண்பன் என்ற அடிப்படையில் ஆதரவளிக்கிறார்.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டார். அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

தனது ஆதரவை உறுதி செய்யும் விதத்தில், சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் உடனடியாக உரையாடிய ஸ்டாலின், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐ.மு.கூட்டணிக்கு பெரும் தோல்வி கிட்டியுள்ள நிலையிலும், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடர்கிறது என்பதை இதன் மூலம் ஸ்டாலின் உணர்த்தினார். தேசிய அளவில், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட தி.மு.க. தயாராகி வருவதையும் இது காட்டுகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்க தி.மு.க.விற்கு வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராஜா போன்ற தலைவர்களும், இதர தி.மு.க. உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில், தமிழக பிரச்சினைகளைக்கு மட்டும் குரல் கொடுக்காமல், தேசிய பிரச்சினைகள் பற்றியும் பேச வேண்டியிருக்கும்.

மோடி எதிர்ப்பு அலையின் அடிப்படையில் வாக்களித்த தமிழக வாக்காளர்களிடம் இது நல்ல வரவேற்பை பெறும். இதை உறுதி செய்யும் விதத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும், மீண்டும் வெற்றி பெற உறுதி எடுப்பது மோடி-அமித் ஷா கூட்டணியின் வழக்கம். பிரதமர் மோடியின் அணி, தென் இந்தியாவில் வெற்றி பெறும் கனவை கைவிடவில்லை என்பது தெளிவாகிறது.



தமிழகத்திற்கு தேவையான உதவிகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த இருப்பதாக, தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய போது, மோடி கூறினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரான நிதின் கட்கரி மற்றும் இதர மந்திரிகள் பலரும், தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைந்தாலும், மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என்று கூறினர். சேலம்-சென்னை அதிவிரைவுச் சாலை திட்டம், தமிழகத்தின் தண்ணீர் பற்றாக் குறையைப்போக்க, கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதையும், தனித்து நின்று அதை எதிர்த்து போராட முடியாது என்பதையும் சமீபத்திய அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொண்டுள்ளார். 2021-ல் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. உறுதி பூண்டுள்ள நிலையில், தனது கட்சியை காப்பாற்ற புதிய அரசியல் கூட்டாளிகளை பெற வேண்டிய நிர்பந்ததில் இருக்கிறார் மம்தா.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு உறுதியான கூட்டணியை உருவாக்கி, இரு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டிய சவாலான காரியத்தை காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ளது. சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது இன்னும் வலு சேர்க்கும். 2022-ல் நடக்க இருக்கும் உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வை எதிர் கொள்ள இத்தகைய கூட்டணி மிகவும் உதவும்.

தென் மாநிலங்களில், தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், டி.ஆர்.எஸ் கட்சியின் சந்திர சேகர் ராவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டியும், பா.ஜ.க. எதிர்ப்பின் தூண்களாக சமீப காலம் வரை கருதப்பட்டனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின், சந்திரபாபு நாயுடு மிகவும் பலவீனமடைந்துள்ளார். டி.ஆர்.எஸ் கட்சிக்கும் அதே நிலை ஏற்பட்டு உள்ளது. ஆந்திராவில் பெறும் வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது வெற்றிக்கு பா.ஜ.க. அளித்த மறைமுக ஆதரவை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். மோடி வெற்றி பெற்ற பின், உடனடியாக அவரை சந்தித்தார். வெற்றி பெற்ற பின் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பேசிய மோடி, ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியில் உள்ளவர்களை பற்றி எதிர்மறையான விமர்சனங்களை இந்திய மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. ‘சவுகிதார் ஒரு திருடன்’ போன்ற எதிர்மறையான கோசங்களை காங்கிரஸ் கட்சி தவிர்த்து விட்டு, ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே இதில் இருந்து கிடைக்கும் பாடம் ஆகும்.

இந்த முறை எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிக அளவில், தகுந்த ஆதாரங்களுடன், சமகால பிரச்சினைகளை பேச வேண்டும். ரபேல் விவகாரம் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும். இந்திய வாக்காளர்கள் அரைவேக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளை ஏற்பதில்லை.

தலித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவராக மக்களவையில் திறமையாக செயல்பட்டாலும், அவரால் மோடி மற்றும் இதர பா.ஜ.க. தலைவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மக்களவையில், ஒரு திறமையான பேச்சாளரை எதிர்க்கட்சிகளின் தலைவராக காங்கிரஸ் கட்சி முன் நிறுத்தினால் தான், இனி மீண்டு வர முடியும்.

திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ள சசி தரூர் போன்ற, திறமையான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அவரின் பேச்சாற்றல் மற்றும் தலைமை பண்புகள் பற்றி அனைவரும் அறிவார்கள். மக்களவை செயல்பாடுகளில் சசி தரூர் முக்கிய பங்கு வகித்தால், அதன் மூலம் தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கூடும்.

2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்கவும், நடுவில் வர இருக்கும் சுமார் 30 சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேச தேர்தல்களை சந்திக்கவும், எதிர்க்கட்சிகள் தங்களின் வியூகங்களை மாற்றி அமைக்க ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

Next Story