எழிலும் பொழிலும் இணைந்த பொள்ளாச்சி


எழிலும் பொழிலும் இணைந்த பொள்ளாச்சி
x
தினத்தந்தி 5 Jun 2019 4:04 PM GMT (Updated: 5 Jun 2019 4:04 PM GMT)

நாம் பார்த்து ரசித்த பல திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர் பொள்ளாச்சி. கோவைக்கு தெற்கே அமைந்துள்ள இந்த ஊர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ளது.

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இந்த ஊருக்கு ‘பொழில் வைச்சி’ என்பது இயற்பெயர் . இயற்கை வளமும் செழுமையும் நிறைந்த ஊர் என்பது இதற்கு பொருள். இதுவே, பின்னாட்களில் மருவி பொள்ளாச்சியானது. வருடம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாத மிதமான வானிலையே இங்கு காணப்படுகிறது. இங்கு கண்டு களிக்க வேண்டிய பல இடங்கள் உண்டு.

பொள்ளாச்சியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் ஆழியார் நீர்த்தேக்கம் உள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்த்தேக்கம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை தொடர் பகுதியில் இருக்கிறது. இங்கே பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொழுது போக்குவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் அருமையான இடமாக திகழ்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு சிறிய தீம்பார்க் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் ஆனைமலை விலங்குகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் ஆகியவை அவசியம் பார்க்கப்பட வேண்டிய இடங்களாகும். கோவையிலிருந்து சுமார் 90 கி. மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆனைமலை சரணாலயம். 958 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் தேக்கு மரங்களால் சூழப்பட்டுள்ளது. இது இந்திரா காந்தி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. யானை, மான், காட்டெருமை, ஸ்லோத் என்றழைக்கப்படும் சோம்பலான விலங்கு, பறக்கும் அணில், எறும்புத்தின்னி, சிறுத்தை போன்ற பல விலங்குகளை இங்கே காணலாம். இந்த பூங்காவில் அமராவதி எனப்படும் ஒரு இயற்கை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதில் முதலைகளை பார்க்க முடியும். பல அறிய வகை பறவை இனங்களும் இங்கே இருக்கின்றன.

இன்னொரு சரணாலயமான பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஆனைமலை தொடருக்கும், கேரளாவின் நெல்லியம்பதி மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 285 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இவ்விடத்தில் சந்தன மரம், மூங்கில், ரோஸ்வுட் எனப்படும் கருங்காலி மரம் மற்றும் தேக்கு ஆகிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கே உலகின் தொன்மை யான மற்றும் உயரமான தேக்கு மரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பூங்காவில் இரண்டு பார்வையாளர் கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் நின்று கொண்டு பாதுகாப்பாக விலங்குகளை பார்த்து ரசிக்கலாம். சுட்டெரிக்கும் கோடை வெயிலை மறந்து பொள்ளாச்சியின் குளுமையான வானிலையில் சில நாட்கள் இருந்து வரலாம்.

Next Story