சிறப்புக் கட்டுரைகள்

எல்லைப் போராளி மார்ஷல் நேசமணி...! + "||" + Border fighter Marshall Nesmani

எல்லைப் போராளி மார்ஷல் நேசமணி...!

எல்லைப் போராளி மார்ஷல் நேசமணி...!
நாளை (ஜூன் 12-ந்தேதி) மார்ஷல் நேசமணி பிறந்தநாள்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு கேரளாவுடன் இணைந்திருந்த கன்னியாகுமரியும், மற்ற பகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு அரும்பாடுபட்டவர் மார்ஷல் நேசமணி. குமரித்தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் பள்ளியாடி என்ற சிற்றூரில் 12-6-1895-ம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் அப்பல்லோ-ஞானம்மாள்.

நேசமணி பள்ளிப்படிப்பை பள்ளியாடி, மார்த்தாண்டம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பயின்றார். கல்லூரி படிப்பு பாளையங்கோட்டையிலும், சட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் படித்து பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆரம்பகாலத்தில் ஆசிரியராய் பணியாற்றினார். பின்பு நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வந்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை உடையவர்.

1914-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் கரோலின். 1943-ம் ஆண்டு நாகர்கோவில் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1957 வரை நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்போதைய பிரதமர் நேருவால் பாராட்டப்பெற்றார்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு சமூகத்தினர் தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக்கொண்டு அரசனும் தங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தியதில் நடந்த சாதி கொடுமைகள் 10-ம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்தது.

ஆண்களின் மீசைக்கு வரி, கைத்தடிக்கு வரி, குடை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. 1936-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்க முயற்சிகள் தொடங்கப்பட்டது. காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை 1945-ல் கேரளாவுடன் இணைக்கப்பட்டது. மீண்டும் போராட்டம் தொடங்கியது.

இந்தப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் மா.பொ.சி. அகில இந்திய திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியில் மார்ஷல் நேசமணியும் போராட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண போராடி வந்தார். தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், நெய்யாற்றின்கரை, பீர்மேடு, தேவிகுளம் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று முனைப்போடு போராடி வந்தனர்.

1948-ல் குமரி உரிமை மீட்பு போராட்ட பொதுக்கூட்டம் நடந்தபோது கூட்டத்தை கலைக்க கேரள காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதியில் எல்லாம் போராட்டம் அதிகரித்தது. பா.ஜீவானந்தமும் இணைந்து செயல்பட்டு வந்தார். 1954-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந் தேதி திருவாங்கூர் தமிழக விடுதலை நாளாக அனுசரிக்கப்பட்டது. அப்போது திருவாங்கூர் தமிழர்கள் மீது கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் புதுக் கடையில் 5 பேரும், தொடுவட்டியில் 6 பேரும் மாண்டனர். நேசமணியின் இடைவிடாத முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டமும், கேரளாவுடன் சேர்ந்திருந்த இதரபகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். மார்ஷல் நேசமணி, தேவிகுளம், பீர்மேடு போன்ற தாலுகாக்கள் தமிழகத்தோடு இணைக்க பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அன்றைய அரசியல் தலைவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொழிவாரி மாநிலமாக பிரிக்கும்போது தமிழகத்தோடு தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை போன்ற பகுதிகளை இணைக்கவேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார் மார்ஷல் நேசமணி. அன்று அது நடந்திருந்தால் இன்று முல்லைப்பெரியாறு, நெய்யாறு போன்ற தண்ணீர் பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம்.

1957-ல் நேசமணி தமிழ்நாடு சட்டசபைக்கு கிள்ளியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்தத்தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு தனது 73-வது வயதில் நேசமணி காலமானார்.

நேசமணி மறைவின் காரணமாக நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. சட்டசபைத்தேர்தலில் விருது நகரில் தோல்வியுற்ற காமராஜர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேசமணியின் பெருமையை போற்றும்விதத்தில் நாகர்கோவிலில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டாக்டர் ச.தேவராஜ், கல்வியாளர்