விரல் ரேகை, தனித்த அடையாளம் கொண்ட அதிசயம்...


விரல் ரேகை, தனித்த அடையாளம் கொண்ட அதிசயம்...
x
தினத்தந்தி 12 Jun 2019 7:11 AM GMT (Updated: 12 Jun 2019 7:11 AM GMT)

இன்று (ஜூன்12-ந்தேதி) இந்தியாவில் விரல்ரேகை விஞ்ஞானம் உதயமான நாள்.

விரல் ரேகை விஞ்ஞானம் உலகம் தோன்றிய காலம் முதல் பயணிக்க தொடங்கி விட்டது. கி.பி. 851-ம் ஆண்டு மற்றும் 7-ம் நூற்றாண்டிலும் கி.பி.900 முதல் 1300 வரை எல்லா சாசனங்களிலும் கைவிரல் ரேகைகள் இடம்பெற்று இருந்தது. விரல் ரேகை முத்திரை தனித்த அடையாளம் கொண்ட அதிசயம். ஆண்டவனின் அற்புதம். பிறப்பிலிருந்து இறப்பு வரை விரல் ரேகை மாறாது. ஒருவருடைய விரல் ரேகை அந்த நபரின் மற்ற விரல்களுக்கோ அல்லது உலகத்திலுள்ள யாருக்கும் பொருந்தாது. மேலும் மேல் கோடுகள் (ரிட்ஜஸ்), பள்ளமான உள்கோடுகள் (பெர்ரோஸ்) மேலும் கண்ணுக்கு எளிதில் புலப்படக் கூடிய (கிரீஸஸ்) ஆகியவற்றை விஞ்ஞானிகள் விவரித்து விஞ்ஞானத்தை ஊர்ஜிதம் செய்தனர்.

1787 முதல் 1869-ம் ஆண்டுவரை வாழ்ந்த டாக்டர் ஜான் இவான்ஜிலிஸ்ட் புர்கன்ஜி என்னும் விஞ்ஞானி, அறிவியல் மேதை விரல் ரேகை தனித்துவத்தையும், மாறாத்தன்மை மற்றும் 9 வகைபாடுகளை தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 1822 முதல் 1916-ம் ஆண்டு வரை வாழ்ந்த டார்வின் தொப்புள்கொடி உறவினர், விரல் ரேகை விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் சர் பிரான்சிஸ் கால்டன் விரல்ரேகை தத்துவத்தை ஊர்ஜிதம் செய்தார். ஆர்ச், லூப், வேர்ல் என்பவர் விரல் ரேகையின் 3 வடிவத்தை கண்டுபிடித்ததால் ஸ்காட்லாண்டு யார்டில் பயன்பாட்டிற்கு வந்தது.

பிறகு 1833 முதல் 1917 வரை வாழ்ந்த கொல்கத்தாவின் மாவட்ட கலெக்டர், விரல் ரேகை விஞ்ஞானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பத்திரப்பதிவு உள்பட அனைத்திலும் விரல் ரேகையை பயன்படுத்த கட்டாயமாக்கினார். டாக்டர் ஹென்றி பால்ஸ், ஜப்பானில் விரல்ரேகை தத்துவத்தின் அடிப்படையில் குற்றங்களை கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார்.

1850 முதல் 1931 வரை வாழ்ந்த சர் எட்வர்டு ரிச்சர்ட் ஹென்றி என்னும் வங்காள மாநில ஐ.ஜி. விரல் ரேகை விஞ்ஞானத்தை வங்காள மாநில அரசு உதவியுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 22.8.1895-ம் ஆண்டு மதராஸ் பட்டினத்தில் குற்றப்புலனாய்வு துறையில் வட்டாரக் காவல்துறை அதிகாரி பொறுப்பில் பணியாற்றிய ஆய்வாளர் இ.ஏ. சுப்பிரமணிய அய்யர் பெரும் முயற்சியால் விரல் ரேகை பதிவுகளை பதிவு செய்து வகைபாடு செய்து, குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் 12.6.1897-ம் ஆண்டு இந்திய அரசாங்க இசைவு பெற்று முறைப்படி விரல் ரேகை கூடம் முதன் முதலில் இந்தியாவில் கொல்கத்தாவில் உதயமாகியது.

விதைக்கப்பட்ட விரல் ரேகை விஞ்ஞானத்தை உதாசீனப்படுத்தாமல், இந்தியாவின் சட்டத்தை இயற்றி, மருத்துவமனை, தொழிற்சாலை, பயணம் செய்யும்போது, காவல்துறை, நீதித்துறை, ஓட்டுநர் உரிமம், ஏ.டி.எம்., பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், ஆதார் அட்டை போன்ற அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறையில் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா உலகத்தின் உயர்ந்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கும்.

மனிதனின் கையெழுத்துக்கள் மாறுபடும். புகைப்படங்கள் போன்றவை ஊர்ஜிதமானவை அல்ல. மாறும் தன்மை கொண்டது. ஆனால் விரல்ரேகை விஞ்ஞானத்தின் மீது உறுதி காட்டினால் விவாதம் விரிவாகாது. தர்க்கத்தை விரும்பவில்லை என்றால் நீதிமன்றத்தின் கைவிரல் ரேகை விஞ்ஞானத்தை பயன்படுத்தி உண்மையான தீர்வு காணலாம்.

சா. கிருஷ்ணமூர்த்தி,
காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு),
விரல்ரேகை நிபுணர், சென்னை

Next Story