சிறப்புக் கட்டுரைகள்

பாடும் அலைகளின் நகரம் தரங்கம்பாடி + "||" + city of singing waves is Tharangambadi

பாடும் அலைகளின் நகரம் தரங்கம்பாடி

பாடும் அலைகளின் நகரம் தரங்கம்பாடி
டிரான்கோபார் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட தரங்கம்பாடி நாகை மாவட்டத்தில், காரைக்காலுக்கு வடக்கே இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு டச் காலனியாக விளங்கியது.
தரங்கம்பாடியில் இருக்கும் புகழ்பெற்ற டான்ஸ்பர்க் கோட்டை 150 ஆண்டுகளுக்கு டச் ஆளுநர் மாளிகையாக இருந்தது. நானூறு வருட பழமை வாய்ந்த கோட்டை இது. இந்த கோட்டையின் உள்ளே இருக்கும் மியூசியத்தில் டச்சுகாரர்களின் வரலாறுகள், அவர்கள் பயன்படுத்திய தட்டுகள், பீங்கான் சாமான்கள் மற்றும் பல கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் உயரமான தாழிகள் மற்றும் மிகப் பெரிய திமிங்கலத்தின் எலும்புகளும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டென்மார்க் மன்னர்களின் புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய கப்பல்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை பார்க்கையில் அந்த காலத்து பிரமாண்டங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

தரங்கபாடியில் எழுநூறு வருட பழமை வாய்ந்த மாசிலாமணி நாதர் கோவில் உள்ளது. மாறவர்மன் குலசேகர மன்னரால் கட்டப்பட்ட இந்த கோவில் எங்கும் காண முடியாத வகையில் சீனா மற்றும் தமிழக கட்டுமானக் கலையை இணைத்து கட்டப்பட்டுள்ளது. மேலும் 1718-ம் ஆண்டு ஜெர்மனியர்களால் கட்டப்பட்ட நியூஜெருசலேம் தேவாலயமும் இந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. கட்டப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தபால் அலுவலகம் ஒன்றும் இங்கே இயங்கி வருகிறது.

தரங்கம்பாடி என்ற வார்த்தைக்கு ‘பாடும் அலைகளின் நகரம்’ என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போல ஆர்ப்பரிக்கும் அலையோசையை கேட்டு கொண்டே கடற்கரையில் சிறிது நேரம் பொழுதை கழிக்கலாம். மற்ற கடற்கரைகளை போலில்லாமல் இங்கே அலை ஓசையை தவிர வேறு எந்த ஒலிகளும் கேட்காமல், ஒரு விதமான அமைதி நிலவுகிறது. பழமையின் குறியீடாய் நின்றிருக்கும் தரங்கம்பாடிக்கு சென்று வந்தால் காலச்சக்கரத்தின் மீதேறி பின்னோக்கி போன உணர்வு நிச்சயம் ஏற்படும்.

ஆசிரியரின் தேர்வுகள்...