சிறப்புக் கட்டுரைகள்

ஏரிகளின் நகரம் உதய்பூர் + "||" + city of lakes is Udaipur

ஏரிகளின் நகரம் உதய்பூர்

ஏரிகளின் நகரம் உதய்பூர்
வெளி மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூருக்கு பயணம் மேற்கொள்ளலாம். இந்த நகரம்தான் ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு மகுடம் சூட்டுவதுபோல் அழகிய நகரமாக ஆரவல்லி மலைத் தொடரின் இயற்கை எழிலோடு விளங்குகிறது. கிழக்குப் பகுதியின் வெனிஸ் என்றும் இந்நகர் அழைக்கப்படுவதிலிருந்தே இதன் அழகை புரிந்து கொள்ளமுடியும்.

இங்கு இயற்கை அழகுக்கு குறைச்சலே இல்லை. புராதன கோவில்கள், மனதை மயக்கவைக்கும் கட்டிட கலை ஆகியவை ஒருங்கே சேர்ந்த நகரம் இதுவாகும். இங்குள்ள பிச்சோலா ஏரியில் படகுசவாரி மேற்கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. படகு சவாரியின்போதே நீங்கள் காணும் இயற்கை காட்சிகள் ராஜஸ்தானுக்கு எந்த அளவுக்கு இந்த நகரம் பெருமை சேர்த்துள்ளது என்பதை உணர்வீர்கள்.

பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள உதய்பூரைச் சுற்றி நான்கு பிரதான ஏரிகள் உள்ளன. லேக் பேலஸ் ஓட்டல் இந்நகரின் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். இங்குள்ள நத்வாரா ஆலயம் மிகவும் பழம்பெருமை வாய்ந்தது. மேவார் அரசாட்சியில் இந்நகரம்தான் தலைநகராக திகழ்ந்தது. 1559-ம் ஆண்டு மகாராணா உதய் சிங் என்ற மன்னரால் உருவானது இந்த நகரம். மன்னர்களின் அரண்மனைகள் எந்த அளவுக்கு ஆடம்பரமாகத் திகழ்ந்தன என்பதை பார்த்தாலே புரியும். பிச்சோலா ஏரியைச் சுற்றி அமைந்துள்ள அரண்மனை வளாகங்கள் பார்ப்பதற்கே மிக அழகாகவும் ரம்மியமாகவும் காட்சி தருகின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி மிகவும் பிரமாண்டமான பெரிய ஏரியாகும். நகரின் மையப் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் அழகை ரசிப்பதற்கே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

மாலை நேரத்தில் இந்த ஏரியில் படகு சவாரி செய்யாமல் போனால் நீங்கள் இந்த நகருக்கு சுற்றுலா சென்றதே அர்த்தமில்லாமல் போய்விடும். மாலை நேரத்தில் கதிரவனின் பொற்கதிர்களில் அரண்மனை வளாகமே ஜொலிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும். 3 மைல் நீளமும், 2 மைல் அகலமும் கொண்ட இந்த ஏரி 30 அடி ஆழம் உடையது. பசுமை போர்த்திய மலைப் பகுதி அரண்மனையின் பின்பகுதியில் காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் மிகப் பிரமாண்டமானது இந்த அரண்மனைதான். பல திரைப்படங்களில் இந்த அரண்மனை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் நடித்த ஆக்டோபஸ்ஸி திரைப்படத்தின் காட்சிகள் இந்த அரண்மனையில் தான் படமாக்கப்பட்டது.

இங்குள்ள சஜன்கர் அரண்மனை, பன்ஸ்தாரா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 944 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பருவமழை அரண்மனை என்றும் இதை அழைப்பர். மழை மேகங்கள் திரண்டு வருவதை ராஜாக்கள் இங்கு வந்து ரசிப்பார்களாம். உதய்பூரின் வடக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது படேசாகர் ஏரி. ஆரவல்லி மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள இந்த ஏரியும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பகுதிதான்.

இந்த ஏரியில் நீர் சாகச விளையாட்டுகளும் உள்ளன. உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து மகிழலாம். ஏறக்குறைய ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது இந்த ஏரி. இங்கு படகு போன்ற தோற்றத்திலான ரெஸ்டாரென்ட் உள்ளது. குழந்தைகளைக் கவரும் விலங்கு காட்சி சாலையும் உள்ளது. மற்றொரு தீவாக அமைந்துள்ள பகுதியில் செயற்கை நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மூன்றாவது தீவில் சூரிய மின்னாற்றலில் செயல்படும் காணொளி மையம் உள்ளது.

இங்குள்ள பழங்கால கார் அருங்காட்சியகத்தில் மிகவும் அபூர்வமான புராதன கார்களை பார்க்கலாம். இங்குள்ள தூத் தலாய் இசை பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் அதிகம். இங்கு கேபிள் கார் வசதி உள்ளது. இதில் பயணித்து நகரின் அழகை ரசிக்கலாம். இங்குள்ள ஜெய்சாமந்த் ஏரி 100 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும்.

இதைச் சுற்றி ஜெய்சாமந்த் வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. 17-ம் நூற்றாண்டில் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. கோமதி நதியில் அணை கட்டும் போது இந்த ஏரியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. மிகவும் அமைதியான சூழல், இயற்கையை ரசிப்பவர்களுக்கு மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்கிறது. இங்குள்ள குலாப்பாக் விலங்கு காட்சியகம் இயற்கை எழில் மிகுந்ததாக உள்ளது. இங்கு ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும் அழகே தனி. மிக அழகாக இந்த காட்சியகம் பராமரிக்கப்படுகிறது.

இங்கு அரிய வகை ஆந்தைகள் உள்ளன. இங்குள்ள சில்ப கிராமம் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கிராமத்தில் கைவினைக் கலைஞர்கள் அதிகம். இதனாலேயே இது சிற்ப கிராமம் என அழைக்கப்படுகிறது. கைவினைப் பொருள்களை இங்கு வாங்கலாம். கைவினைக் கலைஞர்கள் மிகவும் அமைதியான சூழலில் புதிய பொருள்களை மிக நேர்த்தியாக வடிவமைப்பதற்கேற்ற சூழல் நிலவுகிறது. உதய்பூருக்கு சென்று திரும்பினால்தான் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நகராக இது திகழ்வதன் ரகசியம் புரியும்.

ஆசிரியரின் தேர்வுகள்...