உதிரம் கொடுத்து உயிரைக்காப்போம்...!


உதிரம் கொடுத்து உயிரைக்காப்போம்...!
x
தினத்தந்தி 13 Jun 2019 5:56 AM GMT (Updated: 13 Jun 2019 5:56 AM GMT)

நாளை (ஜூன் 14-ந் தேதி) உலக ரத்த தான தினம்.

தானத்தில் சிறந்தது ரத்த தானமா என்றால், நாம் நல்ல உடல் நிலையில் இருக்கும்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கொடுத்துக்கொண்டே இருக்கும் ரத்த தானமே சிறந்தது. விபத்தில் அடிபட்டாலோ, பிரசவத்தின் போது ரத்தப் போக்கு இருந்தாலோ ரத்தம் தேவை. ரத்த சோகைக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் தேவை.

உலகமெங்கும் ஜூன் 14 உலக ரத்த தானக் கொடையாளர் நாளாக, கார்ல் லேண்ட்ஸ்டீனர் என்ற நோபல் பரிசு விஞ்ஞானியின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது. இவர் தான் ரத்தத்தில் ஏ, பி, ஓ பிரிவுகள் உள்ளதை 1901-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதற்கு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஆராய்ச்சிகள் செய்து ஏ.பி ரத்த வகையைக் கண்டுபிடித்தனர். பின்பு (ஆர்.எச்.) காரணி கண்டுபிடிக்கப்பட்ட பின் ஆர்.எச். காரணியையும் சேர்த்து, கொடுக்கும் ரத்தமும், பெற்றுக்கொள்பவர் ரத்தமும் ஒத்துள்ளதா என்று ரத்த வங்கியில் சோதனை செய்த பின்பே ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது.

19 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ரத்தம் கொடுப்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும், ரத்தம் கொடுப்பதால் எந்தத் தொந்தரவும் வருவதில்லை. 300 மில்லி லிட்டரில் இருந்து 450 மில்லி லிட்டர் வரை ரத்தக் கொடை அளிக்கலாம்.

ரத்த தானம் செய்த பின் பழரசம் அருந்தலாம். சில மணி நேரங்களில் எடுத்த ரத்தத்தின் அளவுக்கு ஏற்றபடி புதிய ரத்தம் சுரந்துவிடும். 20, 25 நாட்களுக்குள் மற்ற சிவப்பணுக்கள் போன்றவை உண்டாகிவிடும். பழைய ரத்தம் உடலில் சுழல்வதைவிட ஒவ்வொரு மூன்று மாதமும் புதிய ரத்தம் சுரப்பது நல்லதல்லவா? ரத்த தானம் செய்த பின் தொடர்ந்து வேலை செய்யலாம், விளையாடலாம், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்த பின் சிலருக்கு பயத்தால் தலைசுற்றல் ஏற்பட்டால் படுக்க வைத்து கால்களை சற்றுத் தூக்கியபடி வைத்தால் சரியாகிவிடும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தம் உறையாத நோய் உள்ளவர்கள், அதிக ஆஸ்துமா கோளாறு உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இவர்களிடமிருந்து எப்பொழுதுமே ரத்தக்கொடை பெறக்கூடாது.

மஞ்சள் காமாலை, மலேரியா, மீசில்ஸ், மம்ஸ் போன்ற நோய் வந்தவர்கள் நன்கு குணமடைந்து விட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பின் 1 வருடம் கழித்துத் தரலாம் என்று உள்ளது. ஏனென்றால் இவை குணப்படுத்தக் கூடிய நோய்கள். ஆனால் அந்த நோய் வந்தவர்கள் ரத்த தானம் செய்ய வருவதில்லை.

ஆபரேஷன் செய்யப்பட்டவர்கள் 12 மாதம் கழித்து ரத்தம் தரலாம். கர்ப்பிணிகளிடமும், தாய்ப்பால் தருபவர்களிடமும் அவர்கள் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருக்கும் என்பதால் ரத்தம் பெறப்படுவதில்லை. ஒரு வருடத்திற்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகித்திருக்கக் கூடாது. மது, போதை மருந்து உட்கொண்டவர்களிடம் 72 மணி நேரத்திற்கு எடுக்கக்கூடாது

1976-ல் நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முதன்முதலில் ரத்தம் கொடுத்தபோது, ரத்தம் எடுக்க 15 நிமிடங்களே ஆயின. பின் எந்தச் சோர்வும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் கல்லூரிக்கு சென்றுவிட்டேன். ஒரு சேவை செய்த திருப்தி இருந்தது. பிறகு இன்று வரை 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் கொடுக்க ஆரம்பித்தும் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. வெளியூர் சென்றிருந்தாலும் அங்கு கொடுத்து விடுவேன்.

ரத்தம் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் தள்ளிபோவதையும், பிரசவ மருத்துவமனையில் உதிரப் போக்கால் தாய்மார்கள் தொல்லைப்படுவதையும் பார்த்து, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் தன்னார்வ ரத்த தானக் கழகம் ஆரம்பித்தோம். பணத்துக்கு ரத்த தானம் செய்பவர்களை குறைத்தோம். தற்போது பணக் கொடையாளர்கள் நமது மாநிலத்திலேயே இல்லை.

பொதுவாக ரத்த தானம் என்றாலே முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் நினைவுக்கு வருவார். அவர் மேடையில் பேசத்தொடங்கும் முன்பு ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளே என்று தான் தன் பேச்சை ஆரம்பிப்பார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் தான் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு பலர் ரத்த தானம் செய்ததாகவும், பலர் ரத்தம் தன் உடலில் கலந்துள்ளதாலும் அவர்கள் யாரென்று தெரியாததாலும் அப்படி அழைப்பதாகக் கூறினார்.

40-50 வருடங்களுக்கு முன் ரத்த வங்கியில் ரத்தம் கொடுப்பவருக்கு 15 ரூபாய் தருவார்கள். எம்.ஜி.ஆர். திரைப்படம் வெளியிடப்படும் போது அதிக ரத்தம் கிடைக்கும். எப்படி எனில் அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்து திரைப்படம் பார்க்கச் செல்வர். ஒரே படத்தை பல முறை பார்க்கும் பழக்கம் அப்போது இருந்ததால் சென்னையில் இருந்த 4 அரசு குருதி வங்கியில் மாறி மாறி ரத்தம் கொடுத்து பணம் பெற்றுத் திரைப்படம் செல்வர்.

ஆனால் அவர்களுடைய ரத்தத்தில் பிளாஸ்மா தான் அதிகம் இருக்கும். தற்போது தன்னார்வ ரத்த தானக் கொடையாளர்களால் சரியான விகித ரத்தம் கிடைக்கிறது. இந்த 2019-ம் வருட கருத்து “அனைவருக்கும் பத்திரமான ரத்தம்” என்பதே ஆகும். இந்த வருட உலக ரத்தக் கொடையாளர் தினம் ருவாண்டா நாட்டில் கொண்டாடப்படுகிறது.

இந்திய தேசிய ரத்தக் கொடையாளர் தினம் அக்டோபர் 1-ந் தேதி. இத்தினம் 1975 முதல் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய ரத்த வங்கி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகும். இது 1949-ல் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது முழு ரத்தத்திற்கு பதில் தேவையான பகுதி மட்டும் பெறுபவருக்குத் தரப்படுகிறது. பிளேட்டலெட் செல்களை 1 வாரம் வரையிலும், சிவப்பு அணுக்களை 3540 நாட்கள் வரையிலும், பிளாஸ்மா திரவத்தை உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் 1 வருடம் வரையிலும் பயன்படுத்தலாம். ரத்தம் தருவதால் ரத்தக் கொடையாளர்கள் நலமும் இதில் அடங்கும். அவர்கள் தங்கள் உடல் நலத்தை நன்கு பாதுகாப்பார்கள். ரத்தக் கொடைக்குப் பின் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி பின் வரும் 4 பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும். ஹெப்டைடிஸ் பி ஹெப்டைடிஸ் சி, எச்.ஐ.வி. சிபிலிஸ். கொடையாளிக்கு ஏதாவது தொந்தரவு இருந்தாலும் தெரிந்து கூறிவிடுவார்கள். தற்போது 450 மில்லி லிட்டர் ரத்தம் கொடுத்தால் பிளாஸ்மா, சிவப்பணுக்கள், பிளேட்டலெட் என்று பிரித்து 3 பேர் பயனடைகின்றனர். “1 பாட்டில் ரத்தம் 3 பேருக்கு பயன்படும். அனைவரும் இந்தச் சேவையில் மனதார ஈடுபட்டு பல உயிர்களை வாழவைக்கலாம்.

டாக்டர் சா.சோ.சுகுமார்,
முன்னாள் மாநிலத் தலைவர்,
இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளை.

Next Story