சிறப்புக் கட்டுரைகள்

காற்றோடு நம் வாழ்க்கை... + "||" + Wind is our life

காற்றோடு நம் வாழ்க்கை...

காற்றோடு நம் வாழ்க்கை...
கடற்கரை காற்றில் விளையாடுவது சந்தோஷம், காற்றாடி பிடித்து காற்றுக்கு எதிராக ஓடிப் பழகியது சந்தோஷம், வெட்டவெளியில் தென்றலோடு செலவிடும் நேரமெல்லாம் சந்தோஷம்.
எப்போதும் நமக்கு தென்றல்காற்று வேண்டுமென்றால், நிறைய மரங்களை பராமரிக்க வேண்டும். காற்றில் கார்பன் கழிவுகள் சேரக்கூடாது. காற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அதை மாசாக்கினால் யாரும் இங்கே சுகமாக வாழ முடியாது. காற்றின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காக உலக காற்று தினமாக ஜூன் 15-ந் தேதி (நாளை) பின்பற்றப்படுகிறது. காற்று பற்றி நாமும் கொஞ்சம் அறிவோமா...

வாயுக்களின் இயக்கமே காற்று எனப்படுகிறது. இதன் வேகத்தைப் பொறுத்துதான் அதை தென்றல் என்றும், புயலென்றும் வரையறுக்கிறோம். குளிர்ந்த மென்காற்றை தென்றல் என்கிறோம், வேகமான சூறைக்காற்றை புயல்காற்று என்கிறோம்.

காற்று வீசுவதால்தான் நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க முடிகிறது. காற்றுதான் நமது பட்டங்களையும், காற்றாடிகளையும் சுழல வைக்கிறது. எல்லா உயிரினங்களும் சுவாசிக்கவும் காற்று உதவுகிறது.

பூமியைச் சுற்றி காற்று மண்டலம் அமைந்துள்ளது. சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக காற்று மண்டலம் காணப்படுகிறது.

அழுத்த வேறுபாடு காரணமாக வாயுக்கள் இயக்கம் பெறுகிறது. அதையே நாம் காற்று என்கிறோம். அதையே நமது உடல் உணர்கிறது. காற்றானது அதிக அழுத்தம் உள்ள இடங்களிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்தை நோக்கிப் பாய்கிறது.

காற்று மண்டலமானது, 4 அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது. அவை தமிழில் கீழ் வெளி, அடுக்கு வெளி, அயனி வெளி, மேல் வளி என குறிப்பிடப்படுகிறது.

3-வது அடுக்கான அயனிவெளி அடுக்கில்தான் மின் காந்த அலைகளை மறிக்கப்பட்டு, அனுப்பப்படுவதால்தான் நம்மால் வானொலி (ரேடியோ) கேட்க முடிகிறது.

காற்றுகளை 1. வாணிபக் காற்றுகள். 2. பருவக் காற்றுகள். 3. முனைக் காற்றுகள். 4. நிலக் காற்றுகள். 5. கடல் காற்றுகள் என 5 வகையாக பிரிக்கிறார்கள்.

காற்று வீசுவதால், பூமியில் மண் மற்றும் பொருட்களில் அரித்தல் ஏற்படுகிறது. அதேபோல வலுவான காற்றுகளால் லேசான பொருட்கள் கடத்தப்படுகின்றன. காற்றுவீசுவதால் மண் மற்றும் பொருட்களை அடுக்கடுக்காக படிய வைக்கிறது. காற்றின் விளைவால் நடக்கும் இந்த செயல்களால் பூமியிலும், உயிர்களின் வாழ்க்கை நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

காற்று அழுத்தம் மாறுபாட்டின் காரணமாக சமைப்பது உள்பட பல்வேறு செயல்களை செய்து கொள்ள முடியும். குக்கர் என்பது காற்றழுத்த வேறுபாட்டின் காரணமாக சீக்கிரமாக சமைக்க உதவும் சாதனமாகும்.

காற்றழுத்தம் இல்லாத இடம் வெற்றிடம் எனப்படுகிறது. இந்த வெற்றிடம்கூட 17 வகைகளாக விஞ்ஞானத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இரு பொருட்களுக்கு இடையேஉள்ள காற்றை உறிஞ்சி அகற்றிவிட்டால் அந்த இருபொருட்களும் மிக இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காற்று வீசுதல் மற்றும் வெப்பநிலை காரணமாகவே வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. காற்றின் இயக்கத்தைக் கொண்டு வானிலையை கணித்துச் சொல்ல முடியும்.

காற்று மண்டல அழுத்தம் 76 செ.மீ.க்குக் கீழ் சென்றால் மழையும் புயலும் ஏற்படும். மேகங்களுக்கு இடையே காற்றுவெளி மின்சாரம் கடத்தப்படுவதால் கண்கூசும் ஒளியும் (மின்னல்), கடும் இரைச்சலும் (இடி) ஏற்படுகிறது.

காற்று வீசுவதில் இருந்து மின்னாற்றல் பெறப்படுகிறது. 2018 வரை உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் மூலம் 597 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகில் காற்றாலை மூலம் அதிக மின் உற்பத்தி செய்யும் நாடு சீனாவாகும். 200 ஜிகாவாட்டிற்கு அதிகமான மின்உற்பத்தி சீனாவில் காற்றாலை மூலம் நிகழ்கிறது. இந்தியாவில் 35 ஜிகாவாட் மின் உற்பத்தி காற்றலை மூலம் நடக்கிறது.

காற்று மாசுபடாமல் பார்த்துக் கொள்வது நமது வாழ்க்கைச் சூழலுக்கு நல்லதாகும். அதற்கு சிறந்த வழி மரங்களின் எண்ணிக்கை குறையாமல் பராமரிப்பதுதான். வாகனங்களை குறைவாக பயன்படுத்துவதும் காற்று மாசை குறைக்க உதவும். கழிவுகளையும் எரிக்கக்கூடாது. காற்று மாசை குறைத்து நல்ல காற்றை சுவாசிப்போம்.